Friday, May 4, 2018

000044. ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மீது தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

CRL. OP. NO - 7025/2016, DT - 31.3.2016., சென்னை உயர்நீதிமன்றம், 

தமிழ்நாட்டிற்கு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டம் 2(a) ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

2(a) - " துன்பம் விளைவித்தல் " என்றால் பழி தூற்றுவது அல்லது ஊறு செய்வது அல்லது தொந்தரவு செய்வது அல்லது தாக்குவது அல்லது வலிமையை பயன்படுத்துவது உள்ளடங்கலான அச்சுறுத்தலை, அச்சத்தை, அவமானத்தை அல்லது தடுமாற்றத்தை விளைவிக்கிற அல்லது பெரும்பாலும் விளைவிக்ககூடிய ஓர் ஆடவரின் பண்பற்ற நடத்தை அல்லது செயல் என்று பொருள்படும்.

மேலே கூறப்பட்டுள்ள விளக்கத்தின் படி துன்புறுத்தல் அல்லது பண்பற்ற செயல் ஒன்றை ஓர் ஆண் மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகும்.

எனவே ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மீது தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 7025/2016, DT - 31.3.2016

Pradeep and One another Vs Inspector of police, K2 Police Station, Ayanavaram, Chennai and One another

(2016-2-LW-CRL-640)

இந்த தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் தீர்ப்பான "பஷீர் அகமது மற்றும் பலர் Vs ஆய்வாளர் (2006-1-LW-CRL-393),(2006-4-CTC-374)" என்ற வழக்கும் சுட்டிக்காட்டப்பட்டது

Wednesday, May 2, 2018

000043. மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்கள் எளிதாக இணையதளம் மூலம் பிறப்பு & இறப்புச் சான்றிதழ்கள் பெற

நமது நாட்டில் எல்லோருக்கும் அவசியமாக கருதப்படுவது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள். இதனை ஒவ்வொருவரும் பதிவு செய்து நகராட்சி அலுவலகத்தில் பெற வேண்டும். தற்போது தமிழக அரசு இதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டது. இதனை வாங்க வேண்டும் என்றால் அலைந்துதான் வாங்க வேண்டும். பெயரில் அல்லது நாளில் பிழை இருந்தால் அதனை மாற்றுவதற்கும் அலைச்சல்தான். பணத்தையும் கொடுத்து, பிழைப்பையும் கெடுத்து அலையும் பொழுது எல்லோருக்கும் எரிச்சல்தான் வரும்.

மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு

நமது தமிழக அரசு முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி ஆகிய மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை இணையதளம் மூலமாகவே பெறுவதற்கும், அதிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அதனை கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும் இதற்கு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாகவே பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு யுனிக் எண் வழங்கப்படுகிறது. தவறுகளையும் இலவசமாகவே திருத்திக் கொள்ளலாம். .

பிறப்புச் சான்றிதழ்

இந்தச் சான்றிதழ்களை இணையத்திலிருந்து எடுப்பதற்கு சான்றிதழில் பெயர் உள்ளவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விபரமும், அவரது பெயரும், பிறந்த  நாளும் மாதமும், வருடமும், பிறந்த இடம் வீடென்றால் வீட்டின் முகவரியும், மருத்துவமனை என்றால் அந்த மருத்துவமனையின் பெயரும், அவரது தாய், தந்தையின் பெயரும், நமக்குத் தெரிய வேண்டும்., 

இறப்புச் சான்றிதழ்

இந்தச் சான்றிதழ்களை இணையத்திலிருந்து எடுப்பதற்கு சான்றிதழில் பெயர் உள்ளவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விபரமும், அவரது பெயரும், இறந்த  நாளும் மாதமும், வருடமும், பிறந்த இடம் வீடென்றால் வீட்டின் முகவரியும், மருத்துவமனை என்றால் அந்த மருத்துவமனையின் பெயரும், அவரது தாய், தந்தையின் பெயரும், நமக்குத் தெரிய வேண்டும்., 

எப்படி எடுக்க வேண்டும்? 

பாக்ஸில் தேவையானதை கிளிக் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  அதன் பின்பு தோன்றுகின்ற பாக்ஸில்  பெயர் மற்றும் வருடம் மற்றும் மாதத்துடன் கூடிய நாளை நிரப்புங்கள். பிழையின்றி நிரப்பினால்தான் நீங்கள்  குறிப்பிடுகின்றவரின் சான்றிதழை எடுக்கமுடியும். ஆகையால், பிழையில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.



