தமிழகத்தில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து சம்பாதித்து வாழ முடியாமலும் உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது சிரமப்படும் முதியோர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1.4.1962 முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” என்ற ஒரு திட்டத்தினை அரசாணை எண்.73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62ன் படி அரசு துவக்கியது. இத்திட்டம் ஆரம்பித்த காலத்தில் மாதம் ரூ.20/- வீதம் உதவித்தொகை வழங்கிட அனுமதித்து பின்வருமாறு படிப்படியாக உயர்த்தி தற்போது மாதம் ரூ.200/- வழங்கப்பட்டு வருகிறது.
1.4.62 முதல் 31.3.79 முடிய ரூ.20/- (அரசாணை எண் 73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62)
1.4.79 முதல் 31.3.82 முடிய ரூ.25/- (அரசாணை எண் 805 நிதி (ஒய்வு) துறை நாள்:11.6.79)
1.4.82 முதல் 30.4.89 முடிய ரூ.35/- (அரசாணை எண்1412 சமூக நலத்துறை நாள்:13.5.82)
1.5.89 முதல் 31.1.92 முடிய ரூ.50/- (அரசாணை எண்944 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை நாள்:8.5.89)
1.2.92 முதல் 30.6.96 முடிய ரூ.75/- (அரசாணை எண் 255 சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறை நாள்:1.4.92)
1.7.96 முதல் 31.3.98 முடிய ரூ.100/- (அரசாணை எண் 187 சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள்.4.7.96)
1.4.98 முதல் 31.3.2000 முடிய ரூ.150/- (அரசாணை எண் 67 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டதுறை நாள்:21.4.98)
1.4.2000 முதல் இன்றுவரை ரூ.200/- (அரசாணை எண் 86 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டதுறை நாள்:2.6.2000)
இத்திட்டத்தினைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மட்டுமின்றி
1) ஆதரவற்ற விவசாயக் கூலிகள்
2) உடல் ஊனமுற்றோர்
3) ஆதரவற்ற விதவைகள்
4) கணவனால் கைவிடப்பட்ட மனைவியர்
ஆகியோருக்கும் இத்திட்டத்தினை தமிழக அரசு பின்னர் விரிவு படுத்தியது. இவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.200/- தவிர்த்து மாதந்தோறும் அரிசி 4 கிலோவும் (அரசாணை பல்வகை எண் 771 சமூக நலத்துறை நாள் :6.10.80) பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இலவசமாக வேஷ்டி / சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. (அரசாணை பல்வகை எண் 995 நிதி (ஓய்வூதியம்) துறை நாள்:18.7.79).
தற்போது முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கான நிதியுதவி மத்திய அரசினால் அளிக்கப்பெற்று தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம் (National Old Age Pension) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் வயது மூப்பில் அதிக வயதுடையவர்களுக்கு (இந்த எண்ணிக்கை அவ்வப்போது மத்திய அரசின் ஒதுக்கீட்டிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும். அன்ன பூர்ணா திட்டத்தின் - கீழ் மத்திய அரசு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறது.
திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள்
1) முதியோர் உதவித்தொகை திட்டம்:
1) 65 வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் தகுதியுடையவர்கள்
ஆதரவற்றவர்கள் என்பவர்கள்:
அ) எவ்வித வருமானமும் இல்லாதவர்கள், ஒருவேலை உணவுக்கு கூட வழி இல்லாதவர்கள்.
ஆ) 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மகன் / 18 வயதுக்கு மேற்பட்ட மகன் வழி பேரன் இல்லாதவர்கள்.
இ) 55 வயதும் அதற்கு உட்பட்ட வயதுடைய மனைவி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். (அரசாணை எண் 1184 நிதி (ஓய்வு) துறை நாள்:29.9.62).
2)முதியோர் உதவித்தொகை கோருபவர்கள் பிச்சை எடுக்கக்கூடாது. ஆனால் எப்போதாவது யாராவது கொடுக்கும் ஒருவேளை உணவை உதவியாகப் பிறரிடம் பெறுபவர்கள் பிச்சை எடுப்பவர்களாகக் கருதக்கூடாது.
