Sunday, May 20, 2018

000048. இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் குற்றம்!

குற்றம் குற்றமே!

நினைப்பது எல்லாம் நடப்பதில்லை. செய்வது எல்லாம் ஜெயிப்பதில்லை. இது குற்றம் புரிபவர்களுக்கும் பொருந்தும். அதனால், அவர் குற்றம் செய்யவில்லை, குற்றம் செய்வதற்கு முயற்சிதான் செய்தார்! இதனால், யாருக்கும் எந்தவித இழப்பும் இல்லை!, எந்தவித நஷ்டமும் இல்லை! என்று யாரையும் சட்டம் தண்டிக்காமல் விடாது. அப்படிச் செய்தால் அவர்கள் கண்டிப்பாக மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்ய முயற்சி செய்வார்கள். ஆகையால், குற்றம் செய்வதற்கு முயல்வதையும் ஒரு தனிக்குற்றமாக இந்திய தண்டணைச் சட்டம் எடுத்துக் கொள்கிறது. 

”சரி, சரி விடுப்பா. ஏதோ தெரிஞ்சோ, தெரியாமயோ நடந்திருச்சி, ஒனக்கு ஒண்ணும் ஆகலல்ல! அவன் இனிமே அப்படிச் செய்யமாட்டான்!” ன்னு கிராம பஞ்சாயத்துகளில் நாட்டாண்மை என்பவர் பேசுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். 

இந்திய தண்டணைச் சட்டமானது ஒரு குற்றச் செயலுக்கான முயற்சியைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கும் தண்டணை உண்டு. திருடுவது குற்றம் என்றால், கொலை செய்வது குற்றம் என்றால், திருடுவதற்கு, கொலை செய்வதற்கு முயற்சி செய்வதும் குற்றம்தான்.

பொதுவாக ஒரு குற்றச்செயலை அரங்கேற்ற வேண்டுமென்றால், நான்கு விதமான நிலைகளை குற்றம் செய்பவர் கடக்க வேண்டியதிருக்கும்.

1. கருத்து:
ஒருவரின் எந்த ஒரு செயலுக்கும் முதல் காரணமாக இருப்பது அவரது எண்ணங்களே ஆகும். ஆனால், செயல் எதுவுமே நடைபெறாமல், ஒருவர் குற்றம் செய்ய நினைத்தார்! என்பதை மட்டும் வைத்து அவரை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது. 

2. முன்னேற்பாடு:
ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு திட்டமிடுவதோ, நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதோ முன்னேற்பாடு என்கிறோம். இந்த முன்னேற்பாடுகளால் பொது மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாத காரணத்தால், சட்டத்தின் கீழ் இதனை தண்டிக்க முடியாது.

3. முயற்சி:
ஒருவர் ஒரு குற்றச்செயலை செய்வதற்கு இது மிகவும் அவசியம். தனது எண்ணத்தின்படி திட்டமிட்டு, ஒரு குற்றச் செயலை ஒருவர் செய்வதற்கு முயற்சி செய்கிறார். அது வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. தோற்றாலும் கூட அது சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். இந்த முயற்சியின் காரணமாக தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அல்லது பொது மக்களின் உடலுக்கும், உடைமைக்கும் ஏதோ ஒரு வகையில் தீங்கு, அழிவு ஏற்படுகிறது. எனவே இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் கீழ், இதனை தண்டிக்கிறது.

4. செயல்:
முதலில் மனதில் நினைக்கப்பட்டு, அதற்காக சில முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அதனை முடிப்பதற்கு முயற்சி செய்யப்பட்டு, இறுதியில் ஒரு குற்றச் செயலானது ஒருவரால் அல்லது பலரால் முடிக்கப்பட்டுகிறது. குற்ற முயற்சியையே தண்டிக்கும் சட்டமானது குற்றச் செயலை தண்டிக்காமல் எப்படி விட முடியும்? இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் மூலமாக அந்தக் குற்றங்களுக்கு ஏற்றாற்போல கடுமையான தண்டணைகளை வழங்குகிறது

000047. U. D. R - பட்டா என்றால் என்ன?

யூ. டி. ஆர் பட்டா ஆங்கிலத்தில் - Updating Registry Scheme என்று அழைக்கப்படுகிறது. தமிழில் "நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம்" ஆகும். 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம்  01.06.1979 - ல் துவக்கப்பட்டது  தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவில் உள்ள மாசார்பட்டியில் முதன்முறையாக செயல்பட ஆரம்பித்தது. இந்தமுதல் முயற்சிக்கு பிறகு மெல்ல தமிழகம் முழுவதும் 30.4.1987 வரை நில உடைமையில் பல மாற்றங்கள் நடந்தன.