சென்னை மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு சான்றிதழ் பெற

http://www.chennaicorporation.gov.in/o…/birthCertificate.do…


பிறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்திக் கொள்ள 

 http://www.chennaicorporation.gov.in/…/birthCertificateList…


இறப்பு சான்றிதழ் பெற

http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateBasi…


இறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்திக் கொள்ள

 http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateList…





கோயம்புத்தூர் மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு சான்றிதழ் பெற & இறப்பு சான்றிதழ் பெற

 https://www.ccmc.gov.in/ccmc/index.php…




மதுரை மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற

http://www.maduraicorporation.co.in/



திருச்சி மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற

http://www.trichycorporation.gov.in/birth_search.php#menu




திருநெல்வேலி  மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற

http://tirunelvelicorporation.in/

000042. பிரிவு 26 முதல் 52 - இந்திய தண்டனைச் சட்டம் 1860

26 - நம்பத்தகுந்த காரணம்

27 – மனைவி, எழுத்தர், வேலையாட்களிடம் உள்ள சொத்து

28 – கள்ளத் தயாரிப்பு

29 – பத்திரம் – ஆவணம்

29 A – மின்னணுப் பதிவுரு

30 – மதிப்பாவணம்

31 – உயில்

32 – செய்கைகளைக் குறிக்கின்ற சொல் சட்டத்திற்கு மாறாக விடுகைகளை உள்ளடக்கும்.

33 – செய்கை அல்லது விடுகை

34 – பொதுவான உட்கருத்தை மேல்நடத்தும் வகையில் பல்வேறு ஆட்களால் செய்யப்பட்ட செய்கை

35 – அத்தகைய செய்கை குற்றமுறு அறிவுடன் அல்லது உட்கருத்துடன் செய்யப்படுகின்ற காரணத்தால் அது குற்ற செய்கையாக இருக்கும்போது

36 – பகுதி செய்கையாலும் பகுதி விடுகையாலும் உண்டாக்கப்பட்ட விளைவு

37 – பல்வேறு செய்கைகளில் ஒன்றை செய்வதன் மூலம் ஒத்துழைத்தலானது ஒரு குற்றமாக அமைகிறது.

38 – குற்ற செய்கையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் வெவ்வேறு குற்றங்களை செய்தவர்களாகலாம்.

39 – தன்னிச்சையாக - என்பதன் விளக்கம்

 40 – குற்றம் - என்பதன் விளக்கம்

41 – சிறப்பு சட்டம் - என்பதன் விளக்கம்

42 – வட்டார சட்டம் - என்பதன் விளக்கம்

43 – சட்டத்திற்கு மாறாக செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர்

44 – கேடு (அ) ஊறு (அ) துன்பம்

 45 – உயிர் என்பது மனித உயிரையே குறிக்கும். வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.

46 – மரணம் என்பது இந்த சட்டப்படி மனிதருடைய மரணத்தையே குறிக்கிறது. வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.

47 – மிருகம் என்பது மனித உயிர் தவிர மற்ற உயிர் வாழும் ஜந்துக்களைக் குறிக்கிறது.

48 – கப்பல்

49 – ஆண்டு, மாதம் என்பது ஆங்கில ஆண்டு மற்றும் ஆங்கில மாதத்தினைக் குறிக்கும்.

50 – பிரிவு – எண்களிட்டு காட்டப்பட்டிருக்கும் இந்த சட்டத் தொகுப்பின் பகுதியைக் குறிக்கும்.

51 – பிரமாணம் 

52 – நல்லெண்ணம்

52 A – புகலிடம் தருதல்

Monday, April 30, 2018

000041. நிரந்தர உறுத்துக்கட்டளை - வழக்கு



வாதி என்ன சொல்றாருன்னு கேப்போம், வாங்க!

