நோக்கம்:
பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).
உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால் உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு. உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.
நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல் நீதிமன்றம்.
நீதிமன்றம் துவங்கும் நேரம்.
உங்களுக்காக பிணையாளிகளாக வரத் தயாராக உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரச்செய்வது.
முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொள்ளச் சொல்வது.
நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.
குற்றவியல் நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்படல்:
பிணையில் விடுவிக்கப்பட முடியாத குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கு நியாயமான காரணங்களிருந்தால் காவல்துறை அதிகாரி அவரை பிணையில் விடுவிக்க மறுத்துவிடலாம். அவ்வாறான நிலைமையில், பிணையில் விடுவிக்கும் படி நீதிமன்றத்தில் எழுத்து மூலமான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களாக இருந்தாலன்றி, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றம் மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.
பிணையில் விடுவிப்பதை எதிர்த்து காவல் துறையினர் கூறும் பொதுவான காரணங்கள்
குற்றவாளி, விசாரணையின் போது ஆஜராகமாட்டார்.
சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் குற்றம் புரிவார்.
காவல்துறையினரின் புலன் விசாரணை முடியவில்லை.
மேலும் குற்றச்சாட்டுகள் தொடர வேண்டியுள்ளது.
களவு போன பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.
சக குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.
குற்றம் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப் படவில்லை.
பொதுவாக, குற்றவாளியை காவலில் வைக்கும்படி, காவல் துறையினர் மனுச் செய்வார்கள். அத்தகைய மனுவில், குற்றவாளியை மேலும் காவலில் வைக்க வேண்டியதற்கான காரணங்களை அவர்கள் அளித்திருப்பார்கள். கூடுமான அளவிற்கு, காவல் துறையினர் கூறும் காரணங்களை மறுத்துரைக்க வேண்டும்.
பிணையில் விடுவிக்க மனு
குற்றவாளியால் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள முடியுமென்றால், அவர் நீதிபதியின் முன்பாக குற்றவாளிக்காக மனுக் கொடுத்து ஆஜராகலாம்.
வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள இயலாதென்றால், குற்றவாளியே நீதிபதிக்கு மனுச் செய்து கொள்ளலாம். இதற்காக சிறை அலுவலரிடமிருந்து மனுவைப்பெற்று, பூர்த்தி செய்து, நீதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், தான் பிணையில் விடுவிக்கப்பட வேண்டியதற்கு தகுந்த காரணங்களைக் கூற வேண்டும்.
அம்மனுவில், தாம் விடுவிக்கப்படுவதற்காக, கீழ்க்கண்ட சிறப்பு காரணங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
நிபந்தனையும் தங்குமிடத்தின் நிலைமையும் பிணையில் விடுவிக்கப்படாவிட்டால் வெளியேற்றபட நேரிடுமா?
பணியை இழக்க நேரிடுமா
பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டால், தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு எத்தகைய துன்பம் ஏற்படும்?
காவலில் வைத்திருப்பதால் நலிவுற்ற உடல் நிலையும், சிகிச்சையும் எவ்வாறு பாதிக்கப்படும்?
குற்றவியல் நீதித்துறை நடுவர் பிணையில் விடுவிக்க மறுத்தல் :
பிணையில் விடுவிக்க மறுத்தால், குற்றவியல் நீதித்துறை நடுவர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கு அத்தகைய பதிவுக் குறிப்பு அவசியமாகும்.
மேல் முறையீடு :
பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மீண்டும் அடுத்த முறை மனுச் செய்து முயற்சிக்கலாம்.
பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள் :
குற்றவியல் நீதித்துறை நடுவர், நிபந்தனை எதுவும் இல்லாமல் அல்லது சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிணையாளிகளுடன் அல்லது பிணையாளிகளின்றி பிணை முறி எழுதிக் கொடுத்தால் பிணையில் விடுவிக்கலாம்.
சிறப்பு நிபந்தனைகளில், குறிப்பிட்ட நேரங்களில் காவல் நிலையத்தில் குற்றவாளி ஆஜராக வேண்டும் அல்லது அவரது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்று கூறப்பட்டிருக்கும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தில் ஆட்சேபிக்கலாம். நிபந்தனைகளை மாற்ற நீதிமன்றம் மறுத்தால், குற்றவாளி அதை மறுத்துவிடலாம். ஆனால் அவ்வாறான நிலைமையில், மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு அவருக்குச் சாதகமான முடிவு செய்யப்படும் வரையில் அவர் விடுதலை செய்யப்படமாட்டார்.
பிணை முறிவும், பிணையாளிகளும் :
பிணையாளிகளுடனோ அல்லது பிணையாளிகள் இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம்.
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜராவதற்கு, குறிப்பிட்ட தொகையைப் பிணையாக உத்திரவாதம் அளிக்கும் நபர்களே பிணையாளிகள் ஆவர்.
பிணையாளிகளாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கேட்கப்பட்டால் பிணையாளியாக இருக்கத் தயார் என்பதையும் போதிய நிதி வசதி உண்டு என்பதையும் பிரமாணத்தின் பேரில் நீதி மன்றத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
அவர்களுக்குப் பிணை அளிப்பதற்குப் போதிய நிதி வசதி உள்ளது என்பதோடு வேறு வகையிலும் பிணையாளிகளாக இருக்கத் தகுதியுடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டி, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யலாம்.
எந்தவிதக் காரணமும் கூறாமல். பிணையாளியை ஏற்க மறுத்துவிடக் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. பிணையாளிகள் நீதிமன்றத்தில் இல்லாவிட்டால், காவல் துறையினர் அவர்களை விசாரித்து, ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள் எனத் தீர்மானிக்கும் வரை, கைது செய்யப்பட்ட நபர் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.
பிணையாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நிரந்தர முகவரியும், பிணையளிப்பதற்கு அவர்களது கடன்கள் நீக்கி, போதுமான அளவிற்கு நிதி வசதியும் இருக்க வேண்டும். பிணையாளிகள் தங்களது ரேஷன் கார்டு, வாடகை ரசீது, வைப்பீட்டு நிதி அட்டை, சம்பளப் பட்டியல். வருமான வரி ரசீது போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
தொழில் முறையில் பிணையாளிகளாக இருந்தாலன்றி, அவர்களது தனிப்பட்ட குண இயல்பு, அரசியல் கருத்துக்கள், பழைய குற்றவாளியா, ஆணா, பெண்ணா என்பதைக் காரணங்காட்டி பிணையாளிகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் காவல் துறைக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இல்லை.
No comments:
Post a Comment