5.3 இந்திய மொழி இதழ்கள் சட்டம்
1878 ல் லிட்டன் பிரபுவால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேய அரசைத் தாக்கி எழுதுவதைத் தடை செய்ய இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் படி இதழ்கள் குறிப்பிட்ட பிணையத் தொகையைச் செலுத்த வேண்டும். அரசாங்கத்தைக் குறை கூறும் விதமாகவோ இனம், மதம், சாதிக் கலவரங்களைத் தூண்டும் வகையிலோ எழுதக்கூடாது. அவ்வாறு செய்தால், பறிமுதல் செய்யும் அதிகாரம் நீதிமன்ற நடுவருக்கு உண்டு. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது. இதனை எதிர்ப்பவர்கள் பிணைத் தொகையை இழப்பதோடு சிறைத் தண்டனைக்கும் உள்ளாவர். 1881ஆம் ஆண்டு ரிப்பன் பிரபு காலத்தில் இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
5.3.1 குற்றத் தூண்டுதல் தடுப்புச் சட்டம்
ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகளைக் குறிக்கும் மற்றுமொரு சட்டம் 1908 ல் பிறப்பிக்கப்பட்டது. குற்றங்களைத் தூண்டும் செய்திகளை வெளியிட்டால் இதழையும் அச்சகத்தையும் நீதிபதி பறிமுதல் செய்யலாம். இச்சட்டத்தினால், ஆங்கிலேய அரசுக்கு முதல் ஐந்தாண்டுகளில் ஐந்து லட்சம் ரூபாய் பிணையத் தொகை கிடைத்தது.
5.3.2 1910ஆம் ஆண்டு இதழ்கள் சட்டம்
விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஆங்கில அரசின் நடவடிக்கைகளுள் இச்சட்டமும் ஒன்றாகும். இரண்டாயிரம் ரூபாய் வரை பிணையத் தொகையை இதழ்கள் கட்ட வேண்டும். அரசுக்கு எதிரான செய்திகள் வெளியானால், அஞ்சலக அதிகாரி இதழ்களை நிறுத்தி வைக்கலாம். அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது. கடுமையான இச்சட்டத்தால் இதழ்கள் பல நின்று போயின. 1921ஆம் ஆண்டு சாப்ரூ என்பவரின் தலைமையில் அமைந்த குழுவின் பரிந்துரையின்படி இச்சட்டம் நீக்கப்பட்டது.
செய்தித்தாள் அவசரச் சட்டம் - 1930ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி செய்தித்தாள்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டது. இதனால் பல இதழ்கள் பாதிப்பு அடைந்தன.
5.3.3 நெருக்கடிக் கால அதிகாரச் சட்டம்
1931ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடிக் கால அதிகாரங்களை அளித்தது. இச்சட்டப்படி இதழ்களும் அச்சகங்களும் பத்தாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்ட வேண்டும். இத்தொகையை மாநில அரசுகள் பறித்துக் கொள்ளலாம். தேசத் தலைவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாது. இச்சட்டம் காந்தியடிகளின் சட்டமறுப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது.
5.3.4 பிற பல்வகைச் சட்டங்கள்
மேற்குறிப்பிட்டவைகளைத் தவிர, இதழியல் தொடர்பாகப் பல்வேறு வகையான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்திய நூலகச் சட்டம் (1954)
வெளியிடப்படும் நூலின் / இதழ்களின் பிரதியைத் தேசிய நூலகம் (கல்கத்தா), மத்திய நூலகம் (டில்லி), கன்னிமாரா நூலகம் (சென்னை) ஆகியவற்றிற்கு அனுப்ப வேண்டும் என்பது இச்சட்டத்தின் நோக்கம்.
தொழில் முறைப் பத்திரிகையாளர் சட்டம்
இதழியல் துறைப் பணியாளர்களுக்கான ஊதியம், வைப்புநிதி, ஓய்வுக்கால ஊதியம், பணிக்கொடை விடுமுறை (earned leave),வேலைநேரம் பற்றிய சட்டம். இச்சட்டம் 1955ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
விலை, பக்க நிர்ணயச் சட்டம்
1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் முன்னரே இருந்த சட்டங்களின் திருத்தம் செய்யப்பட்ட வடிவமாகும். இச்சட்டப்படி இதழ்கள் டில்லி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவேண்டும். அச்சிட்ட இதழ்களின் பிரதியைப் பதிவாளர் அலுவலகத்துக்கும், கல்கத்தா தேசிய நூலகத்திற்கும் சென்னை கன்னிமாரா நூலகத்திற்கும் அனுப்ப வேண்டும். ஆசிரியர், பதிப்பாளர், அச்சிடுபவர், அச்சகம் பெயரை இதழ்களில் வெளியிட வேண்டும். ஆண்டு அறிக்கை வெளியிட வேண்டும்.