3) நிரந்தா குடியிருப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
4) இவர்கள் உறவினர்கள் மட்டுமின்றி வேறு யாருடைய பாதுகாப்பிலும், ஆதரவிலும் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
5) அரசாணை எண் 2500 சமூக நலத்துறை நாள் :9.11.84 ன் படி அதிக பட்சமாக ரூ.1000/-வரை மதிப்புள்ள கூரை அல்லது ஒட்டுவீடு வைத்திருப்பவர்கள் பிற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசாணை (நிலை) எண் 1000 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை நாள்:4.7.2002ன் படி அதிக பட்சமாக ரூ.5000/-வரை மதிப்புள்ள நிலத்தின் மதிப்புடன் கூரை வேய்ந்த அல்லது கல்நார் வேய்ந்த வீடு வைத்திருப்பவர்கள் முதியோர் உதவித்தொகைப் பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6) கணவன் அல்லது மனைவி 65வயது அல்லது அதற்கு றேம்பட்டு வயது முதிர்ந்த நிலையில் வேறு உறவினர் ஆதரவின்றி ஆதரவற்றவர்களாக இருந்தால் கணவன் /மனைவி இருவருமே உதவித் தொகைப்பெற தகுதியுடையவர்கள்.
7) இவர்கள் மற்றவர்களிடம் சிறிய வேலை செய்தால் அதனால் பெறக் கூடிய கூலியின் மதிப்பு ஒரு வேளை உணவுக்கு மேல் கிடைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது.
8) ஆதரவற்ற கண்பார்வையற்றவர்களுக்கு, உடல் ஊனமுற்றோர் இனத்தில் வயது வரம்பில்லாமல் முதியோர் உதவித் தொகை வழங்கலாம்.
9) 18 வயதுக்கு உட்பட்ட ஆண்மகனோ அல்லது மகன் வயிற்று பேரனோ இருந்தால் அவன் 18 வயதினை அடையும் வரை உதவித்தொகை வழங்கிடலாம். 18 வயது அடைந்தவுடன் உதவித்தொகை நிறுத்தப்பட வேண்டும். இந்த நிபந்தனையுடன் உதவித்தொகை அனுமதிக்கும் போது, மகன் அல்லது மகன் வயிற்று பேரன் 18 வயதினை அடையும். ஆண்டு / மாதம் குறிப்பிட்டு காண்பிக்கும் நினைவூட்டு பதிவேடு ஒன்று பராமரிக்கப்பட வேண்டும். பிரதி மாதம் முதியோர் உதவித்தொகை அனுப்பும் போது இப்பதிவேட்டின்படி முதிர்வுறும் இனம் உள்ளதா என்பதை கண்டறிந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
1962-ல் துவக்கப்பட்ட இத்திட்டத்தின் ஒப்புதல் வழங்கும் அதிகாரிகளாக வருவாய் கோட்டாட்சியர்களே இருந்து வந்தனர். அரசாணை எம்.எஸ் எண்.1080 வருவாய்த் துறை நாள்:10.7.89ன் படி நலிவடைந்தோர் நல்வாழ்வு திட்ட தனி வட்டாட்சியர்கள் ஒப்புதல் வழங்கும் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
1.முதியோர் உதவித்தொகை படிவம் எண். ஐ ல் விண்ணப்பிக்க வேண்டும்.
2.விண்ணப்பத்தில் முத்திரை கட்டண வில்லை எதுவும் ஒட்ட தேவையில்லை.