என்னோட பேரு வி.சக்ரவர்த்திங்க. எங்கப்பா பேரு வடிவேலுங்க.  கடலூர் மாவட்டத்தில திருவதிகைன்னு ஒரு ஊரு இருக்குதுங்க. அந்த ஊர்ல இருக்குற சரநாராயணப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ஒரு சொத்த, 40 வருஷத்துக்கு முன்னால, அப்ப இருந்த கோயில் நிர்வாகிங்க, எங்க அப்பாவுக்கு குத்தகைக்கு வுட்டாங்கங்க.   அப்போ குத்தகை வருஷத்துக்கு 15 ரூபாய்ங்க. எங்கப்பா 20 வருஷத்துக்கு முன்னால எறந்து போயிட்டாருங்க. இப்ப அந்த சொத்துக்கு நான் வருஷ குத்தகையா 2000 ரூபா கொடுத்திட்டு அனுபவப்பாத்தியம் செஞ்சிக்கிட்டு வாரேனுங்க. இப்ப இருக்குற கோயில் அதிகாரி (செயல் அலுவலர்) எனக்கு குத்தகைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்காருங்க. குத்தகைப் பணத்த நான் ஒழுங்கா அவருகிட்ட கொடுத்துக்கிட்டு வாரேனுங்க. எல்லாத்துக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்குதுங்க..  என்னன்னே தெரியலீங்க? எங்க ஊரு வீ.ஏ.ஓ, பண்ருட்டி தாசில்தாரு, கடலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கூட சேந்துக்கிட்டு, அந்த சொத்த எங்கிட்ட இருந்து, இப்ப அவரு அபகரிக்கப் பாக்குறாருங்க. நீதிபதி ஐயா, நான் அனுபவிச்சிக்கிட்டு இருக்குற கோயில் சொத்துல யாரும் உள்ள வந்து எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாதுன்னு ஒரு நிரந்தர உறுத்துக்கட்டளை கொடுங்கய்யா. 

வழங்கப்பட்ட தீர்ப்பு :

சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

வாதியானவர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்தும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பித்தும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது.

**************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.03.2018







மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி


முன்னிலை: திருமதி .ஏ.உமாமகேஸ்வரி பி.எஸ்ஸி.¸ பி.எல்.¸

மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி

திருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ தைத்திங்கள் 15ஆம் நாள்

2015 ம் ஆண்டு ஜனவரித்திங்கள் 29 ஆம் நாள்வியாழக்கிழமை

அசல் வழக்கு எண்.170 / 2006

வி.சக்கரவர்த்தி…................................................................................................................ வாதி

/எதிர்/

1. கிராம நிர்வாக அலுவலர்¸ திருவதிகை

2. தாசில்தார்¸ பண்ருட்டி

3. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்¸ கடலூர்

4. மாவட்ட ஆட்சியர்¸ கடலூர் மாவட்டம்

5. செயல் அலுவலர்¸ 

அருள்மிகு சரநாராயணபெருமாள் திருக்கோயில்¸ திருவதிகை…........... பிரதிவாதிகள்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

'இவ்வழக்கானது¸ வாதியானவர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரியும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்துவரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக் கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது."

2. வழக்குரையின் சுருக்கம்:

தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப் பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்த பின்னர் தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5 ஆம் பிரதிவாதிதான் வருடாவருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக் கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடா வருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்திவருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின் பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்."

3. ஐந்தாம் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:

வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும். தாவா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத் தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை. தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள் வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை. எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்தகை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு தான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை. 5 ஆம் பிரதிவாதி¸ 1முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும்செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும்."

4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்த பின்னர் 03.03.2008 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.

1) வழக்குச்சொத்து வாதியின் சுவாதீன அனுபவத்தில் உள்ளதா?

2) வழக்கில் வாதி கோரியுள்ளவாறு விளம்புகைப் பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா?

3) நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரம் பெறுவதற்கு வாதிக்கு தகுதி உள்ளதா?

4) இவ்வழக்குக்கு வழக்கு மூலம் உண்டா?

5) வாதிக்கு எத்தகைய நிவாரணம் கிடைக்கக் கூடியது?

6) வழக்கெழு வினாக்கள் 1 முதல் 3:

வாதி தரப்பில் தங்களது வழக்கினை நிரூபிக்கும் வகையில்¸வாதியானவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குரையில்¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப் பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்த பின்னர் தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5ஆம் பிரதிவாதி தான் வருடா வருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக் கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடா வருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின் பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது."

7) இவ்வழக்கில் வாதி¸ வழக்குரையுடன் தாக்கல் செய்திருந்த ஐ.ஏ.793/06 தற்காலிக உறுத்துக்கட்டளை மனுவில்¸ 1 முதல் 5 பிரதிவாதிகளும் எதிருரை தாக்கல் செய்து¸ அம்மனுவில் விசாரணைக்குப் பிறகு வாதி கோரிய வண்ணம் தற்காலிக உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி 15.9.06 ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து 1 முதல் 4 பிரதிவாதிகள் தரப்பில் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சி.எம்.ஏ.7/06 மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு¸ 6.9.07 ஆம் தேதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அசல் வழக்கிலும் 1 முதல் 4 பிரதிவாதிகள் எதிர்வழக்குரை தாக்கல் செய்யாத காரணத்தால் 22.9.06 ஆம் தேதி ஒருதலை பட்சமாக்கப்பட்டுள்ளனர்."

