Thursday, March 7, 2024

0083. On 29.02.2024 - Supreme Court refused to grant it permission to reopen Sterlite Copper

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட்

உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு

வரலாற்றில் நிலைத்து நிற்கும் மெட்றாஸ் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கம்

29.02.2024 ஆம் நாள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு மெட்றாஸ் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.

வரலாற்றில் நிலைத்த அத்தீர்ப்பு 18.08.2020 அன்று நெடிய வாத பிரதிவாதங்களுக்கு பிறகு தமிழகத்தின் மற்றும் தில்லியின் சிறந்த நட்சத்திர வழக்கறிஞர் பட்டாளங்களுடன் நடத்தப்பட்ட வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் வி.பவானி சுப்பராயன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

815 பக்கங்களில் மிக ஆழமான சட்ட மற்றும் சமூக புரிதல்களுடன் விளக்கமாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அவர்களால் எழுதப்பட்ட அத்தீர்ப்பு சுற்றுச்சூழல் வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகவும்¸ நீதிமன்றங்களது அபூர்வமான நேர்மறை சமூக பங்களிப்பில் ஒரு முக்கியமான பதிவாகவும் விளங்குகிறது.

1990களில் 102.50 ஹெக்டேர் நிலங்கள் சிப்காட் நிறுவனம் மூலம் செம்பு உற்பத்தி செய்யும் வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.

16.01.1995ஆம் ஆண்டு அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அத்தொழிற்சாலையை தொடங்க அனுமதி அளித்தது. பின்னர் 22.05.1995ஆம் நாள் அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீர் மற்றும் காற்று சட்டங்கள் கீழ் தொழில் தொடங்க அனுமதி அளித்தது.

தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 391 முதல் 900 டன் செம்பு உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்பட்ட அத்தொழிற்சாலையானது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய உற்பத்தி திறனைப் பெருக்கி 2006ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 1200 டன்கள் உற்பத்தி திறன் கொண்டதாகவும்¸ 2009ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2400 டன்கள் உற்பத்தி திறன் கொண்டதாகவும் மாறியது. வெளிநாட்டு சந்தைகளில் 1 கிலோ செம்பு 6 முதல் 8 டாலர்கள் விற்கும் சூழலில் நாள் ஒன்றுக்கு 19.20 மில்லியன் டாலர்கள் அல்லது நாள் ஒன்றுக்கு 14 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அத்தொழிற்சாலை திகழ்கிறது. செம்பைத் தவிர செம்புக் குச்சிகள்¸ செம்புக் கம்பிகள் தவிர கந்தக அமிலம்¸ பாஸ்போரிக் அமிலம் ஆகியவற்றையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அது விளங்கியது.

01.01.2009ம் தேதி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் போது பொதுமக்கள் மத்தியில் எவ்வித பொது விசாரணையும்¸ கருத்துகேட்கும் கூட்டங்களும் நடத்தப்படவில்லை.

ஒருசில நீதிமன்ற வழக்குகளுக்குப் பின்னர் 14.01.2016 அன்று தொழிற்சாலையை நடத்த வழங்கிய ஒப்புதல் 2023ம் ஆண்டு வரையில் தொடர்ந்தது. அதை தொடர்ந்து அந்நிறுவனம் நீர் மற்றும் காற்று சட்டங்களின் கீழ் அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பம் செய்தது. 14.03.2017ம் நாளில் நீர்ச் சட்டத்தின் கீழ் ஏழு மீறல்களும் காற்றுச் சட்டத்தின் கீழ் ஆறு மீறல்களும் கண்டறியப்பட்டன.

05.02.2018ஆம் ஆண்டில் குமாரரெட்டிபாளையம் அருகில் பொதுமக்களின் எதிர்ப்பு தீவிரமாக தொடங்கியது. 15.03.2018ஆம் நாளில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மக்கள் விண்ணப்பம் செய்தனர். 09.04.2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீர் மற்றும் காற்றுச் சட்டங்களின் கீழான அனுமதி புதுப்பிக்க வேண்டியதை நிராகரித்தது.

மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு 22.05.2018ஆம் நாள் அன்று போராட்டம் ஒன்று நடத்தப் போவதாக எழுந்த சூழல் காரணமாக,18.05.2018ஆம் நாள் வேதாந்தா நிறுவனத்தின் ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் எவ்வித ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடாது என தடையாணை வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவில் கூறி இருந்தது.

18.05.2018ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஒருவர் நிறுவனத்தின் வேண்டுகோளை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட்டார். அவ்வுத்தரவிலேயே தேவை ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 144இன் கீழ் தடை உத்தரவு வழங்கவும் பரிந்துரை செய்து இருந்தார்.

22.05.2018ஆம் ஆண்டு அன்று மக்கள் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தூத்துக்குடி மற்றும் பக்கத்து ஊர்களைச் சேர்ந்த மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதற்கு மறுநாள் 23.05.2018ஆம் நாள் மாசுக்கட்டுபாட்டு வாரியம் தொழிற்சாலையை மூட உத்தரவிட்டது. தொழிற்சாலை உரிமம் ரத்து செய்யப்பட்டது.

மேற்சொன்ன உத்தரவுகளை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிப்பேராணைகளை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளைத் தவிர தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

வேதாந்தா நிறுவன வழக்குகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன்;¸ மக்கள் அதிகாரத்தின் திரு.ராஜூ¸ மறுமலர்ச்சி திராவிட கட்சியின் தலைவர் திரு. வைகோ ஆகியோர்களும் எதிர்தரப்பினர்களாக முன்னிலையானார்கள்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் செம்பு உற்பத்தி தொழில் சிவப்பு வகைப்பாடு செய்யப்பட்ட பட்டியலின் கீழ் வரும் தொழில்களில் ஒன்று. அத்தொழிற்சாலையானது சட்டப்படி சிறப்பு தொழிற்சாலை மற்றும் இடர்விளையும் பகுதியில் அமைய வேண்டுமே தவிர (special industrial and hazardous zone) தவிர பொது தொழிற்சாலைப் பகுதியில் அமையக் கூடாது. இது தொடர்பான உத்தரவு 24.07.1974ம் நாள் அரசாணை எண். 1730இன்படி வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைந்துள்ள மீளவிட்டான் கிராமத்தில் பொது தொழிற்சாலை பகுதி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சுவாமிநத்தம் மற்றும் பழைய காயல் பகுதியில் மட்டுமே இடர் விளைய கூடிய தொழிற்சாலைகளை அமைக்க முடியும் என தூத்துக்குடி மாவட்ட பெருந்திட்ட வரைபடம் காட்டுகிறது. அத்திட்டத்தின் பகுதிகளை மாற்றுவது உள்ளுர் மக்களின் கருத்துகளை கேட்காமல் செய்யக்கூடியது அல்ல. எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைய கூடிய இடம் தகுதி இழப்பிற்கு உள்ளாகிறது என்ற நீதிபதி சிவஞானம் அவர்கள் எம்.சி.மேத்தா வழக்கின் 2004ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சட்ட மீறலை சட்டம் இயற்றும் அரசு நியாயப்படுத்த இயலாது என்ற கோட்பாட்டை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

09.04.2018ஆம் நாளிட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி ஒப்புதலை புதுப்பிக்க மறுத்தமைக்கு முதன்மைக் காரணங்களாக வெள்ள நீர் ஓடையான உப்பார் மற்றும் பட்டா நிலங்களில் செம்பு கழிவுகளை குமித்தமையும்¸ நிலத்தடி நீர் ஆய்வறிக்கைளை வழங்காமையும்¸ இடர்தரும் கழிவுகளை குவித்து வைத்தமையும்¸ ஜிப்சம் சேமிப்பு குட்டையை அமைக்காமையும் காரணங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டது.

காப்பர் ஸ்லாக் எனப்படும் செம்பு கழிவுகள் 3½ லட்சம் டன்கள் தனியார் நிலத்தில்; சேமிக்கப்பட்டது. இது தவிர பழைய கழிவுகள் 7¸47¸327 மெட்ரிக் டன்கள் அகற்றப்பட்டதாக வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டது. தொழிற்சாலைக்கு வெளியே 10 இடங்களில் கொட்டப்பட்ட செம்பு கழிவுகளின் எடை மட்டும் 5¸37¸765 மெட்ரிக் டன்களாக இருந்தது.

மேற்சொன்ன கழிவுகள் கொட்டுவதற்கு தனியார் நில உரிமையாளருடன் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அக்கழிவுகளை மழைக்கால வெள்ள நீர்ஓடைகளில் கலக்கவிடாமல்¸ நிலத்தை பாழ்படுத்தாமல் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் பொறுப்பு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை செம்பு கழிவுகள் ஆலைக்கு வெளியே 10 கிலோ மீட்டர் தொலைவில் கொட்டப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மேம்பாலம் அருகில் ஒரு சில குன்று போல தோற்றம் அளித்தது. அக்கழிவுகள் தூத்துக்குடியில் 2016ஆம் ஆண்டில் நடந்த வெள்ளப்பெருக்கு நிகழ்வுக்கு பெரும் காரணமாக அமைந்தது.

மழை நீர் ஓடைகளில் நீரோடுவதை மறிக்கும் விதத்தில் கழிவுகள் கொட்டப்பட்டதால் வெள்ள நீர் தூத்துக்குடி நகருக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் இடர்விளைவித்தது.

14.07.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் ஆறு வருடங்களுக்குப் பின்னர் திடீரென விழித்துக் கொண்டு சாதாரணமாக யாரும் எளிதாக பார்க்க கூடிய கழிவு குவியலைக் கண்டு கொள்ளாமல் போனதும்¸ மாசுக்கட்டுபாட்டு வாரியமும்¸ மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்களை மூடிக்கொண்டிருந்ததிற்கும்¸ அரசியல் மற்றும் அதிகாரிகளின் தலையீடு காரணமாகவா? என்பதையும் ஆய்வு செய்து அத்தவறுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர் .

2011ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் உயர்நீதிமன்றத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் இணைந்து அளித்த அறிக்கையில் மீளவிட்டான்¸ தெற்கு வீரபாண்டியபுரம்¸ சங்கரபேரி உள்ளிட்ட கிராமங்களையும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் தெற்கு பக்க கால்வாயையும் ஆய்வு செய்த போது 2002ஆம் ஆண்டிற்கு பிறகு அங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் குடித்தண்ணீருக்கு பயன்படுத்த முடியாதபடியும்¸ 2011ஆம் ஆண்டின் களஆய்வின் அப்பகுதி மக்கள் தங்களுக்கு கண் எரிச்சல்¸ மூச்சு திணறல் ஆகியன விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்வதாகவும் அந்நேரத்தில் மாசு ஏற்படுத்தும் வாய்வுகள் காற்று மண்டலத்தில் கலப்பதால் அவ்வாறு நிகழ்கிறது எனவும்¸ கழிவுகள் நீரோடைகள் கலப்பதாலும் கால்நடைகள் அந்நீரை குடித்து இறந்து போவதாகவும் தெரிவித்ததை நீதிமன்றம் பதிவு செய்தது.

1998ஆம் ஆண்டில் நீரி என்ற (NEERI) சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வு நிறுவனம் ஸ்டெர்லைட் நிறுவன கழிவுகளை மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு நிலையங்களை ஒழுங்காக நிறுவவில்லை எனத் தனது 07.11.1998 நாள் அறிக்கையின்படி தெரிவித்தது.