3.மனுதாரரின் வயதுக்கு ஆதாரமாக வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய அல்லது அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் வயது குறித்தான சான்று பெறலாம்.(அரசாணை எண்.1726 நிதி (ஓய்வு) துறை நாள்:18.11.1969)
4.விண்ணப்பதாரர் மனநிலை பாதிக்கப்பட்டு புத்தி சுவாதீனமுடையவராக இருப்பின் அவரது பாதுகாவலரே அவருக்காக விண்ணப்பிக்கலாம். இது போன்ற இனங்களில் வழங்கப்படும் உதவித்தொகை பாதுகாவலரிடம் உரிய உறுதிமொழியினைப் பெற்றுக்கொண்டு அவரது பெயருக்கே உதவித் தொகையினை அனுப்பிடலாம்.
5.இதே போன்று ஆதரவற்ற நிலையில் அனாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள் போன்றவற்றில் தங்கியுள்ள தகுதியான முதியோர்களுக்கான உதவித்தொகையினை அவர்களது விருப்பத்தின் பேரில் அந்த நிறுவனத்திற்கே அனுப்பிடலாம்.
விசாரணை செய்யும் முறை:
1)சரக வருவாய் ஆய்வர்களே விண்ணப்பதாரரை நேரடியாக பார்வையிட்டு விசாரணை செய்து வாக்குமூலம் பெற வேண்டும்.
2)மனுதாரரின் வயது குறித்து வாக்காளர் பட்டியல் / குடும்ப அட்டை ஆகியவற்றுடன் சரிபார்க்கப்பட வேண்டும்.
3)மனுதாரர் ஆதரவற்றவர் என்பதற்கு விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
4)சரக வருவாய் ஆய்வர்கள் தங்களது அறிக்கையில் விண்ணப்பதாரரின் தகுதி, வருமானம், சொத்து விபரம் ஆகியவை குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும்.
5)விண்ணப்பம் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் விசாரணை முடித்து இறுதி ஆணை பிறப்பித்திட காலக்கெடு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை அனுமதி:
1) உரிய விசாராணைக்குப் பின்னர் வட்டாட்சியர் முதியோர் உதவித்தொகை வழங்கிட உத்தரவிட்ட அதே மாதத்தில் முதல் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
(அரசாணை எண் 586 சமூக நலத்துறை நாள்:10.8.81)
2) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விண்ணப்பதாரருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். இது குறித்து விண்ணப்பதாரர் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம். மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதி முடிவாகும்.
3) வட்டாட்சியர் உத்தரவிட்டவுடன் மனுதாரர் மூன்று புகைப்பட நகல்கள் எடுத்து வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும். உத்தரவில் புகைப்படம் ஒட்டப்பெற்று வட்டாட்சியரால் அத்தாட்சி செய்யப்பட்டு ஒரு நகல் மனுதாரருக்கும் ஒரு நகல் கிராம நிர்வாக அலுவலருக்கும் அனுப்பப்பட வேண்டும். ஒரு போட்டோ நகல் வட்டாட்சியர் அலுவலக பதிவேட்டில் ஒட்டப்பெற்று மனுதாரரின் கைரேகை அல்லது கையொப்பம் பெற்று வைக்கப்பட வேண்டும்.
சரக வருவாய் ஆய்வர்கள் கிராமங்களில் முகாம் செய்யும்பொழுது கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்படும் பதிவேட்டினைப் பெற்று உதவித்தொகை பெறும் நபர்களை சரிபார்த்து சான்று அளிக்க வேண்டும். சரக வருவாய் ஆய்வர்கள் சனவரி மற்றும் சூலை மாதங்களில் 15ந் தேதிக்குள் அனைத்து இனங்களையும் சரிபார்த்து வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பிடவேண்டும். வட்டாட்சியர்கள் அந்த மாதமே கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பிட வேண்டும்.
முகவரி மாற்றம்:
உதவித்தொகை பெறுபவர்கள் அதே தாலுக்காவில் முகவரி மாற்றம் செய்து கொண்டால் வட்ட அலுவலக பதிவேட்டில் உரிய மாற்றம் செய்து அதன் விவரத்தினை தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரிவித்து பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள வட்டாட்சியர் உத்திரவு இட வேண்டும்.