'8) 5 ஆம் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையில்¸ தாவா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத் தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை. தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள்வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை. எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்தகை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை. 5 ஆம் பிரதிவாதி¸ 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது."

9) வாதி தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான ஆவணங்களும்¸ நீ.ம.சா.ஆ.1 முதல் நீ.ம.சா.ஆ.3 வரையிலான ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா.ஆ.1 மற்றும் வா.சா.ஆ.2 ஆகியவை முறையே 07.07.2001 மற்றும் 04.07.2005 ஆகிய தேதிகளில் 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு எழுதிக் கொடுத்த தாவா சொத்துக்கான அசல் குத்தகைப் பத்திரங்களாகும். வா.சா.ஆ.3 முதல் வா.சா.ஆ.12¸ வா.சா.ஆ.14¸ வா.சா.ஆ.17 மற்றும் வா.சா.ஆ.18 ஆகியவை வாதி¸ தாவா சொத்துக்கு 5 ஆம் பிரதிவாதிக்கு செலுத்திய குத்தகை ரசீதுகளாகும். வா.சா.ஆ.13 என்பது 11.07.2001 ஆம் தேதி 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு குத்தகை பாக்கி கேட்டு அனுப்பிய நோட்டீஸ் ஆகும். வா.சா.ஆ.15 என்பது 22.10.2013 ஆம் தேதி வாதியை வருவாய் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி அனுப்பப்பட்ட கடிதம் ஆகும். வா.சா.ஆ.16 என்பது 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில் வழக்குரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். தனது குறுக்கு விசாரணையில்¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணர் கோயிருக்கு பாத்தியமானது என்றும்¸ தன் தகப்பனார் பெயர் சுமார் 60 வருடங்களுக்கு முன்பாகவே அப்போதைய கோயில் நிர்வாகத்தார்களிடமிருந்து குத்தகை எடுத்துக் கொண்டதாகவும்¸ அவருக்கு பின்னிட்டுதான் குத்தகைக்கு பயிர் செய்து வருவதாகவும்¸ ஆரம்பத்தில் தன் தகப்பனார் ரூ.90ம்¸ தற்காலம் தான் ரூ.2000 வருட குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ குத்தகை பாக்கி ஏதுமில்லை என்றும்¸தன் பேரில் கோயில் நிர்வாகத்தால் கடலூர் ரெவின்யூ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து¸ அதன்படி தான் குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ தான் கோயிலுக்கு பாத்தியமான சொத்தைதான் அனுபவித்து வருவதாகவும்¸ அரசாங்கத்திற்கு இதில் சம்மந்தம் இல்லை என்றும்¸ தன்னை குத்தகைதாரர் அல்ல என்று கோயில் தரப்பில் எந்த காலத்திலும் சொல்லவில்லை என்றும்¸ வழக்கு போடுவதற்கு முன்பு அரசாங்கத்திலிருந்து வந்து தாவா சொத்தில் கட்டுமானம் செய்யப்போவதாக சொல்லி பிரச்சனை செய்ததாகவும்¸ வழக்குக்கு பின்னிட்டு 1 முதல் 4 பிரதிவாதிகளான அரசாங்கத்திலிருந்து தனக்கு எந்த பிரச்சனையும் தரவில்லை என்றும்¸ 5 ஆம் பிரதிவாதியால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சாட்சியம் அளித்துள்ளார்."

10) இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித சாட்சிகளும் முன்னிலைப்படுத்தப்படவில்லை¸ சான்றாவணங்களும் குறியீடு செய்யப்படவில்லை.

