Saturday, April 14, 2018

000008. LAND LEASE சட்டம்

தனியாருக்கு சொந்தமில்லாத அரசு வசமுள்ள நிலங்கள், அரசு விலைக்கு வாங்கிய நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை தற்காலிக அனுபவத்திற்கென குறிப்பிட்ட கால வரையரைக்கு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்கப்படுவதே “குத்தகை” எனப்படும்.

வேளாண்மை அல்லது வேளாண்மை அல்லாத பிற பயன்பாட்டுக்கென இருவகையாக பிரித்து நிலம் குத்தகையில் வழங்கப்படுகிறது.

1) வருவாய் நிலை ஆணை எண்.15 (அ)ன்படி வேளாண்மை நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது.
2) வருவாய் நிலை ஆணை எண் 24 (அ) ன் படி வேளாண்மை அல்லாத பிற பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது.

குத்தகைகோரும் நிலத்தின் பயன்பாட்டு திட்டம் மற்றும் அதன் தன்மைக் கேற்ப குறுகிய காலமான 3 முதல் 10 ஆண்டுகளுக்கும் நீண்ட கால குத்தகை 30 ஆண்டுகளுக்கும் மிகாமலும் வழங்கப்படுகிறது.

வருவாய் நிலையாணை 15 அ ன்படி கீழ்கண்ட பயன்பாட்டிற்கென அரசு நிலங்களை குத்தகைக்கு வழங்கிடலாம்.

1)  புல் அல்லது இதர தீவனப்பயிர் விளைவிக்க
2)  பூந்தோட்டம் அமைத்திட
3)  சவுக்கு வளர்த்திட
4) தோட்ட விளைபொருள் பயிர் செய்திட
5) நெல், பருப்பு வகைகள், உணவு தான்யம், புகையிலை, முந்திரி, நிலக்கடலை போன்ற வாணிப பயிர்கள் விளைவித்திட வருவாய் நிலை ஆணை 15 அ(3)
வருவாய் நிலை ஆணை 24 (அ)ன் படி கீழ்கண்ட பயன்பாட்டிற்கென அரசு நிலங்களை குத்தகைக்கு  வழங்கிடலாம்.
1) கூடாரம் அல்லது சங்க கட்டிடத்துடன் அல்லது இவை இல்லாமலேயே பயன்படுத்தும், பொழுது போக்கிற்கான உபயோகங்கள்.
2) நிலையான அல்லது தற்காலிக பாலங்கள்,மதகுகள் அமைத்திட
3)  வாணிப கடைகள் அமைத்திட
4)  உலவும் திரைப்படம், சர்க்கஸ், நாடக கம்பெனி ஆகியவற்றிற்கு தற்காலிக அனுபவத்தில் அளித்தல் . வருவாய் நிலை ஆணை 24 அ (3)
இது தவிர பொதுப்பணித்துறை நிலங்கள் வருவாய்த்துறையின் அனுமதி பெற்ற பின்னரே பொதுப்பணித்துறை மூலம் குத்தகைக்கு வழங்கப்படும்.வருவாய் நிலையாணையில்  கண்ட வழி முறைகள் இதற்கும் பின்பற்றப்பட வேண்டும். (பொதுப்பணித்துறை நடைமுறை விதி 172(1))
கீழ்கண்ட அரசு நிலங்களில் குத்தகை தடை செய்யப்பட்டுள்ளது.

ஓடை, குளம்,வாய்க்கால் போன்ற நீர் நிலை புறம்போக்குகள்

                   (அரசாணை எண்.41 வருவாய்த்துறை நாள்:20.1.87)

மேய்ச்சல் தரை, மந்தைவெளி

                  (அரசாணை எண்.959 வருவாய்த்துறை நாள்:23.6.1987)

