ஒரு செயலை செய்யக் கோரி அல்லது ஒரு செயலை செய்யாமல் இருக்கக் கோரி அல்லது செய்யப்படவிருக்கும் சில செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகளை குறித்து அறிவுறுத்தி, ஒரு நபர் மற்றொரு நபருக்கு எழுத்து மூலமாக கொடுக்கும் எச்சரிக்கை அல்லது தகவல் தான் "அறிவிப்பு" எனப்படுகிறது.
நாம் தாக்கல் செய்யப்போகும் வழக்கு எந்த வகையான வழக்காக இருந்தாலும், அதற்கு முன்பு மறு தரப்பினருக்கு வழக்கு மூலம் (Cause of Action) குறித்த அறிவிப்பு ஒன்றை கொடுப்பது நல்லது. ஏனென்றால் அறிவிப்பு கிடைக்க பெற்றவுடன் மறு தரப்பினர் சமாதானத்திற்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. பணிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மறு தரப்பினர் தனது நிலையை உணர்ந்து, அதை மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பதே அறிவிப்பின் நோக்கமாகும்.
அறிவிப்பு ஒன்றை சம்பந்தப்பட்ட தரப்பினர் அல்லது அவரது முகவர் (Agent) அல்லது அவரது வழக்கறிஞர் கொடுக்கலாம்.
- அறிவிப்பு இரண்டு விதம் உள்ளது.
1. சட்டப்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு (Statutory Notice (or) Mandatory Notice)
2. கடப்பாட்டிற்குரிய அறிவிப்பு
(Obligatory Notice)
இதில் சட்டப்படியிலான அறிவிப்பை கொடுக்க தவறினால், சம்மந்தப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதற்கு அது காரணமாக அமையலாம். ஆனால் கடப்பாட்டிற்குரிய அறிவிப்பை கொடுக்காமலும் வழக்கு தொடரலாம். இதில் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற அபாயம் இல்லை. அதாவது கடப்பாட்டிற்குரிய அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பது தரப்பினரின் விருப்பத்தை பொறுத்தது. இந்த அறிவிப்பை தரப்பினர் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்.
- சட்டப்படியான அறிவிப்பிற்கு எடுத்துக்காட்டாக கீழ்க்கண்டவற்றை கூறலாம்.
1. அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முன் உ. ந. மு. ச பிரிவு 80 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு
2. சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 106 வது பிரிவின்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு
3. இரயில்வே சட்டத்தின் பிரிவு 106 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு
ஆகியன சட்டப்படி கட்டாயம் கொடுக்க வேண்டிய அறிவிப்புகள் ஆகும். இந்த அறிவிப்பு கொடுக்கப்படவில்லை என்றால் வழக்கே இல்லை என்று சட்டம் கூறுகிறது.
- கடப்பாட்டிற்குரிய அறிவிப்புக்கு எடுத்துக்காட்டாக கீழ்க்கண்டவற்றை கூறலாம்.
1. கடனுறுதிச் சீட்டின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட கடன் தொகையை திரும்ப பெறுவதற்காக கொடுக்கப்படும் அறிவிப்பு
2. சரக்குகளின் விலைக்காக கொடுக்கப்படும் அறிவிப்பு
- அறிவிப்பின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும்? Contents of Notice :
இப்படித்தான் அறிவிப்பு இருக்க வேண்டும் என்று கடுமையான விதிகளோ, படிவமோ ஏதுமில்லை. பொதுவாக நாம் தாக்கல் செய்ய இருக்கும் வழக்கின் பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒரு அறிவிப்பை தயாரிக்கலாம். எனினும் குறைந்தபட்சம் பின்வரும் விவரங்கள் ஒரு அறிவிப்பில் இருக்க வேண்டும்.
1. அறிவிப்பு தேதி
2. அறிவிப்பை யார் கொடுக்கிறாரோ அவரது பெயர் மற்றும் முகவரி
3. அறிவிப்பு யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவரது பெயர் மற்றும் முகவரி
4. பிரச்சினை குறித்த விபரம் (சுருக்கமாக)
5. அறிவிப்பிற்கான வழக்கு மூலம்
6. கோரப்படும் பரிகாரம்
7. பரிகாரத்தை நிறைவேற்ற தவறினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விபரம்
8. எவ்வளவு நாட்களுக்குள் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற விபரம்
9. அறிவிப்பு ஒரு வழக்கறிஞர் மூலமாக கொடுக்கப்பட்டால் அவரது கையொப்பம்
10. அறிவிப்பின் தலைப்பில் தேதி குறிப்பிடப்படாவிட்டால், கடைசியில் இடமும், தேதி விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
- அறிவிப்பு அனுப்பும் முறை (Service of Notice) :
யாருக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டுமோ, அவர் வசம் அதனை நேர்முகமாக கொடுக்கலாம். இல்லையென்றால் பதிவுத் தபாலில் அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment