Tuesday, May 22, 2018

000055. பிரிவு 26 முதல் 52 - இந்திய தண்டனைச் சட்டம் 1860

26 - நம்பத்தகுந்த காரணம்

27 – மனைவி, எழுத்தர், வேலையாட்களிடம் உள்ள சொத்து

28 – கள்ளத் தயாரிப்பு

29 – பத்திரம் – ஆவணம்

29 A – மின்னணுப் பதிவுரு

30 – மதிப்பாவணம்

31 – உயில்

32 – செய்கைகளைக் குறிக்கின்ற சொல் சட்டத்திற்கு மாறாக விடுகைகளை உள்ளடக்கும்.

33 – செய்கை அல்லது விடுகை

34 – பொதுவான உட்கருத்தை மேல்நடத்தும் வகையில் பல்வேறு ஆட்களால் செய்யப்பட்ட செய்கை

35 – அத்தகைய செய்கை குற்றமுறு அறிவுடன் அல்லது உட்கருத்துடன் செய்யப்படுகின்ற காரணத்தால் அது குற்ற செய்கையாக இருக்கும்போது

36 – பகுதி செய்கையாலும் பகுதி விடுகையாலும் உண்டாக்கப்பட்ட விளைவு

37 – பல்வேறு செய்கைகளில் ஒன்றை செய்வதன்மூலம் ஒத்துழைத்தலானது ஒரு குற்றமாக அமைகிறது.

38 – குற்ற செய்கையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் வெவ்வேறு குற்றங்களை செய்தவர்களாகலாம்.

39 – தன்னிச்சையாக - என்பதன் விளக்கம்

 40 – குற்றம் - என்பதன் விளக்கம்

41 – சிறப்பு சட்டம் - என்பதன் விளக்கம்

42 – வட்டார சட்டம் - என்பதன் விளக்கம்

43 – சட்டத்திற்கு மாறாக செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர்

44 – கேடு (அ) ஊறு (அ) துன்பம்

 45 – உயிர் என்பது மனித உயிரையே குறிக்கும். வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.

46 – மரணம் என்பது இந்த சட்டப்படி மனிதருடைய மரணத்தையே குறிக்கிறது. வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.

47 – மிருகம் என்பது மனித உயிர் தவிர மற்ற உயிர் வாழும் ஜந்துக்களைக் குறிக்கிறது.

48 – கப்பல்

49 – ஆண்டு, மாதம் என்பது ஆங்கில ஆண்டு மற்றும் ஆங்கில மாதத்தினைக் குறிக்கும்.

50 – பிரிவு – எண்களிட்டு காட்டப்பட்டிருக்கும் இந்த சட்டத் தொகுப்பின் பகுதியைக் குறிக்கும்.

51 – பிரமாணம்

52 – நல்லெண்ணம்

52 A – புகலிடம் தருதல்

000054. கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்டையும் வரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

.போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதியிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுக்கப்பட்டுள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல், ஆவணம் தயாரித்தவர் என்று அனைவரும் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

Monday, May 21, 2018

000053. தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI)

 1. “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்திரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்த வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட  எந்த கேள்விகளையும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்? எடுத்துக்காட்டாக:

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில்  (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும்?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘பசுமை வீடுகள் திட்டம்’, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘நமக்கு நாமே திட்டம்' ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது? என்னென்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலத்திட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்னென்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்?

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச் சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்னென்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும்? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும்? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம்,
முதல் மாடி, ( வானவில் அருகில் )
பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை,
( தபால் பெட்டி எண் : 6405 ) தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580

Email : sic@tn.nic.in

http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :-

Shri Satyananda Mishra Chief Information Commissioner,
Room No.306, II Floor, August Kranti Bhavan, Bhikaji Cama Place,
New Delhi – 110 066. Phone:- 011 – 26717355
E-mail :- s.mishra@nic.in

http://cic.gov.in/

குறிப்பு :- மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தந்த தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல் செய்யலாம். சகோதரர்களே! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது

000052. புரோ நோட்டு எனப்படும் கடன் உறுதிச் சீட்டு

ஒருவர் மற்றொருவரிடம் கடன் வாங்கியதற்கு அத்தாட்சியாக எழுத்து மூலம் உறுதி செய்துகொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற தாளையே,  PROMISSORY NOTE  என்று  கூறுகிறோம்.  தமிழில் சுருக்கமாக “புரோநோட்” என்று சொல்கிறோம்.