உலகம் தோன்றியது முதல் நிலங்கள் இருக்கிறது. மன்னராட்சி காலத்தில் நிலங்கள்அனைத்தும் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு நிலங்கள் மக்களுக்கு சொந்தமாச்சு. இந்த நிலங்களை அரசு 30 வருடங்களுக்கு ஒருமுறை வரையறை செய்ய வேண்டும் என்பது சட்ட விதியாகும். ஆனால் அரசு ஆள் பற்றாக்குறையை காரணமாக காட்டி நிலங்களை ஆய்வு செய்யாமல் இருந்தது. அதன் பிறகே 1979 ம் ஆண்டு இந்த யூ. டி. ஆர் பட்டா திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின்படி அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாக  சென்று விசாரணை நடத்தி "இன்னார் நிலம்" என வரையறை செய்து பட்டா வழங்கினார்கள். அதற்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள், நிலத்துக்கு சொந்தக்காரர்கள் என அனைவருக்கும் இந்த யூ. டி. ஆர் திட்டத்தை பற்றி நில அளவையர் விளக்கம் கொடுப்பார். இந்த திட்டத்தின்படி பட்டாவை அவரவர்  வீட்டுக்கு சென்று அதிகாரிகள் வழங்கினார்கள். இந்த பட்டாக்கள் உடன் தோராய வரைபடமும் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே கூட்டுப்பட்டாக்களாக இல்லாமல் தனிநபர் பட்டாவாக மாற்றப்பட்டது தான். பட்டா புத்தகத்தில் புகைப்படம் ஒட்டப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தால் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டது. நிறைய  நில உரிமையாளர்களின் பெயர்கள் விடுபட்டு போனது. பெயர்கள் மாற்றி எழுதப்பட்டது. நிறைய உரிமையாளர் பெயர்கள் எழுதாமலே விடப்பட்டது. கோவில் நிலங்களும் தவறாக பட்டா போடப்பட்டது.

மொத்தத்தில் யூ. டி. ஆர் திட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விட்டது என்று கூறலாம்

000046. கிராம நிர்வாகம் அடிப்படைகள்

1. FMB என்பதன் விரிவாக்கம்?
★Field Measurement Book

2. S.T (Scheduled Tribes) வகுப்பினர்க்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
★கோட்டாட்சியர்

3. பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ஐந்தாண்டு

4. மாவட்ட நிர்வாகம் மக்கள் குறைகளை நேரிடையாக பெற்று விரைந்து தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம்? 
★மனுநீதித் திட்டம்

5. நில அளவர் இல்லாத பட்சத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் நில புலங்களை அளவு செய்யலாம்?
★கிராம நிர்வாக அதிகாரி

6. பட்டாவில் உள்ளடங்காத விவரமானது
★குத்தகைத் தீர்வை

7. "பசலி ஜாஸ்தி" என்பது எதனைக் குறிக்கும்?
★தண்ணீர் தீர்வை

8. கிராம கணக்கு 2-ல் இந்த வகைப்பாட்டை எழுத வேண்டும்
★நஞ்சை, புஞ்சை
★மானாவரி, தீர்வை ஏற்பட்ட தரிசு
★தீர்வை ஏற்படாத தரிசு, புறம்போக்கு

9. இருப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ ஓராண்டு

10. 6-ஆம் நம்பர் நோட்டீஸ் இவரின் ஆணையாகும்
★வட்டாட்சியர்

11. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
★காவல்துறை
★வட்டாட்சியர்
★வனத்துறை

12. K.D ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ, காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
★ Known Depradator

13. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
★ 12-12-1980

14. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
★1963

15. நீண்டகாலக் குத்தகை என்பது
★ 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்

16. 'ஆ' பதிவேடு என்பது
★இனாம்களின் நிலைப்புல பதிவேடு

17. தற்போது 'அ' பதிவேடு பராமரிக்கப்படுவது
★விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
★கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
★ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்

18. கிராம நிர்வாக அலுவலரால் வசூலிக்கப்படும் வரிகள்
★நிலவரி அபிவிருத்தி வரி

19. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
★பதிவேடு C

Saturday, May 5, 2018

000045. ஆய்வு அறிக்கை பற்றி காவல் நிலை ஆணை

காவல் துறையில் கைது செய்யக்கூடிய குற்றம் குறித்து, தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தினால், ஒருவர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுக்கிறார். குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்கள், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட்டு, அந்த மனு ஏற்றுக் கொள்ளத் தக்கதா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறார். ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை என்றால், உடனே நடுவர் அவர்கள் தள்ளுபடி செய்து விடுவார்.

மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால்?

மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால், விசாரணை செய்து அறிக்கை தருமாறு அந்தப் பகுதி காவல் நிலையத்திலுள்ள காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நடுவர் அவர்கள் உத்தரவு இடுவார்.  அந்த காவல்நிலையத்தில் இருந்து நீதிமன்ற பணிக்கு  வந்துள்ள காவலர் மூலம், நீங்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களும் அந்தக் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்பப்படும். சில நடுவர்கள் இத்தனை நாட்களுக்குள் அறிக்கை வேண்டும் என்று உத்தரவில் சொல்கிறார்கள். சிலர் அதனை குறிப்பிடுவதில்லை. அப்படி குறிப்பிடாத பட்சத்தில், விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்ய, மூன்று மாதங்கள் கூட ஆகிறது. ஆனால், இது போன்ற புலனாய்வுகள் ஒவ்வொன்றும் அனாவசியமான தாமதம் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 கூறுகிறது. 

இறுதி அறிக்கையினை நடுவரிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு கூட அந்தக் குற்றத்தைப் பற்றி புலனாய்வு செய்ய தடை இல்லை என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(8) கூறுகிறது.  இந்த இறுதி அறிக்கைகள் குறித்து காவல் நிலை ஆணைகளில் கூறப்பட்டுள்ளதைப் பற்றிக் காண்போம்.

Tamilnadu Police Standing Orders

காவல் நிலை ஆணை எண்:658

இறுதி அறிக்கையானது படிவம் எண்:89ல் அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவர் அவர்களுக்கு, காவல் ஆய்வாளர் அவர்களால் அல்லது புலன் விசாரணை அதிகாரி அவர்களால்  குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 ன் கீழ் அனுப்பப்பட வேண்டிய அறிக்கையாகும். 

படிவம் எண்:89 என்பது விசாரணை செய்கின்ற வழக்குகளை பொய் வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும், துப்பறிய முடியாத வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்ற படிவம் ஆகும்.

காவல் நிலை ஆணை எண்:659

விசாரணை செய்கின்ற வழக்குகளை, அவைகள் பொய்யாக இருந்தால் மட்டுமே, பொய் வழக்கு என்று அறிக்கை செய்ய வேண்டும். அந்த வழக்குகளை பொய்யென்று நம்புவதற்கு தகுந்த  ஆதாரங்கள்  விசாரணை அதிகாரிக்கு கிடைத்தால் ஒழிய, அந்த வழக்குகளை பொய் வழக்கு என்று சொல்லக்கூடாது. பொய் வழக்காக பெரும்பாலும் இருக்கலாம் என்று விசாரணை அதிகாரி எண்ணுவதை ஏற்க முடியாது. பொய் வழக்கு என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலோ, குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றாலோ விசாரணை அதிகாரியானவர், அந்த வழக்கை துப்பு துலக்க முடியாத வழக்கு என்று திருப்பி அனுப்பிவிட வேண்டும். 

காவல் நிலை ஆணை எண்:660

விசாரணை செய்கின்ற வழக்குகளில் எடுக்கின்ற முடிவை, படிவம் எண்:90ல் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(ஆ) ன் கீழ் புகார் அளித்தவருக்கு அனுப்பிட வேண்டும். அதன் நகலை இறுதி அறிக்கையோடு சேர்த்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் அவர்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

காவல் நிலை ஆணை எண்:661

நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுகின்ற ஆய்வு அறிக்கைகள் காவல் வட்ட ஆய்வாளர் மூலமாகவே அனுப்ப வேண்டும். வேறு ஒரு காவல் அலுவலர் மூலம் விசாரணை செய்யப்பட்ட வழக்கின் முடிவு மீது  சந்தேகம் வந்தால், அந்த வழக்கை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட காவல் வட்ட ஆய்வாளர் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அல்லது அவரே அந்த வழக்கை  விசாரணை செய்யலாம்.

காவல் நிலை ஆணை எண்:662

விசாரணை செய்கின்ற வழக்கு திட்டமிட்ட பொய் வழக்கு என்று ஆய்வு அறிக்கையின் மூலம் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் முடிவு செய்தால், அந்த வழக்கைத் தொடுத்த மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க எண்ணுகிறாரா? இல்லையா? என்பதை  அந்த அறிக்கையில் முடிவில் தெரிவிக்க வேண்டும். அப்படி முடிவெடுக்காவிட்டால், ஏன் நடவடிக்கை எடுக்க எண்ணவில்லை? என்ற காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

காவல் நிலை ஆணை எண்:663

”பொய்யான தகவல்களைக் கொடுத்து ஒருவர் மீது வழக்குத் தொடுப்பது” இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 182 மற்றும் பிரிவு 211 ன் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும்.  இந்தப் பிரிவுகளின் கீழ் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவு இல்லாமல், ஒருவர் மீது வழக்குத் தொடுக்கக் கூடாது.