இது தவிர மிக முக்கியமாக ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த தகவலின்படி செம்பு உற்பத்தியின் போது பாதரசம் எனும் நச்சுத்தன்மை கொண்ட உலோகம் கழிவாக வெளியேறும் எனவும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின்படி பாதரசம் அகற்றும் கோபுரம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டுமெனவும் ஆனால் அங்கு கழிவாக உற்பத்தியாகும் பாதரசம் வளிமண்டலத்தில் காற்றோடு காற்றாக கலந்து ஆயிரக்காணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும் எனவும் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட அப்பாதரசத்தின் அளவானது குறைந்தது 25.91 மெட்ரிக் டன்கள் இருக்குமெனவும் கூறிய ஒன்பதாவது எதிர்மனுதாரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரின் கூற்றை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கொடைக்கானல் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 7.95 கிலோ எடையுள்ள பாதரசத்தை விதிகளை மீறி வெளியேற்றி மாசுப்படுத்தியதற்காக மூடப்பட்டதை சுட்டிக்காட்டியதையும் கருத்தில் கொண்டு இது தீவிர விசாரணை செய்ய வேண்டிய கூற்று எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதை கருத்தில் கொண்டு இருக்கவேண்டுமெனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் 374 பத்தியில் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் நடைமுறைகளின்படி மாசு அளவீடு செய்யப்படவில்லையெனவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ச்சியாக தாங்கள் சர்வதேச விதிமுறைகளை பின்பற்றுகிறோம் எனவும் கூறுவதை நீதிபதி கண்டித்து ஒழுங்குபடுத்துவர்களான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடைமுறை விதிகளை தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் நிறுவனம் கடைபிடிக்கவில்லையெனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

காற்றின் மாசின் அளவை கண்டறியப்பட அமைக்கப்பட்ட நிலையங்களை மாசுக்கட்டுப்பாடு ஒழுங்காக வாரியம் கண்காணிக்கவில்லையெனவும் அந்த அளவுகள் தவறாக இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார். குறிப்பாக 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை காற்றின் தரம் முறையாக கண்காணிக்கப்படவில்லையெனவும் அங்குள்ள தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்களுக்குள் எடுத்தாக கூறப்பட்ட தர அளவுகள் நிலையாக இருப்பதையும் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லையெனவும் அவ்வளவுகள் உண்மைக்கு மாறானவையாக இருக்கின்றன எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

2005ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீரி (NEERI) நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தணிக்கை அறிக்கையின் படி நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் காட்மியம்¸ குரோமியம்¸ செம்பு¸ ஈயம் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருப்பதையும் நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குள் அமைக்கப்பட்ட 40 ஏக்கர் ஜிப்சம் குட்டையில் ஒரு லட்சம் டன் ஜிப்சம் சேமிக்கப்பட்டு இருந்தது. இது தவிர நான்கு லட்சம் டன்கள் பழைய ஜிப்சமும் அங்கு சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. ஜிப்சம் குட்டைக்கு வெளியில் இருந்த கண்காணிப்பு கிணறுகளில் இருந்து எடுத்த தண்ணீரின் தரம் மிக குறைவாகவும் அதில் நச்சுத்தன்மை மிகுந்து இருந்ததையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்தது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த வண்ணப் புகைப்படங்களில் ஜிப்சம் குட்டைப் பகுதி பனிப்பொழியும் இடத்தைப் போல் தோற்றமளித்ததை நீதிபதிகள் கண்டனர். நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்பட்டதையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போதிய உட்கட்டமைப்பு வசதிகளின்றி இயங்குவதையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

2013ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இயங்க அனுமதித்திருந்தாலுங் கூட 2013ஆம் ஆண்டு முன்பாக நிகழ்ந்த நிகழ்வுகளை கருத்தில் கொள்ள முடியாது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

தொழிற்சாலை இயங்க இசைவாணை வழங்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொழிற்சாலை இயங்கும் வரை நடப்பில் இருக்குமெனவும் அந்த நிபந்தனைகள் நிரந்தரமானவை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 100 கோடி அபராதம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலையானது நீர் மற்றும் காற்றை தொடர்ந்து மாசுப்படுத்தி வந்ததாகவும் சாதாரண காற்றை விட தொழிற்சாலையில் 100 மடங்கு அதிகமான மாசு இருப்பதாகவும் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பொதுமக்களுக்குக் கூட கண் எரிச்சல்¸ மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கந்தகவாய்வு வெளியேற்றம் மூச்சு தொடர்பான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கண்டறிந்தது தீர்ப்பின் 408 வது பத்தியில் நீதிமன்றம் பதிவு செய்தது.

870 மெட்ரிக் டன்கள் மட்டுமே உற்பத்தி செய்ய இயலும் என்ற காலக்கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட உற்பத்தி திறனுக்கு மேலாகவே ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தி செய்வதாக மாசக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

மாசக்கட்டுப்பாட்டு வாரியம் நீர் மற்றும் காற்று சட்டங்கள் மீறல்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பை மட்டுமே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுப்பியும் அவ்விதி மீறலுக்கான தண்டனையை பெற்றுத்தராதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

செம்பு கழிவு அல்லது ஸ்லாக் ஒரு இடர்தரும் நச்சுபொருள் அல்ல என்ற மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதியானது ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கழிவு குவியலுக்கு பொருந்தாது எனவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனும் போது மிகையான செம்பு கழிவுகள் கொட்டப்படும் போது கிணறுகளிலும்¸ நிலத்தடி நீரிலும்¸ ஆர்சனிகழிவு மற்றும் காட்மியம் ஆகியன சேர்வதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

தொழிற்சாலை வளாகத்தை சுற்றி 250 மீட்டர் தூரம் பசுமை வளையம் ஏற்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை காரணமின்றி குறைக்கப்பட்டதையும்¸ 25 மீட்டர் பசுமை வளையமும் ஏக்கருக்கு 1000 மரங்கள் என்ற அளவில் நடப்படவேண்டும் என்ற நிபந்தனையானது மீறப்பட்டதையும் தொழிற்சாலை வளாகத்தை சுற்றி காற்று மாசுபடுவதை தடுக்கும் பசுமை வளையத்திற்கு பதிலாக மரங்கள் தீவுகளாக பல ஹெக்டேர்கள் பரப்பளவில் குடியிருப்பு பகுதிகளும் பிற பகுதிகளிலும் நடுவது காற்று மாசைத் தடுக்க பசுமை வளையம் அமைக்கப்படுவதின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ரஷ்யாவின் இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் 2 கி.மீ சுத்தமான பகுதி தொழிற்சாலையை சுற்றி அமைப்பதன் காரணத்தையும் அதை நிறைவேற்ற வழக்கிட்டு வெற்றி பெற்ற பெண்ணின் வழக்கையும் நீதபதிகள் சுட்டிக்காட்டினர்.

தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக 172.17 ஹெக்டேர் நிலங்கள் இருப்பதாக கூறிய வேதாந்தா நிறுவனம் உண்மையில் 102.31 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே வைத்திருந்தது எனவும் அங்குள்ள 60 தொழிற்சாலைகளில் இயங்கக்கூடிய நிலையில் உள்ள 51 சிவப்பு வகைப்பாட்டு தொழிற்சாலைகளில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போல அதிக நச்சுவாய்வுகளை வெளியிடுவது இல்லையென்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றையும் நீதிபதிகள் பதிவு செய்தனர்.

84 மீட்டர் உயர புகைக் கூண்டு அமைப்பதற்கு பதிலாக இரு கூண்டுகளைச் சேர்த்து 60.38 மீட்டர் கோபுர உயரம அமைந்ததாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை கூறுவது சரியல்ல எனவும்¸ புகைக்கூண்டின் உயரம் குறைவாக இருந்தால் கந்தக வாய்வு காற்றில் கலப்பது அதிகமாகும் எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

இது தவிர காற்றில் வெளியேற்றப்படும் நச்சுவாய்வின் அளவு அதிகப்படுத்துவதும் அந்த நச்சு வாய்வை வெளியேற்றும் கோபுரத்தின் உயரம் ஒற்றை கோபுரமாக 80 மீட்டர் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் பரிந்துரை செய்ததையும்¸ ஆனால் இரண்டு கோபுரங்கள் சராசரி 60 மீட்டர்களில் அமைந்து இருப்பது போதாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

முழுமையாக மூடப்பட்ட லாரிகளில் மூலப்பொருட்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை மீறி திறந்த தார்ப்பாயினால் அல்லது பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு மூடிய லாரிகளில் மூலப்பொருள்கள் எடுத்து செல்வதும் அது பாதுகாப்பற்று இருப்பதையும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர் .

செம்பு மூலப்பொருளில் ஆர்சனிக் நச்சு பொருள் இருப்பதால் அது உடல்நல குறைவையும் புற்று நோயையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதையும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு உடல்நல குறைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதையும் அதன் காரணமாகவே குறைந்த தரமுடைய செம்புக் கனிமம் அல்லது மூலப்பொருள் 'முட்டாள்களின் தங்கம்' என அழைக்கப்படுவதையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

வேதாந்தா நிறுவனம் இறக்குமதி செய்யும் செம்புக் கனிமத்தின் தரத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனையிடுவதில்லையெனவும் நீதிமன்றம் கூறியது.

சுற்றுச்சூழல் உணர்வற்ற வேதாந்தா நிறுவனம் இன்று வரையில் பசுமை வளைய நிபந்தனைகளை கடைப்பிடிக்கவில்லையெனவும் 1995 ஆம் ஆண்டிலிருந்து 2018 வரை முறையான அனுமதியில்லாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கியது அதிர்ச்சி தருகின்ற உண்மையெனவும் நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர். தீர்ப்பின் 516ம் பத்தியில் பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாய உத்தரவுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கியதையும் இசைவாணை இல்லாமலேயே 01.04.2000 முதல் 18.04.2005 வரை தொழிற்சாலை இயங்குவதையும் 16 வருடங்கள் 92 நாட்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்; இசைவாணை இல்லாமல் இயங்கிய ஸ்டெர்லைட் தொழிற்சாலை 10 வருடங்கள் 2 மாதங்கள் 15 நாட்கள் இடர்தரும் கழிவு மேலாண்மை அனுமதி இல்லாமல் இயங்கியதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை கண்காணிக்க வேண்டிய¸ சீர்செய்ய கூடிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒழுங்குப்படுத்துவதற்கு மாறாக கையறு நிலையில் இருந்ததையும்¸ ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் முந்தைய நடத்தைகளை கருத்தில் கொண்டு அரசு அதை மூட உத்தரவிட்டதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

2017-2018ஆம் ஆண்டுகளில் உற்பத்தியான செம்பு உற்பத்தியின்போது துணை பொருளாக உருவான 721.59 மெட்ரிக் டன் ஆர்சனிக் கனிமத்திற்கு கணக்கு இல்லையென்றும் அந்த ஆர்சனிக்கானது சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் எனவும், வேதாந்தா நிறுவனம் செம்பு கனிமத்தை வேறு வேறு நாடுகளில் இருந்து பெறும் போது அதிலுள்ள ஆர்சனிக் வேதி பொருளின் அளவு மாறுபடும் எனவும் ஆர்சனிக் ஒரு இடர்தரும் கழிவு பொருள் எனவும் இடர்தரும் கழிவுப்பொருளின் மேலாண்மை அனுமதியில்லாத போதிலும் செம்பு உற்பத்தியின் துணை பொருளாக உருவான ஆர்சனிக் எவ்வித கட்டுப்பாடுமின்றி வெளியேற்றப்பட்டதையும் 2004ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வு குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலை வளாகத்திலேயே ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள ஆர்சனிக் அடங்கிய செம்பு கழிவுகள் குவித்து வைக்கப்பட்டதையும் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறமாலேயே ஆலை விரிவாக்கப்பட்டு இருந்ததால் நீர் மற்றும் காற்றுச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டுமென நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

