Saturday, April 21, 2018

000033. கலப்பு திருமணம் பற்றி சட்டம் சொல்வது என்ன?

கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண் அல்லது ஆணின் ஜாதி மாறுபடுமா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு உள்ள அரசு சலுகைகளை அவரை மணந்து கொண்ட, பிற ஜாதியை சேர்ந்தவர் அனுபவிக்க முடியுமா?

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள்?

கலப்பு திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, குடும்ப சொத்தில் உள்ள உரிமைகள் பாதிக்கப்படுமா?

இவற்றை பற்றியெல்லாம் சட்டம் என்ன சொல்கிறது?

.....................................................................

எந்த ஜாதி அல்லது எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பெரும்பாலான சட்டங்கள் ஒன்றாகவே இருக்கும். 

உதாரணமாக 

குடியுரிமை சட்டம் (Citizenship Act) 
வருமானவரிச் சட்டம் (Income Tax Act) 
சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of property Act) 
இந்திய ஒப்பந்தச் சட்டம் (Contract Act) 
இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) 
இந்திய சாட்சிய சட்டம் (Evidence Act) 

மேலும் அவரவர் சார்ந்துள்ள மதம் அல்லது சமையத்திற்கு ஏற்றார் போலும் சில சட்டங்கள் உள்ளது. 

வாரிசுரிமை சட்டம் (Succession Act) 
திருமண சட்டங்கள் (Marriage Act) 

(கவனிக்கவும் - ஜாதி அல்ல, மதம்) 

திருமணத்தை பொறுத்தவரை இந்துக்கள் என்றால் இந்து திருமணச் சட்டமும் (The Hindu Marriage Act) 

கிறிஸ்தவர்கள் என்றால் சிறப்பு திருமணச் சட்டமும் ( Special Marriage Act) 

முஸ்லீம்கள் என்றால் இஸ்லாமிய சட்டங்களும் (Mohammed Law) பொருந்தும். 

அதேபோல் குடும்ப சொத்தில் வாரிசுரிமை கோருவதற்கு 

இந்து என்றால், இந்து வாரிசுரிமை சட்டமும் (The Hindu Succession Act) 

கிறிஸ்தவர்கள் என்றால், இந்திய வாரிசுரிமை சட்டமும் (Indian Succession Act) 

 முஸ்லீம்கள் என்றால், இஸ்லாமிய சட்டங்களும் பொருந்தும். 

இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் என நம் நாட்டு மக்கள் பின்பற்றும் மதங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன. ஆனால் ஜாதி எனப்படும் குலம், சமுதாயங்கள் ஏராளமாக உள்ளது. ஒரே மதத்திலேயே பல்வகை ஜாதிகள் எனப்படும் பிரிவுகள் உள்ளன. நம்முடைய சட்டங்களில் மக்கள் பின்பற்றும் மதங்களை பற்றித்தான் கூறப்பட்டுள்ளதே தவிர, ஜாதியை பற்றி எதுவும் கூறவில்லை. எனவே பின்பற்றப்படும் மதத்தை பொறுத்து மட்டுமே சட்டங்கள் மாறுமே தவிர, ஜாதியை பொறுத்து எதுவும் மாறாது. 

கலப்பு திருமணத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். 

1. ஒரே மதத்தை சேர்ந்த வேறுபட்ட இரண்டு ஜாதியினர் செய்து கொள்ளும் திருமணம் 

2. ஒரு மதத்தை சார்ந்தவர் மற்றொரு மதத்தை சார்ந்தவரை செய்து கொள்ளும் திருமணம் 

மேலே கூறப்பட்டுள்ள முதல் வகையில் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்படாது. மதக் கோட்பாடுகளின்படி திருமணம் செய்து கொள்வார்கள். திருமணத்திற்கு முன்னும், பின்னும் ஒரே மதம் என்பதால் சொத்துரிமை, திருமணம் பற்றிய சட்டங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவருக்கு அரசு கொடுத்துள்ள சலுகைகளை அவரை மணந்து கொண்டவர்களும், அவர்களது குழந்தைகளும் அனுபவிக்க முடியுமா? என்ற கேள்வியும், குழந்தைகள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழும். 

இரண்டாவது வகை கலப்பு திருமணத்தில், ஒரு மதத்தை சார்ந்தவர் வேறு மதத்தை சார்ந்த ஒருவரை கலப்பு திருமணம் செய்து கொள்ளும் போது, யாராவது ஒருவர் இன்னொருவரின் மதத்திற்கு மாறி, அந்த மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ளக்கூடும். அப்போதும் இருவரும் ஒரே மதமாக இருப்பதால், அந்த மதத்திற்குரிய சட்டங்களின்படி திருமணம் மற்றும் வாரிசுரிமை சட்டங்கள் பொருந்தும். ஆனால் இங்கேயும் குழந்தைகள் என்ன ஜாதி என்ற கேள்வி எழும். 