மயானம், இடுகாடு

                 (அரசாணை எண்.116 வருவாய்த்துறை நாள்:20.1.88)
ஆண்டுதோறும் நில மதிப்பு கூடி வருவதால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை தொகையை அன்றைய நடப்பு சந்தை மதிப்புக்கேற்ப நிர்ணயம் செய்து வரவேண்டும். குத்தகை தொகை நிர்ணயம் செய்திட வணிகமற்ற நோக்கத்திற்கு நில மதிப்பில்  1 சதவிகிதமும், குத்தகை கோரும் நிலம் வணிக நோக்கில் இருந்தால் நில மதிப்பில் 2 சதவிகிதமும் குத்தகை தொகையாக நிர்ணயம் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குத்தகை தொகைக்கு ஊராட்சி சட்டம் 1958 பிரிவு 115ன்படி தலவரி மற்றும் தலமேல் வரி முதலியவற்றையும் வசூலிக்க வேண்டும். வணிக நோக்கத்திற்கு தலவரி 2 சதவிகிதமும் தலமேல்வரி 10 சதவிகிதமும் குத்தகை தொகை 2 சதவிகிதமும் சேர்த்து மொத்தம் 14 சதவிகிதம் வணிகமற்ற நோக்கத்திற்கு தலவரி, ஒரு சதவிகிதமும் தலமேல் வரி 5 சதவிகிதமும், குத்தகை தொகை ஒரு சதவிகிதமும் சேர்த்து மொத்தம் 7 சதவிகிதமும் நிர்ணயிக்கப்பட வேண்டும் (அரசாணை நிலை எண்.460 வருவாய்த்துறை (நி.மு.உ) நாள்:4.6.98.
வருவாய் நிலை ஆணை விதிகளின்படி குத்தகை பத்திரங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். எனினும் இவற்றிற்கு இந்திய முத்திரைத் தாள் சட்டத்தின் கீழ் விதிவிலக்கு உண்டு.
எந்த காரணத்திற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டதோ அது முறைப்படுத்தப்படாமல் விதி மீறல் ஏதேனும் இருக்குமானால் அவ்வினங்களை கண்டறிந்து அவற்றை மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உப்பள குத்தகை:

அரசு உப்பள நிலங்கள், உப்பு தயாரிக்கும் பொருட்டு 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகின்றன. இதில் பெருமளவிலான நிலங்கள் அரசு நிறுவனமான தமிழ்நாடு உப்பு கழகம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். தனி நபருக்கு 6 ஹெக்டேர் நிலமும் கூட்டுறவு சங்கங்களுக்கு 40 ஹெக்டேர் நிலமும் வழங்கப்படும். அரசாணை எண்.208 வருவாய்த்துறை நாள் 12.3.93ன்படி உப்பள நிலங்களுக்கான குத்தகை தொகை மற்றும் ராயல்டி தொகை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1)  ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு குத்தகை தொகை ரூ.60/-
2)  ராயல்டி தொகை ஆண்டொன்றுக்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு மெட்ரிக் டன் உப்புக்கு ரூ.1 வீதம் குறைந்தபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 25 வீதம்.
இதனைத் தவிர்த்து குத்தகை தொகையின் பேரில் அவ்வப்போது அரசால் நிர்ணயிக்கப்படும் தலவரி மற்றும் தலமேல்வரியும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட வேண்டும்.

மீன்வளக் குத்தகை:

இறால் / மீன் வளர்ப்புக்கு தனியார் நிறுவனங்களுக்கு உவர் நீர் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குத்தகையில் வழங்கப்பட்டு வருகின்றன. இறால் வளர்ப்புக்காக நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கு வருவாய்  வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அதிகாரம் கிடையாது. மாவட்ட ஆட்சியர் நில நிர்வாக ஆணையர் மூலம் அரசுக்கு (வருவாய்த்துறை) அறிக்கை அனுப்ப வேண்டும்.
குத்தகைக்கு அனுப்ப வேண்டிய இயல்பான விவரங்களுடன் கீழ்க்காணும் கூடுதல் ஆவணங்களுடன் கருத்துருக்கள் அனுப்பப்படவேண்டும்.
1)  தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் சான்று
2)  மீன்துறை துணை இயக்குநரின் நிலத்தகுதி சான்று
3)  விவசாய நிலங்கள்பாதிக்கப்படாது என்பதற்கான மாவட்ட வேளாண் அதிகாரியின் தடையில்லா சான்று
4)  நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலம் கோருபவரின் கையிருப்பு நிலங்கள் காணப்படுகிறதா என்பதற்கான சான்று உதவி ஆணையரிடமிருந்து பெற வேண்டும்.
(அரசாணை நிலை எண்.198 வருவாய்த்துறை நாள்:17.2.95)
அரசு நிலங்களை குத்தகைக்கு கொடுப்பதற்கு எந்தெந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவோ அவற்றை  இறால் பண்ணை அமைத்திட நிலங்களை குத்தகைக்கு அளிப்பதிலும் பின்பற்றப்பட வேண்டும்.

No comments:

Post a Comment