கடன் கொடுத்தவர் கடனை கேட்டவுடன் கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி வாங்கிய கடனை அவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும். இதுவே இந்த புரோ நோட்டின் சாராம்சம் ஆகும்.

மாற்றுமுறை ஆவணச் சட்டம், நான்காவது விதியில் புரோ நோட்டு பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.

புரோ நோட்டின் சிறப்பு

இதனை முத்திரைத் தாளில் எழுத வேண்டியதில்லை.

எங்கும் பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை.

சாட்சிகளிடம் முதலிலேயே கையெழுத்து வாங்க வேண்டியதில்லை.

ரூ.50,000/- வரை கடைசி நேரத்தில் நிரப்பிக் கொள்ளலாம்.  

சாதாரணத் தாளில் எழுதி, ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதுமானது.

கடன் கொடுப்பவர் நிபந்தனைகள் விதிக்க வேண்டியதில்லை.

முக்கிய விதிகள்

கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி, வாங்கிய  கடனை, கேட்டவுடன்  கடன் கொடுத்தவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும். 

ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல், கடன் வாங்கியவர் புரோ நோட்டில் கையெழுத்து போட்டால் அந்த புரோ நோட்டு செல்லாது.

நிபந்தனைகள் விதிக்கப்பட்ட புரோ நோட்டுகள் செல்லாது.

புரோ நோட்டு எழுதப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு செல்லாது.

கடன் வாங்கியவர் வட்டியோ அல்லது அசலோ கடன் பெற்றவரிடம் கொடுக்கும் போது புரோ நோட்டின் பின்புறத்தில் எழுதி அவரது கையெழுத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.

அசலும் வட்டியுமாக மொத்தத் தொகையையும் கடன் வாங்கியவர் செலுத்திவிட்டால், புரோநோட்டில் கடன் கொடுத்தவரிடம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.

முழுப்பணமும் செலுத்திய பிறகு, எக்காரணத்தை முன்னிட்டும் புரோ நோட்டை வாங்க மறக்கக் கூடாது.

 புரோநோட்டை வாங்காமல் விட்டுவிட்டால், கடன் கொடுத்தவர், அதனை வேறு ஒருவருக்கு ”மேடோவர்” முறையில் எழுதிக் கொடுத்துவிட வாய்ப்பு உண்டு.

வட்டி மற்றும் அசல் கடன் வாங்கியவர் செலுத்தும்போது, அதனை பெற்றுக்கொண்டு கடன் கொடுத்தவர் தருகின்ற ரசீது செல்லாது.

கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியாது. சிவில் வழக்கு தான் போடவேண்டும்.

000051. பொதுக்குழுக் கூட்டம் - சட்டம் என்ன சொல்கிறது?

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் - பிரிவு:26

பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஒரு முறையாவது பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும். கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்னர் 21 நாட்களுக்கு முன்னதாக அந்த பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுவது குறித்து பதிவு செய்யப்பட்ட சங்கமானது தனது உறுப்பினர்களுக்கு அறிவிப்பு கொடுத்தல் வேண்டும். அந்த அறிவிப்பில் கூட்டம் நடக்கும் நாள், நேரம், இடம் ஆகியவற்றையும், கூட்டத்தின் குறிக்கோளையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மேலும் பைலாவில் அடங்கியுள்ள துணை விதிகளுக்கு அல்லது குறிக்கோளுக்கு திருத்தம் ஏதாவது கொண்டுவர  மேற்படி சங்க நிர்வாகிகள் நினைத்தால், அத்தகைய திருத்தத்தின் நகல் ஒன்றையும் இணைத்து தெரிவிக்க வேண்டும். மாவட்டப் பதிவாளர் அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னிலையாக தமக்கு கீழுள்ள ஒரு அலுவலரை நியமிக்கலாம். 