உதவித் தொகை பெறுபவர் வேறு தாலுகாவிற்கு முகவரி மாற்றம் செய்து கொண்டால், உதவித்தொகை பதிவேட்டில் விண்ணப்பம் கிடைத்த மாதத்துடன் உதவித்தொகை நிறுத்தம் செய்து பதிவுகள் மேற்கொண்டு நிறுத்தம் செய்யப்பட்ட விவரத்தை தொடர்புடைய வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும். புதிய வட்டத்தில் தொடர்புடைய வட்டாட்சியர் இவர் இருக்கும் முகவரியை சரி பார்த்துக் கொண்டு புதிதாக உதவித் தொகை அனுமதித்து ஆணைகள் வழங்க வேண்டும்.
இறப்பு :
உதவித்தொகை பெறுபவர் இறந்துவிட்டால் படிவம் 6ல் கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அதே போன்று குறிப்பிட்ட முகவரியில் இல்லாமல் நிரந்தரமாக சென்று விட்டாலும் இதே போன்று உதவித் தொகை பெறுபவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இவரது பாதுகாவலர், உதவித்தொகையினைப் பெற்று முறையாக உதவித்தொகைப் பெறுபவரை பராமரிக்காத நிலையிலும் கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பிட வேண்டும், சரக வருவாய் ஆய்வர்கள் தங்களது முகாமின் போது இதனை கண்காணிக்க வேண்டும்.
உடல் ஊனமுற்றோர் உதவித்தொகை திட்டம் :
அரசாணை எண்.1402 நிதி (ஒய்வு)த்துறை நாள்:6.11.74 ன் படி ஆதரவற்ற உடல் ஊனமுற்ற நபர்களுக்கும் உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட தகுதி:
1) வயது 45ம் அதற்கு மேலும் இருத்தல் வேண்டும்.
2) 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதர தகுதிகளைப் பெற்றிருந்தால் மாவட்ட மருத்துவ குழுவின் பரிந்துரை பெற்று வயது தளர்வு குறித்தான ஆணைகள் மாவட்ட ஆட்சியரிடம் பெற்று உதவித்தொகை வழங்கிடலாம்.
3) ஊனத்தின் அளவு 60% மற்றும் அதற்கு கூடுதலாக இருக்க வேண்டும்.
4) ஊனத்தின் தன்மை குறித்து அரசு சிறப்பு மருத்துவரிடம் மருத்துவ சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.
5) கண்பார்வை இழப்பு 100% பார்வை இழப்புக்குரியவர்கள் மட்டுமே ஊனமுற்றவர்களாக கருத வேண்டும்.
6) ஊமை மற்றும் செவிடர்கள் ஊனமுற்றவர்களாக கருதி உதவித் தொகை வழங்க இயலாது.
7) சித்திரக்குள்ளன் எனும் ஊனமுற்றவர் ஆணாக இருப்பின் 2 அடி 7 அங்குல உயரமும் பெண்ணாக இருப்பின் 2அடி 6 அங்குல உயரமும் இருக்க வேண்டும்.
8) மனவளர்ச்சி குன்றியோருக்காக அவரது பாதுகாவலரே அவருக்காக விண்ணப்பிக்கலாம். இவருக்கு அனுமதிக்கப்படும் உதவித் தொகை மற்றும் பிற சலுகைகளை அவருக்காக வே பயன்படுத்தப்படும் என்றும் முறைகேடாக பயன்படுத்தப்படாது என்றும் அந்த பாது காவலரிடமிருந்து உறுதி மொழி பத்திரம் ஒன்றினை ஒப்பளிப்பு அலுவலரால் பெற்றுக் கொண்டு உதவித்தொகையினை பாதுகாவலருக்கு அனுப்பிடலாம்.
9) உழைத்து பிழைக்க இயலாதவராகவும் வசதியுடைய பெற்றோர் மற்ற உறவினர் ஆதரவிலும் பாதுகாப்பிலும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
10) முதியோர் உதவித் தொகைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள இதர நிபந்தனைகளை பூர்த்தி செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.