இந்த ஜாதி குறித்த கேள்விகள் கொண்ட வழக்கு பம்பாய் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

ராஜேந்திர ஸ்ரீவஸ்தவா Vs மகாராஷ்டிரா மாநில அரசு (2010-112-Com LR - 762) என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. 

1. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினரை சேர்ந்த ஒரு பெண், உயர் ஜாதியை சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்து கொள்வதால், அவள் பிறந்த போது இருந்த ஜாதியில் திருமணத்தால் எந்த மாற்றமும் இருக்காது. 

(பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் "ரமேஷ்பாய் தபாய் நாயக் Vs குஜராத் மாநில அரசு மற்றும் பலர் " என்ற வழக்கில் உறுதிப்படுத்தி உள்ளது) 

2. உயர்ந்த அல்லது முற்பட்ட ஜாதியை சேர்ந்த ஒரு பெண், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒரு ஆணை, திருமணம் செய்து கொண்டால், தாழ்த்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு (அதாவது அவளது கணவனின் வகுப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை) கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை அவள் அனுபவிக்கலாமா என்ற கேள்விக்கு "அவ்வாறு அனுபவிக்க முடியாது" என்று விடை கூறியுள்ளது உச்சநீதிமன்றம். 

( The Hobn'ble SC of india has held that a candidate who had the advantageous start in life being born in a forward community and had much of advantageous life but is transplanted in backward class by adoption, marriage or conversation does not become eligible to the benefits or reservation) 

3. ஒரு கலப்பு திருமணம் அல்லது பழங்குடி இனம் மற்றும் அது அல்லாத பிரிவை சார்ந்த இருவருக்கும் நடைபெற்ற திருமணத்தில், அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தகப்பனாரின் ஜாதியை பெறுவார்கள் என்று அனுமானிக்கப்படுகிறது. 

உயர்ந்த ஜாதி ஆணை திருமணம் செய்து கொண்ட ஒரு பழங்குடி இனப் பெண்ணுக்கு பிறந்த குழந்தைகள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தில் " ரமேஷ்பாய் தபாய் நாயக்" என்ற வழக்கில் எழுந்தபோது, உச்சநீதிமன்றம், அந்த குழந்தைகள் தகப்பனாரின் ஜாதியை பெறுவார்கள் என்று தீர்ப்பு கூறியது. 

அதுபற்றி மேலும் கூறுகையில், உச்சநீதிமன்றம், இந்த அனுமானம் இறுதியானது என்றோ திருத்த முடியாது என்றோ கூற முடியாது. அத்தகைய திருமணத்தில் பிறந்த குழந்தைகள் நினைத்தால், தாங்கள் அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தங்கள் தாயாரால் தான் வளர்க்கப்பட்டோம் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் அவர்களது தந்தை சார்ந்துள்ள உயர் ஜாதியினராக கருதப்படுவதால் அவர்களுக்கு எந்தவித நன்மையுமில்லாததோடு பலவித இழப்புகளுக்கும் ஆளாக நேரிட்டது என்று கருதினால் மேற்கண்டவாறு ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் 

(But by no means the presumption is conclusive or irrefutable and it is open to the child of such marriage to lead evidence to show that he / she was brought up by the mother who belonged to the Schedule Caste / Schedule Tribe. By virtue of being the son of a forward caste father he did not have any advantageous start in life but on the contrary suffered the deprivations indignities, humilities and handicaps like any other member of the community to which his / her mother belonged) 

ஏற்கனவே கூறியுள்ளபடி குடும்ப சொத்துகளுக்கான வாரிசுரிமையை பொறுத்தவரை அவரவர் சார்ந்துள்ள மதத்தை ஏற்ப இந்து வாரிசுரிமை சட்டமோ அல்லது இந்திய வாரிசுரிமை சட்டமோ பொருந்தும். 

இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் வேறு மதத்தை சேர்ந்தவரை கலப்புத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் இந்து மதத்தில் இல்லாத காரணத்தினால் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கான ஒதுக்கீடு போன்றவற்றை கோர இயலாது. அவ்வாறு மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் எந்த மதமாக இருந்தாலும், மேற்படி சலுகைகளை பெற அவர்கள் இந்துவாக இருந்தால் மட்டுமே முடியும்.

No comments:

Post a Comment