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் - விதி எண்:25

பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் பிரிவு:26ன் கீழ் கூட்டப்படுகின்ற பொதுக்குழுக் கூட்ட அறிவிப்பை அநதக் கூட்டம் நடைபெற உள்ள நாளுக்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டும். கீழ்காணும் முறைகளில் ஒன்றால் அல்லது பலவற்றால் உறுப்பினர்களுக்கு அந்த அறிவிப்பை அனுப்ப வேண்டும்.
உள்ளூர் தபால் சேர்ப்பிப்பு வழியாக; அல்லது தபால் மூலமாக; அல்லது உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை வழியாக; அல்லது அரசு இதழ் விளம்பரம் வழியாக

Sunday, May 20, 2018

000050. பொய் சாட்சியம் புனைதல்

நமது நாட்டில் தண்டணைக்குரிய தப்பை செய்துவிட்டு   ”பணம் படைத்தவர்களும், அரசியல்வாதிகளும், ரௌடிகளும்” தைரியமாக, உலாவிக் கொண்டு இருப்பதற்குக் காரணமான சட்டப் பிரிவு என்று ஒன்று உண்டென்றால் அது இந்திய தண்டணைச் சட்டம் 192 வது பிரிவு தான். 

தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சி செய்து முனையும் போது அவர்களை காவல் துறையினர் தடம் மாற, தடுமாற வைப்பது இந்தப்  பிரிவின் மூலமாகத்தான். இந்தப் பிரிவை நாம் தெரிந்து கொண்டு பயன்படுத்தாமல், சட்ட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான், நாட்டில் குற்றங்கள் பெருக வழி வகுக்கிறது. பொதுவாக காவல் நிலையத்தில் நாம், கடும் தண்டணைக்குரிய ஒரு குற்றம் சம்பந்தமாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால், முதலில் அதனை வாங்கவே மாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் அதற்குரிய ஒப்புதல் ரசீது (CSR) தரமாட்டார்கள். ரசீது தந்தாலும் விசாரணை செய்ய மாட்டார்கள். ஒருவேளை விசாரணை நடத்தினாலும், முதல் தகவல் அறிக்கை (F.I.R) பதிவு செய்ய மாட்டார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை (Police Report) தாக்கல் செய்ய மாட்டார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலும், எத்தனை ஆதாரங்களை நாம் அளித்திருந்தாலும் எதிரி குற்றமே செய்யாதது போல் பொய் சாட்சியங்களை புனைந்து அந்த வழக்கை முடித்து வைத்து விடுவார்கள்.

இதனைக் கடந்து  போவதற்கு  சட்டம் நமக்கு வழி வகுத்திருந்தாலும், இந்தப்பிரிவானது காவல்துறையினர் மூலம் நமக்கு தடங்கலை ஏற்படுத்தி விடுகிறது. பலர் துவங்கி விடுகிறார்கள். அதற்கு அடுத்துச் செல்ல தயங்குகிறார்கள். இதனைக் கடந்து சென்று எதிரிக்கு தண்டணை வாங்கித் தருகின்ற போராளிகளும் கூட, பொய்சாட்சியம் புனைந்த காவல் துறையினர்க்கு தண்டணை வாங்கித்தர வாய்ப்புகள் இருந்தும், ஏனோ அதுபோன்ற  நடவடிக்கை எதுவும் எடுக்காமல், எதிரிக்கு தண்டணை வாங்கித்தந்த திருப்தியில் பேசாமல் இருந்து விடுகிறார்கள். 