இடர்தரும் கழிவுகளை கையாளும் உட்கட்டமைப்புகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இல்லையென்பதையும் குவித்து வைக்கப்பட்டுள்ள செம்புக்கழிவுகளிலிருந்து கழிவு நீர் கசிவு ஏற்படுவதால் அவற்றிலிருந்து ஆர்சனிக் கசிந்து நிலத்தை அடைவதையும் மறுக்கமுடியாது எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இடர்தரும் கழிவுகளை மகராஷ்ட்டிராவில் உள்ள திருவாளர் சுகான்ஸ் கெமிக்கல் நிறுவனத்திற்கு கொடுத்த போதிலும்¸ சுகான்ஸ் கெமிக்கல் நிறுவனம் பெருமளவிலான இடர்தரும் கழிவுகளை கையாள அனுமதி பெறவில்லையெனவும்¸ தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இடர்தரும் கழிவு மேலாண்மை விதிமுறைகளை பின்பற்றவில்லையெனவும்¸ சுகான்ஸ் கெமிக்கல் நிறுவனத்தின் கழிவு கையாளும் திறன் நிக்கல் கழிவுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்ட கழிவு மேலாண்மை நடைமுறைகள் திருப்தியளிப்பதாக இல்லையெனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

23.03.2013 அன்று உருக்காலை கூரையில் குளிரூட்டி குழாயில் ஏற்பட்ட ஓட்டைக்காரணமாக உருக்காலை மூடப்பட்டதாகவும் அதிகாலை 4 மணியளவில் மாற்று வழியில் செம்புக் கரைசல் செலுத்தப்பட்டதாகவும் அந்நேரத்தில் காற்றின் திசையால் கந்தக வாய்வு தூத்துக்குடி நகருக்குள் புகுந்து பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது. அந்நேரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று கவனிப்பு மையத்துடன் ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக வாய்வு வெளியேற்றக் கண்காணிப்பு கருவியுடன் இணைக்கப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையின் காற்று வாய்வு வெளியேற்ற அளவு குறித்த அறிக்கைகள் கையால் எழுதப்பட்டதாக இருப்பது மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை தங்களது தொழிற்சாலையில் புகுத்தியதாக கூறிய போதும் வேதாந்தா நிறுவனத்தின் அறிக்கைகள் கையால் எழுதப்படுவது நம்பும்படியாக இல்லை. கந்தக வாயு வெளியேறிய நிகழ்வுக்காக 5 நாட்கள் 133 குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.

ஸ்டெர்லைட் நிறுவனம் கந்தகவாய்வு கசிவின் போது தங்கள் நிறுவன மென்பொருள் சரிசெய்வதற்காக சில பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டிய இருப்பதால் அவ்வாறு சரி செய்வது வரையில் தங்களது மென்பொருளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மென்பொருளுடன் இணைக்க முடியவில்லை என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்பதும் காற்றின் தர பரிசோதனை கருவியானது கூடுதல் அளவு எதையும் பதிவு செய்யவில்லை என்று கூறுவது ஸ்டெர்லைட் நிறுவனத்தை பொறுப்பிலிருந்து விடுவிக்காது எனவும் 5 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பொது மக்களை கண் எரிச்சல் ஏற்பட்டு அவர்கள் மருத்துவர்களிடம் சென்றதும் பொதுமக்களை பரிசீலித்த மருத்துவர்களும் வாக்குமூலங்கள் கொடுத்து இருப்பது அந்நிகழ்வை உறுதி செய்கிறது என்றது உயர்நீதிமன்றம் .

ஐந்து நாட்கள் தொழிற்சாலையை மூடி மறுபடியும் தொடங்கியதை மாவட்ட நிர்வாகம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவிக்கவில்லை என்றும் 2008ஆம் ஆண்டில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் சமூக மருந்தியல் துறை நடத்திய ஆய்வறிக்கை ஒன்றில் தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் 80725 பேர்களை பரிசோதனை செய்ததில் மூளை கட்டிகள் ஏற்படும் விகிதம் ஆயிரக்கணக்கான மடங்கு தேசிய அளவைவிட அதிகமாகவும் 12.6 விழுக்காடு மரணங்களையும் நரம்பியல் நோய்களையும் பிற நோய்களையும் கண்டறிந்தனர்.

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தங்களது 4000 தொழிலாளர்களுக்கு எவ்வித சுகாதார இடர்பாடுகளும் நேரவில்லை என்ற கூற்றை நிராகரித்த நீதிமன்றம் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியின் அறிக்கையை ஏற்றுக் கொண்டது.