நாடாளுமன்ற நடவடிக்கைச் சட்டம்
1956ஆம் ஆண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் அவை தொடர்பானவற்றையும் வெளியிடுவது பற்றியதாக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனைப் பெரோஸ்காந்தி சட்டம் என்பர்.
தீங்கு விளைவிக்கும் இதழ்கள் சட்டம்
ஆபாச வெளியீடுகளைத் தடை செய்யும் விதமாக 1956இல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
பதிப்புரிமைச் சட்டம்
நூலாசிரியர்களுக்குப் பதிப்புரிமை அளிக்கும் விதமாக இச்சட்டம் 1957இல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆசிரியருக்குப் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.
அவதூறுச் சட்டம்
தனி மனிதர் பற்றி மாறான செய்திகள் வெளியிட்டால் வழக்குத் தொடர இச்சட்டம் வகை செய்கிறது. இ.பி.கோ. 499, 502 ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரலாம். இத்தகு சட்டங்கள் நடத்தை விதிகள் உருவாக உதவுகின்றன.
ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டம்
மக்கள் மனத்தைக் கெடுக்கும் வகையில் செய்திகளை (பாலுணர்வு, வன்முறை தூண்டல்) வெளியிடுவதை இச்சட்டம் தடை செய்கிறது. இ.பி.கோ.292, 293, 294 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை உண்டு. இச்சட்டத்தின்படி இதழ்களைப் பறிமுதல் செய்யலாம்.
தீமை பயக்கும் வெளியீட்டுத் தடைச் சட்டம்
1956 ல் கொண்டு வரப்பட்ட இச்சட்டப்படி இளைஞர்களது உள்ளங்களைக் கெடுக்கும் வெளியீடுகளை இச்சட்டம் தடை செய்கிறது. அவற்றை விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.
ஆட்சி துரோகச் சட்டம்
ஆட்சிக்கு எதிரான வன்முறை தூண்டல், புரட்சி உண்டாக்கல், நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைத்தல் முதலியன ஆட்சிக்கு எதிரானவை. இவை பற்றி இச்சட்டம் அமைகின்றது.
மருந்து, தந்திர நிவாரணச் சட்டம்
மருத்துவம், தந்திரம் சார்ந்த விளம்பரங்களைத் தடை செய்வது இச்சட்டத்தின் நோக்கமாகும். தொடர்புடையவற்றைத் தடைசெய்வதோடு விளம்பரங்களையும் இச்சட்டம் தடை செய்கிறது.
பத்திரிகைக் குழுச்சட்டம்
இதழ்களின் உரிமையைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதழ்கள் தொடர்பான எந்தப் பிரச்சினையையும் இதழியல் குழு (Press Council) விசாரித்துத் தீர்ப்பு வழங்கும். இம்முறை மேலை நாடுகளிலும் உண்டு.
இதழியல் தொடர்பான இந்தியன் பீனல் கோடு சட்டங்கள்
(1) இ.பி.கோ 124-A-இன்படி நாட்டின் நலனிற்குக் கேடு விளைவிக்கும் முறையில் பேசுவதையும் எழுதுவதையும் துரோகமாகக் கருதித் தண்டனை விதிக்கிறது.
(2) இ.பி.கோ. 505ஆம் பிரிவின்படி இராணுவத்தினர் இடையே பிளவு உண்டாகும்படி அறிக்கை வெளியிடுவதைத் தடுக்கிறது.
(3) இ.பி.கோ. 295-A- பிரிவின்படி மத நல்லுணர்வுக்குக் கேடு விளைவதைத் தடுக்கிறது.
(4) இ.பி.கோ. 99-A, 99-G - பிரிவின்படி இனக்கலவரம் உண்டாகக் காரணமான நூலையோ செய்தித் தாளையோ பறிமுதல் செய்கிறது.
(5) இ.பி.கோ. 228 ம் பிரிவின்படி நீதிமன்ற அவமதிப்பைத் தடுக்கிறது.
தணிக்கைச் சட்டம்
1988ஆம் ஆண்டு இதழ்களின் தணிக்கைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி,செய்திகள் வெளியிடுவதற்கு முன்பு அவற்றை ஆராய்ந்து நீக்க முடியும். இச்சட்டம் இதழியல் சுதந்திரத்தோடு தொடர்புடையதாகும். இதழ்களின் சுதந்திரத்தைப் பாதிப்பதால் இதனைக் கருப்புச் சட்டம் என்பர். இத்தகைய தணிக்கை முறை அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்
No comments:
Post a Comment