11) மேற்படி வாதிதரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களையும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது என்பதும்¸ அதனை வாதியின் தகப்பனாரும்¸ அவருக்குப் பின்னிட்டு வாதியும் குத்தகைதாரர் என்ற முறையில் அனுபவித்து வருவதும் வாதியின் சாட்சியம் மற்றும் வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான சான்றாவணங்கள் மூலம் தெளிவாகிறது. மேலும்¸ வாதியும்¸ கோயில் நிர்வாகமும் குத்தகைப் பத்திரங்கள் எழுதிக் கொண்டதும் வாதிதரப்பில்நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் வாதி தொடர்ந்து குத்தகை தொகையை கோயில் நிர்வாகத்திடம் செலுத்தி வந்திருப்பதும் தெரியவருகிறது. மேலும் வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.16 ஆவணத்தை பரிசீலனை செய்து பார்க்கும் போது¸ 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். இதில் வாதி¸ கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கியை செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம்¸ தாவா சொத்தில் வாதி குத்தகைதாரர் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வழக்கில் 1 முதல் 4 பிரதிவாதிகள் ஒருதலைபட்சமாகியுள்ளனர். 5 ஆம் பிரதிவாதியான கோயில் நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையிலும்¸ வாதி¸ மேற்படி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் வாதி¸ தனது சாட்சியத்தில் வருவாய் நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின்படி தான் குத்தகை பாக்கியை செலுத்தி வருவதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் வாதி தரப்பில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டதாகவும்¸ மேற்படி 1முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைக்கு 5 ஆம்பிரதிவாதி உடந்தையாக இருந்ததாகவும்¸ 4 ஆம்பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்பதால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே வா.சா.1-ன் சாட்சியம் மற்றும் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான சான்றாவணங்கள் மூலமும் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதி தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தாவா சொத்தைப் பொறுத்து வாதி கோரியுள்ள விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கது என்றும் முடிவு செய்து எழுவினா 1¸2 மற்றும் 3 ஆகியவற்றிற்கு வாதிக்குஆதரவாக தீர்வு காணப்படுகிறது.

'14) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ வாதியானர் 5ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்தும்¸ வாதி அமைதியான முறையில்அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பித்தும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. அவரவர்கள் செலவுத்தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்படுகிறது

Tuesday, April 24, 2018

000040. பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்க ல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய  அளவு கோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவே தான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.

கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு  பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறி வந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 574 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே  சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள்  ஏற்ப ட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவண ங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்திவரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன் னமும் புரியாதவையாகவே உள்ளன .

இதில், ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும் பின்வருமாறு:

பட்டா:

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்:

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்:

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்:

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்:

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்:

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது. 

ஷரத்து: 

பிரிவு. 

இலாகா:

துறை.

கிரயம்:

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துதல்.

வில்லங்க சான்று:

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்துகொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்:

நில அளவை எண்.

இறங்குரிமை:

வாரிசுரிமை.

தாய்பத்திரம்:

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம்  இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்:

குறித்த வகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை:

நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு:

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி:

வருவாய் தீர்வாயம்.

நன்செய் நிலம்:

அதிக பாசன வசதிகொண்ட நிலம்.

புன்செய் நிலம்:

பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை:

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில  நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது. இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர். 23 வகை மாதிரி ஆவணங்கள் ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதுதொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதை ஏற்ற, சொத்து விற்பனை , அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23வ கையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

,

பதிவுதுறையின் www.tnreginet.netஎன்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Monday, April 23, 2018

000039. குடிபோதையில் செய்த தவறுக்கு தண்டனை உண்டா?

தன் விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது மற்றவரின் சூழ்ச்சியாலோ பலவந்தமாக குடிபோதையூட்டப்பெற்றவர்கள், அக்குடிபோதையின் காரணமாக, தான் செய்யும் செயலின் தன்மையையும் தரத்தையும் அறியும் திறனற்ற நிலையில் செய்யும் செயல்களுக்கு தான் சட்டம் குற்றப்பொறுப்பிலிருந்து விலக்களிக்கிறது. 
[இந்திய தண்டனைச் சட்டம் section 85]





மற்றபடி மது குடித்து மதிமயங்கிப் புரியும் குற்றச்செயல்களை சட்டம் மன்னிப்பதில்லை. அதற்கு மது அருந்தியவர் பொறுப்பகின்றார். அவருக்கு குடிபோதை ஏற்படுத்தாமலிருந்தால் எந்த அறிவை அவர் பெற்றிருந்திருப்பாரோ அதே அறிவை அவர் பெற்றிருந்தாற் போன்றே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அவர் உள்ளாவார். 
[ இந்திய தண்டனைச் சட்டம் section 86]

000038. LEGAL NOTICE அறிவிப்பு என்றால் என்ன? எப்படி அனுப்புவது?

ஒரு செயலை செய்யக் கோரி அல்லது ஒரு செயலை செய்யாமல் இருக்கக் கோரி அல்லது செய்யப்படவிருக்கும் சில செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகளை குறித்து அறிவுறுத்தி, ஒரு நபர் மற்றொரு நபருக்கு எழுத்து மூலமாக கொடுக்கும் எச்சரிக்கை அல்லது தகவல் தான் "அறிவிப்பு" எனப்படுகிறது.