எம்.சி.மேத்தா¸ வேலூர் சிட்டிசன் வெல்பர் அசோசியேஷன் வழக்கு¸ இந்தியன் கவுன்சில் பார் லீகல் ஆக்சன் வழக்கு¸ திருப்பூர் டையிங் அசோசியேஷன் வழக்கு போன்ற ஏராளமான வழக்குகளை அலசி ஆராய்ந்த உயர்நீதிமன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொருளாதார நலன்களை விட மேலானது என கூறியது.

முன்னெச்சரிக்கை கோட்பாடு தங்கள் வழக்குக்கு பொருந்தாது என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாதத்தை மறுத்த உயர்நீதிமன்றம் 2013ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாசுப்படுத்துபவர் காசுகொடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டின்படி 100 கோடி ரூபாய் ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள்¸ பொதுமக்கள் போராட்டத்தின் விளைவால் முழங்காலில் தட்டினால் காலை உதறும் நிலை போல நிகழ்ந்தவை அல்ல என்றும்¸ ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக. சமூகவலைதளங்களில் உலா வந்த செய்திகளை வதந்திகள் எனக் கூறுவதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

1997லிருந்து 2018 வரையில் தொழிற்சாலை வளாகத்தில் நடந்த ஏராளமான விபத்து மரணங்களையும் நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் நாட்டின் செம்பு தேவையை இறக்குமதியும் உள்நாட்டில் உள்ள வேறு தொழிற்சாலைகளும் நிறைவு செய்யும் எனவும்¸ மாநில அரசோ மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ கெட்ட நோக்கத்தினால் தொழிற்சாலை மூடி விட்டதாக கூறாதாத காரணத்தாலும்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிறுவனங்கள் மீறியதாகவும் தூத்துக்குடியைத் தவிர மகாராஷ்டிராவிலும் இதே போல் மாசு ஏற்படுத்தியதால் மக்கள் கிளர்ச்சியால் தொழிற்சாலை அங்கிருந்து அகற்றப்பட்டதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் பேராட்டங்கள் ஒரு சிலரால் மட்டும் எடுக்கப்படுவதாகவும், தூத்துக்குடி சென்னையை விட பாதுகாப்பானது என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பத்தாவது தொகுப்பில் இதுகாறும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் அரசியல் கட்சிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொடுத்த புகார்களை கருத்தில் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி நகர் இந்தியாவிலேயே மாசுபட்ட நகர்களில் தமிழ்நாட்டிலுள்ள ஒரே நகராக விளங்குவதையும்¸ எனவே தூத்துக்குடி சென்னையை விட பாதுகாப்பானது என்ற வாதம் தவறானது எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

திருமிகு. பாத்திமா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு 21547 /2019 ஆலையை முற்றிலுமாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற வேண்டுகோளைக் கொண்டிருந்தது. அந்த நீதிப்பேராணையானது மதுரை உயர்நீதிமன்றத்தில் சிப்காட் நிறுவனம் நில ஒப்படைப்பை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த நீதிப்பேராணையுடன் மதுரையில் விசாரிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் காற்று மற்றும் தண்ணீர் சட்டங்களின் கீழ் இசைவாணைகளை புதுப்பிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகள் செல்லும் என உறுதி செய்தது.

இது தவிர தொழில் பாதுகாப்பு இணை இயக்குநர்¸ பாய்லர் இயக்குநர்¸ தீயணைப்பு துறை இயக்குநர் ஆகியோர் ஆலைக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ததையும் நீதிபதிகள் உறுதி செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்த நீதிப்பேராணையையும் தள்ளுபடி செய்தது. 18.08.2020 அன்று இந்தியா சுற்றுச்சூழல் சட்ட வரலாற்றில் நிலைத்து நிற்கும் தீர்ப்புகளில் ஒன்றாக உயர்நீதிமன்றம் வழங்கியது.

அத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றாது என்று நம்புவோம் என 2020 ஆம் ஆண்டில் மக்கள் விரும்பியபடி 2024 ஆம் ஆண்டில் மெட்றாஸ் நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

No comments:

Post a Comment