Wednesday, April 18, 2018

000021. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால்?

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவருக்கு எவ்வளவு அபராதத் தொகை விதிக்கப்படுகிறது?


ஒருவருக்கு வாகனம் ஓட்டத் தெரியும் என்பதை உறுதி செய்வதே வாகன ஓட்டுநர் உரிமம்தான். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருவது வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டம் 181, விதி 3 மற்றும் 4-ன் கீழ் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.


 நண்பர் அல்லது பிறரது வாகனங்களை இரவல் வாங்கி சிலர் ஓட்டுவார்கள். அப்படி ஓட்டுபவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பிடிபட்டால் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் இல்லாதவருக்கு வாகனம் வழங்கியதற்காக அதன் உரிமையாளருக்கும் ரூ.500 என மொத்தம் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.


வாகனக் காப்பீடு சான்று இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுமா?


வாகனக் காப்பீடு மிக அவசியம். விபத்துக் காலங்களில் நமக்கு அல்லது வாகனங்கள் சேதமடைந்தால் காப்பீடு நடப்பில் இருந்தால் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெற முடியும். அதற்காகவே காப்பீடு சான்று இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. காப்பீடு சான்று இல்லாமல் வாகனங்களை இயக்குவது வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டம் 146, 196-ன் கீழ் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.


இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருந்தால், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படுமா?


விபத்து நேரிடும்போது வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வலியுறுத்தப்படுகிறது. இதைப் பின்பற்றாமல் இருப்பது விதிமீறலாகும். இதற்கு மோட்டார் வாகனச் சட்டம் 177-ன்படி ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை அபராதம் விதிக்கலாம்.


 பேருந்தில் பயணிக்கும்போது சலுகை விலை கட்டண அட்டை (பாஸ்) அல்லது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கு என்ன தண்டனை?


 போக்குவரத்து துறையினர் மட்டுமின்றி வட்டார போக்குவரத்து துறையினரும் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளலாம். அந்த ஆய்வின்போது டிக்கெட் அல்லது சலுகை விலை கட்டண அட்டை இல்லாமல் பயணிப்போருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 178-ன் கீழ் ரூ.200 வரை அபராதம் விதிக்க முடியும்.


 வாகனத் தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளிடம் முறையான தகவல் அளிக்காமல், ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?


வாகனத் தணிக்கை என்பது சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைவரும் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. வாகனத் தணிக்கை சமயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்கும் தகவலை வழங்காமலும் , ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டால் இரண்டுக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 179 (1) மற்றும் (2)-ன் கீழ் தலா 250 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க முடியும்.


 ஒருவரது வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்னரும் அவர் வாகனத்தை இயக்கினால் என்ன தண்டனை?


ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்பும் ஒருவர் வாகனங்களை இயக்கினால் அவருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 182 (1)-ன் கீழ் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.


ஒருவர் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை எப்படி கண்டறிவது? அதற்கு அபராதம் எவ்வளவு?


அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதை வட்டார போக்குவரத்து துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள கருவி மூலம் எளிதாக கண்டறிய முடியும். அவ்வாறு வேகமாக வாகனம் ஓட்டி வருபவருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 183 (1)-ன் கீ்ழ் 400 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒருவரது வாகனத்தை இன்னொருவர் அதிவேகமாக ஓட்டினால், வாகன உரிமையாளருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 183 (2)-ன் கீழ் 300 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அதுபோல் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் 184-ன் கீழ் 1000 ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.


 விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள வாகனங்களை இயக்கலாமா?


மோட்டார் வாகனச் சட்டத்தின்படி முறையான பாதுகாப்பு வசதியில்லாமல் வாகனங்களை சாலைகளில் இயக்கக் கூடாது. உதாரணமாக, பஸ்களின் படிக்கெட்டு உடைந்திருந்தால், அவற்றில் பயணிகள் ஏறும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இயக்கினால் மோட்டார் வாகனச் சட்டம் 190 (2)ன் கீழ் 600 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.


 வாகனப் பதிவுச் சான்று இல்லாமலும் புதுப்பிக்காமலும் இருந்தால் எவ்வளவு அபராதம்?


வாகனத் தணிக்கையின்போது பதிவுச் சான்று இல்லாமல் இருந்தாலோ அல்லது புதுப்பிக்காமல் இருந்தாலோ மோட்டார் வாகனச் சட்டம் 192 (1)-ன் கீழ் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


வரி செலுத்தாமல் சரக்கு போக்குவரத்து வாகனங்களை இயக்க முடியுமா?


சரக்கு போக்குவரத்து வாகனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் வரி செலுத்த வேண்டும்; அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தவேண்டும். வரி செலுத்தவில்லை என்றால், மோட்டார் வாகனச் சட்டம் 86 விதி 172 (1)ன் கீழ் அபராதம் விதிக்கலாம் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்யலாம். இது வாகனத்துக்கு வாகனம் மாறுபடும்.


உதாரணமாக, சரக்கு போக்குவரத்தில் ஈடுபடும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரி செலுத்தவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தையும் செலுத்தாவிட்டால் வாகனங்களை பறிமுதல் செய்து 2 நாட்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியாதபடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்படும்.


 அனுமதி (பர்மிட்) பெறாமல் சரக்கு போக்குவரத்து வாகனங்களை இயக்கலாமா? அப்படி இயக்கினால் என்ன தண்டனை?


பர்மிட் இல்லாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்கினால் மோட்டார் வாகனச் சட்டம் 66 பிரிவு 192-ன் கீழ் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும்.


 சரக்கு போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருட்கள் ஏற்றிச் செல்லலாமா?


வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்குகளை (ஓவர் லோடு) ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்துகளை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனத் தணிக்கையின்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்கு ஏற்றிவந்தால் மோட்டார் வாகன சட்டம் 194 பிரிவு 113, 114-ன் கீழ் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் உள்ள சரக்கை கணக்கிட்டு ஒரு கிலோவுக்கு ரூ.1 வீதம் அபராதம் விதிக்கப்படும். தவிர, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ள சரக்குகளை இறக்கி வைத்துவிட்டு (அன்லோடு) செல்ல வேண்டும்.


சரக்கு ஆட்டோ, லாரி போன்ற சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லலாமா?


சரக்கு வாகனங்களில் ஆட்களை கட்டாயம் ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்தை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு ஏற்றிச் சென்றால் மோட்டார் வாகனச் சட்டம் 177 விதி 236-ன் கீழ் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்

No comments:

Post a Comment