நாம் தாக்கல் செய்யப்போகும் வழக்கு எந்த வகையான வழக்காக இருந்தாலும், அதற்கு முன்பு மறு தரப்பினருக்கு வழக்கு மூலம் (Cause of Action) குறித்த அறிவிப்பு ஒன்றை கொடுப்பது நல்லது. ஏனென்றால் அறிவிப்பு கிடைக்க பெற்றவுடன் மறு தரப்பினர் சமாதானத்திற்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. பணிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மறு தரப்பினர் தனது நிலையை உணர்ந்து, அதை மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பதே அறிவிப்பின் நோக்கமாகும்.

அறிவிப்பு ஒன்றை சம்பந்தப்பட்ட தரப்பினர் அல்லது அவரது முகவர் (Agent) அல்லது அவரது வழக்கறிஞர் கொடுக்கலாம்.


  •  அறிவிப்பு இரண்டு விதம் உள்ளது.


1. சட்டப்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு (Statutory Notice (or) Mandatory Notice)

2. கடப்பாட்டிற்குரிய அறிவிப்பு
(Obligatory Notice)

இதில் சட்டப்படியிலான அறிவிப்பை கொடுக்க தவறினால், சம்மந்தப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதற்கு அது காரணமாக அமையலாம். ஆனால் கடப்பாட்டிற்குரிய அறிவிப்பை கொடுக்காமலும் வழக்கு தொடரலாம். இதில் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற அபாயம் இல்லை. அதாவது கடப்பாட்டிற்குரிய அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பது தரப்பினரின் விருப்பத்தை பொறுத்தது. இந்த அறிவிப்பை தரப்பினர் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்.

  • சட்டப்படியான அறிவிப்பிற்கு எடுத்துக்காட்டாக கீழ்க்கண்டவற்றை கூறலாம்.


1. அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முன் உ. ந. மு. ச பிரிவு 80 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு

2. சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 106 வது பிரிவின்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு

3. இரயில்வே சட்டத்தின் பிரிவு 106 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு

ஆகியன சட்டப்படி கட்டாயம் கொடுக்க வேண்டிய அறிவிப்புகள் ஆகும். இந்த அறிவிப்பு கொடுக்கப்படவில்லை என்றால் வழக்கே இல்லை என்று சட்டம் கூறுகிறது.

  • கடப்பாட்டிற்குரிய அறிவிப்புக்கு எடுத்துக்காட்டாக கீழ்க்கண்டவற்றை கூறலாம்.


1. கடனுறுதிச் சீட்டின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட கடன் தொகையை திரும்ப பெறுவதற்காக கொடுக்கப்படும் அறிவிப்பு

2. சரக்குகளின் விலைக்காக கொடுக்கப்படும் அறிவிப்பு

  • அறிவிப்பின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும்? Contents of Notice :


இப்படித்தான் அறிவிப்பு இருக்க வேண்டும் என்று கடுமையான விதிகளோ, படிவமோ ஏதுமில்லை. பொதுவாக நாம் தாக்கல் செய்ய இருக்கும் வழக்கின் பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒரு அறிவிப்பை தயாரிக்கலாம். எனினும் குறைந்தபட்சம் பின்வரும் விவரங்கள் ஒரு அறிவிப்பில் இருக்க வேண்டும்.

1. அறிவிப்பு தேதி

2. அறிவிப்பை யார் கொடுக்கிறாரோ அவரது பெயர் மற்றும் முகவரி

3. அறிவிப்பு யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவரது பெயர் மற்றும் முகவரி

4. பிரச்சினை குறித்த விபரம் (சுருக்கமாக)

5. அறிவிப்பிற்கான வழக்கு மூலம்

6. கோரப்படும் பரிகாரம்

7. பரிகாரத்தை நிறைவேற்ற தவறினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விபரம்

8. எவ்வளவு நாட்களுக்குள் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற விபரம்

9. அறிவிப்பு ஒரு வழக்கறிஞர் மூலமாக கொடுக்கப்பட்டால் அவரது கையொப்பம்

10. அறிவிப்பின் தலைப்பில் தேதி குறிப்பிடப்படாவிட்டால், கடைசியில் இடமும், தேதி விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.

  • அறிவிப்பு அனுப்பும் முறை (Service of Notice) :


யாருக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டுமோ, அவர் வசம் அதனை நேர்முகமாக கொடுக்கலாம். இல்லையென்றால் பதிவுத் தபாலில் அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் அனுப்பி வைக்க வேண்டும்.