பொய்  சாட்சியம் புனைந்த காவல் துறையினருக்கு சட்டப்போராளிகள் இந்தப் பிரிவின் மூலம் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுத் தரலாம். அவ்வாறு சிலர் செய்தாலே போதும். பொய்சாட்சியம் புனைவதற்கு காவல் துறையினர் பயப்படுவார்கள். நமது நாட்டில் குற்றங்கள் குறையும். நீதி தழைக்கும்.

 அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பிரிவில்? வாருங்கள் பார்க்கலாம்!

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-192

புத்தகம் அல்லது பதிவேடு (Document)  அல்லது மின்னணுப் பதிவுறு (Online Certificates) ஆகியவற்றில் சூழ்நிலை அல்லது பொய்யான பதிவு எதையேனும் அல்லது  பொய்யுரையைக் கொண்ட பத்திரங்கள் எதையேனும் ஒரு நீதிமன்ற நடவடிக்கையில் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் ஒரு சாட்சியத்தின்படி தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும் போது, அந்த சாட்சியத்தில் தவறான எண்ணம் கொள்ளுமாறு உட்கருத்துடன் பொய்யான கருத்துக்களை புனைந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்ற எவர் ஒருவரும் பொய் சாட்சியம் புனைபவர் ஆவார்.

இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-193

ஒரு நீதிமன்ற நடவடிக்கைகளின் எந்தக் கட்டத்திலும், உட்கருத்தோடு பொய் சாட்சியம் தருகின்ற அல்லது ஒரு நீதிமன்ற நடவடிக்கைகளின் எந்தக் கட்டத்திலும் பொய் சாட்சியம் புனைகின்றவர் யாராக இருந்தாலும், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து தண்டிக்கப்படுவார்கள். மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

000049. அரசு அலுவலங்களில் தகவல் அறியும் உரினமச்சட்டத்தின் ஆவணங்கனள ஆய்வு செய்தல் மற்றும் தகவல்கனள குறிப்பு எடுத்தல் நகல் எடுத்தல்

சம்மந்தமான மாதிரி மனு அமைப்பு : 

2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம்

நேரில் சார்பு செய்யும்

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர் :                         கடித எண். _ /  _, நாள். 
                                                        
பெறுநர் :

திரு. பொது தகவல் அலுவலர் அவர்கள்,

(தகவல் அறியும் உரிமை சட்டம் 2005)

பொருள் :     தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா அவர்களுக்கு,

பார்வை  :   
…………………………………..

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.

மேற்படி பார்வையில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி, ரூ. 10/-க்கான நீதிமன்ற கட்டண வில்லையுடன், தங்களுடைய அரசு  அலுவலக வேலை நேரமான, இன்று _-_-_, காலை ____-க்கு நேரில் தாக்கல் செய்கிறேன்.

ஆகவே, இவ்-விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்டு, மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட அறிவிப்பில் தொடர்புடைய கோப்பில் உள்ள அனைத்து ஆவணங்களை ஆய்வு செய்து, தேவைப்படும் ஆவணங்களை, சட்டப்பிரிவு  2 (ஒ) (2)-ன் படி எனது சொந்த செலவில் நகலெடுத்து, அதனை தாங்கள், சான்றொப்பமிட்டு வழங்க வேண்டுகிறேன்.

மேற்படி விண்ணப்பம் மறுக்கப்பட்டாலோ / நிராகரிக்கப்பட்டாலோ, மனுதாரர் ஆகிய எனது உரிமை மறுக்கப்படுகிறது / தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-யினை தாங்கள் ஏற்கவில்லை என பொருள் கொண்டு, உரிய நிவாரணம் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக கருதுகிறேன்.

நன்றி ஐயா, வணக்கம்.

இடம் :    

நாள் :                                               மனுதாரர்.

குறிப்பு : மனுதாரரின் / புகார்தாரரின்கடித எண், மற்றும் நாள் போன்றவற்றினை குறிப்பிட்டு பதில் தரவும்.