குற்றம் குற்றமே!
நினைப்பது எல்லாம் நடப்பதில்லை. செய்வது எல்லாம் ஜெயிப்பதில்லை. இது குற்றம் புரிபவர்களுக்கும் பொருந்தும். அதனால், அவர் குற்றம் செய்யவில்லை, குற்றம் செய்வதற்கு முயற்சிதான் செய்தார்! இதனால், யாருக்கும் எந்தவித இழப்பும் இல்லை!, எந்தவித நஷ்டமும் இல்லை! என்று யாரையும் சட்டம் தண்டிக்காமல் விடாது. அப்படிச் செய்தால் அவர்கள் கண்டிப்பாக மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்ய முயற்சி செய்வார்கள். ஆகையால், குற்றம் செய்வதற்கு முயல்வதையும் ஒரு தனிக்குற்றமாக இந்திய தண்டணைச் சட்டம் எடுத்துக் கொள்கிறது.
”சரி, சரி விடுப்பா. ஏதோ தெரிஞ்சோ, தெரியாமயோ நடந்திருச்சி, ஒனக்கு ஒண்ணும் ஆகலல்ல! அவன் இனிமே அப்படிச் செய்யமாட்டான்!” ன்னு கிராம பஞ்சாயத்துகளில் நாட்டாண்மை என்பவர் பேசுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.
இந்திய தண்டணைச் சட்டமானது ஒரு குற்றச் செயலுக்கான முயற்சியைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கும் தண்டணை உண்டு. திருடுவது குற்றம் என்றால், கொலை செய்வது குற்றம் என்றால், திருடுவதற்கு, கொலை செய்வதற்கு முயற்சி செய்வதும் குற்றம்தான்.
பொதுவாக ஒரு குற்றச்செயலை அரங்கேற்ற வேண்டுமென்றால், நான்கு விதமான நிலைகளை குற்றம் செய்பவர் கடக்க வேண்டியதிருக்கும்.
1. கருத்து:
ஒருவரின் எந்த ஒரு செயலுக்கும் முதல் காரணமாக இருப்பது அவரது எண்ணங்களே ஆகும். ஆனால், செயல் எதுவுமே நடைபெறாமல், ஒருவர் குற்றம் செய்ய நினைத்தார்! என்பதை மட்டும் வைத்து அவரை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது.
2. முன்னேற்பாடு:
ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு திட்டமிடுவதோ, நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதோ முன்னேற்பாடு என்கிறோம். இந்த முன்னேற்பாடுகளால் பொது மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாத காரணத்தால், சட்டத்தின் கீழ் இதனை தண்டிக்க முடியாது.
3. முயற்சி:
ஒருவர் ஒரு குற்றச்செயலை செய்வதற்கு இது மிகவும் அவசியம். தனது எண்ணத்தின்படி திட்டமிட்டு, ஒரு குற்றச் செயலை ஒருவர் செய்வதற்கு முயற்சி செய்கிறார். அது வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. தோற்றாலும் கூட அது சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். இந்த முயற்சியின் காரணமாக தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அல்லது பொது மக்களின் உடலுக்கும், உடைமைக்கும் ஏதோ ஒரு வகையில் தீங்கு, அழிவு ஏற்படுகிறது. எனவே இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் கீழ், இதனை தண்டிக்கிறது.
4. செயல்:
முதலில் மனதில் நினைக்கப்பட்டு, அதற்காக சில முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அதனை முடிப்பதற்கு முயற்சி செய்யப்பட்டு, இறுதியில் ஒரு குற்றச் செயலானது ஒருவரால் அல்லது பலரால் முடிக்கப்பட்டுகிறது. குற்ற முயற்சியையே தண்டிக்கும் சட்டமானது குற்றச் செயலை தண்டிக்காமல் எப்படி விட முடியும்? இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் மூலமாக அந்தக் குற்றங்களுக்கு ஏற்றாற்போல கடுமையான தண்டணைகளை வழங்குகிறது
No comments:
Post a Comment