ஆதரவற்ற விதவை உதவித்தொகை திட்டம்:
அரசாணை எண் 507 நிதித்துறை நாள்:27.5.75ன்படி ஆதரவற்ற விதவைகளுக்கும் உதவித்தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தகுதி:
1.அரசு நிர்ணயித்துள்ள திருமண வயதான 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
2.மறுமணம் செய்திருக்க கூடாது.
3.உழைக்கும் திறனுடன் கூடியவராக இருக்கக் கூடாது.
4.மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்து சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்டுபவராக இருக்கக் கூடாது.
5.தாய் / தந்தை / சகோதர / சகோதரிகளின் ஆதரவிலோ இதர உறவினர் ஆதரவிலும் இருக்கக்கூடாது.
6.18வயதுடைய ஆண்மகன் இருந்தாலும் அவர் பொருள் ஈட்டக் கூடிய நிலையில் இல்லாது இருப்பின் உதவித்தொகை வழங்கிடலாம்.
(அரசாணை எண் 92 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள்:2.6.98)
7.முதியோர் உதவித் தொகை பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள தேவையான இதர அனைத்து தகுதிகளும் இருக்க வேண்டும்.
ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை திட்டம்:
அரசாணை எண் 164 சமூக நலத்துறை நாள்:12.3.81ன் படி 15.3.81முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிர்ணயிக்கப்பட்ட தகுதி:
1) 60வயதும் அதற்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயக் கூலிகள்
2)விவசாயக் கூலி வேலை செய்து வந்து தொடர்ந்து உழைத்திட இயலாத ஆண்/பெண் இருவரும் தகுதியுடையவர்கள்.
3)நகர் புறங்களில் விவசாயம் தவிர்த்து இதர கூலி வேலை செய்து வந்தவர்கள் தகுதியற்றவர்களாவார்கள்.
4) உழகைக்கும் திறன் உள்ளவராக இருக்கக் கூடாது.
5)முதியோர் உதவித்தொகைப்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள தேவையான இதர அனைத்து தகுதிகளும் இருக்க வேண்டும்.
5) கணவனால் கைவிடப்பட்ட மனைவியருக்கான உதவித்தொகை திட்டம்:
அரசாணை பல்வகை எண்:1465 சமூக நலத்துறை நாள்:3.5.84ன் படி முதியோர் உதவித்தொகை திட்டத்தினை கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும் விரிவுபடுத்தி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தகுதி:
1. வயது வரம்பு 30ம் அதற்கு மேலும் இருக்க வேண்டும்.
2. நிலையான குடியிருப்பு உடையவராக இருக்க வேண்டும்.
3. சட்டப்படி முறையாக திருமணமானவராக இருக்க வேண்டும்.
4. கணவனைவிட்டு 5 வருடங்களுக்கு குறையாமல் பிரிந்தவராக இருக்க வேண்டும்.
5. சட்டபூர்வமாக நீதி மன்றம் மூலம் விவாகரத்து பெற்றவராக இருக்கக் கூடாது.
6. நீதி மன்றம் மூலம் ஜீவானம்சம் பெறாமலும், கணவரிடமிருந்து எவ்வித உதவியும் பெறாதவருமாக இருந்து ஆதரவற்ற நிலையில் இருந்தால் உதவித் தொகைப் பெற தகுதியுடையவர் ஆவார்.
7. உழைத்துப் பிழைக்க கூடியவராகவோ உழைக்கும் திறனுடன் கூடியவராகவோ இருக்கக் கூடாது.
8. கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கு ஆதாரமாக வட்டாட்சியர் சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.
9. 18 வயது நிரம்பிய ஆண் வாரிசு இருந்தாலும், அவர் பொருள் ஈட்டக் கூடிய நிலையில் இல்லாது இருப்பின் உதவித் தொகை வழங்கிடலாம்.(அரசாணை எண்92 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் :2.6.98)
10. முதியோர் உதவித்தொகைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள தேவையான இதர அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்
No comments:
Post a Comment