யாரெல்லாம் வாரிசு?
வாரிசுகள் யார் என்பதை தனியாக வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா? எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த கட்டுரை. ஒருவருக்குப் பிறகு அவரது பிள்ளைகள், மனைவி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்கள் வாரிசாக இருக்கலாம்.
இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? ஆனால் யாரெல்லாம் வாரிசாக முடியாது அல்லது வாரிசு என்பதற்கான சட்ட அனுமதிகள் ஏன் வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் வாரிசு சான்றிதழின் அவசியம் புரிந்து விடும்.
ஏன் வாரிசுச் சான்றிதழ் வேண்டும்?
அரசுப் பணியிலிருந்து ஒருவர் இறந்து விடுகிறார். முன்னுரிமை அடிப்படையில் அந்த வேலைக்கு அவரது மகனோ / மகளோ வாரிசு என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கி அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இப்போது அந்த சொத்தை வாரிசுகள் பெற வேண்டும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவருக்கு இவர்தான் வாரிசு என்கிற வாய்மொழி உறுதியின் மூலமோ அல்லது வழக்கமான குடும்ப ஆவணங்களின் மூலமோ மட்டும் உறுதிபடுத்த முடியாது.
சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவைப் படுகிறது. நேரடியாக இன்னாருக்கு இவர்தான் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும், சில சிக்கலான நிலைமைகளில் சொத்துகளை / உரிமையை அனுபவிப்பதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.
இந்த வாரிசு சான்றிதழ் வட்டாட்சியர் மூலமாக வாங்க வேண்டும். வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை அவர் வழங்குவார்.
ஆனால் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கு நீதிமன்றம் வரை செல்வதற்கான காரணங்களும் உள்ளன. எந்தெந்த சூழ்நிலைகளில் நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் தேவையாக இருக்கிறது
ஒரு ஆண் இறந்துவிட்டார் அல்லது காணாமல் போனவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்றால் அவர் மூலமான சொத்துக்கள் மற்றும் பண பலன்களை பெறுவதற்கு சட்டபூர்வமான சான்றிதழ் தேவை. தங்களது சொத்துகள் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்துகொள்ளும் வாரிசுகள் அதன் மீதான உரிமை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை
யாரெல்லாம் வாரிசுகள்?
ஒரு ஆண் இறந்துவிட்டால் அவரது அப்பா, அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வாரிசுகளாக கருதப்படுவார்கள். இறந்தவரின் இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இருப்பின் அந்த குழந்தைகளும் வாரிசாக கருதப்படுவர். இந்த வகையில் நேரடி வாரிசுகள் இல்லாதவர்களுக்கு அவர்களது நெருங்கிய ரத்த உறவுமுறை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாரிசு உரிமை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.
இறங்குரிமை சான்றிதழ்
இறந்தவரின் பெயரிலுள்ள முதலீடுகள், வங்கி சேமிப்பு, மற்றும் பண பலன்களை வங்கி அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவு பெறாத வாரிசுகளுக்கு அவற்றை உரிமை மாற்ற தயங்குவார்கள்.
ஒருவருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கும் பட்சத்தில் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் கொடுக்க முடியாது. அல்லது பிற்காலத்தில் வேறு நபர்கள் உரிமை கோரி வந்தால் என்ன செய்வது என்கிற சந்தேகமும் நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட வாரிசுகள் நீதிமன்றத்தை அணுகி சட்டபூர்வ உரிமை வாங்கி வருவது இறங்குரிமை சான்றிதழ் எனப்படுகிறது .
இதனைப் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் இறந்தவருடைய வாரிசுகள் அனைவரும் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரிடம் பண பலன்களை அல்லது வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
நடைமுறை என்ன?
இறந்தவரின் வாரிசுகள் நேரடியாக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் வாங்கலாம். இதற்கு சட்டபூர்வமான குடும்ப ஆவணங்களே சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.
குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.
குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார். போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.
No comments:
Post a Comment