Friday, May 25, 2018

000060. வாரிசு சான்றிதழ் - கேள்விகள்-பதில்கள் - என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?

ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?

நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

எங்கே விண்ணப்பிப்பது?

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில்  கிடைக்கிறது.

வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.


என்னென்ன ஆவணங்கள் தேவை?

இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் நகல்
வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ் நகல்


எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், அதற்கு அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று விண்ணப்பித்து, வழக்கறிஞர் மூலமாக பிரபல தமிழ் நாளிதழில் வாரிசு சான்றிதழ் கோரியுள்ள விளம்பரத்தை வெளியிட்டு, 15 நாட்களுக்குள் ஆட்சேபணை யாரும் தெரிவிக்காத பட்சத்தில் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் அதனை வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெறமுடியும்.


சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால்?

ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.


விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?

விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான அல்லது மறுப்பதற்கான காரணத்தை வட்டாட்சியர் அவர்கள் கூற வேண்டும்.


எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.


இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)

இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

மாற்று வழி

இறங்குரிமை சான்றிதழ் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் ஒன்றில் இறந்தவருடைய வாரிசுகள் அனைவரும் தங்களுக்குள் ஒருவரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து, அவரிடம் பண பலன்களை அல்லது வாரிசுக்கான வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பரிசீலணை செய்து அவர் சான்றிதழ் வழங்குவார்.


ஒருவர் காணாமல் போயிருந்தால்..?

வாரிசுதாரர்களில் ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து புகார் அளித்து, காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.


எப்போதெல்லாம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்?

குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.

குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.

குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார். 

போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்

1 comment:

  1. நல்லா தகவல், தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்

    ReplyDelete