காவல் நிலை ஆணை எண்:664

கொடுக்கப்பட்ட பணியில் செய்த குற்றங்களுக்காக, ஊரகப் பகுதியிலுள்ள  அரசுப் பணியாளர்களின் மீது  வழக்குத் தொடுப்பதாக இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். சென்னை மாநகராக இருந்தால், அந்தத் துறைத் தலைவரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

காவல் நிலை ஆணை எண்:668

விசாரணை செய்கின்ற வழக்குகளை, பொய் வழக்கு என்று காவல்துறை ஆய்வாளர் அவர்களால் அறிக்கை செய்யப்பட்டிருந்து, அந்த அறிக்கையானது நடுவருக்கு மனநிறைவை கொடுக்காவிட்டால்,     குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 190 ன் கீழ், தானாகவே நடவடிக்கை எடுக்க நடுவருக்கு அதிகாரம் உண்டு.

Friday, May 4, 2018

000044. ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மீது தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

CRL. OP. NO - 7025/2016, DT - 31.3.2016., சென்னை உயர்நீதிமன்றம், 

தமிழ்நாட்டிற்கு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டம் 2(a) ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

2(a) - " துன்பம் விளைவித்தல் " என்றால் பழி தூற்றுவது அல்லது ஊறு செய்வது அல்லது தொந்தரவு செய்வது அல்லது தாக்குவது அல்லது வலிமையை பயன்படுத்துவது உள்ளடங்கலான அச்சுறுத்தலை, அச்சத்தை, அவமானத்தை அல்லது தடுமாற்றத்தை விளைவிக்கிற அல்லது பெரும்பாலும் விளைவிக்ககூடிய ஓர் ஆடவரின் பண்பற்ற நடத்தை அல்லது செயல் என்று பொருள்படும்.

மேலே கூறப்பட்டுள்ள விளக்கத்தின் படி துன்புறுத்தல் அல்லது பண்பற்ற செயல் ஒன்றை ஓர் ஆண் மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகும்.

எனவே ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மீது தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 7025/2016, DT - 31.3.2016

Pradeep and One another Vs Inspector of police, K2 Police Station, Ayanavaram, Chennai and One another

(2016-2-LW-CRL-640)

இந்த தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் தீர்ப்பான "பஷீர் அகமது மற்றும் பலர் Vs ஆய்வாளர் (2006-1-LW-CRL-393),(2006-4-CTC-374)" என்ற வழக்கும் சுட்டிக்காட்டப்பட்டது

Wednesday, May 2, 2018

000043. மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்கள் எளிதாக இணையதளம் மூலம் பிறப்பு & இறப்புச் சான்றிதழ்கள் பெற

நமது நாட்டில் எல்லோருக்கும் அவசியமாக கருதப்படுவது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள். இதனை ஒவ்வொருவரும் பதிவு செய்து நகராட்சி அலுவலகத்தில் பெற வேண்டும். தற்போது தமிழக அரசு இதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டது. இதனை வாங்க வேண்டும் என்றால் அலைந்துதான் வாங்க வேண்டும். பெயரில் அல்லது நாளில் பிழை இருந்தால் அதனை மாற்றுவதற்கும் அலைச்சல்தான். பணத்தையும் கொடுத்து, பிழைப்பையும் கெடுத்து அலையும் பொழுது எல்லோருக்கும் எரிச்சல்தான் வரும்.

மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு

நமது தமிழக அரசு முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி ஆகிய மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை இணையதளம் மூலமாகவே பெறுவதற்கும், அதிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அதனை கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும் இதற்கு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாகவே பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு யுனிக் எண் வழங்கப்படுகிறது. தவறுகளையும் இலவசமாகவே திருத்திக் கொள்ளலாம். .

பிறப்புச் சான்றிதழ்

இந்தச் சான்றிதழ்களை இணையத்திலிருந்து எடுப்பதற்கு சான்றிதழில் பெயர் உள்ளவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விபரமும், அவரது பெயரும், பிறந்த  நாளும் மாதமும், வருடமும், பிறந்த இடம் வீடென்றால் வீட்டின் முகவரியும், மருத்துவமனை என்றால் அந்த மருத்துவமனையின் பெயரும், அவரது தாய், தந்தையின் பெயரும், நமக்குத் தெரிய வேண்டும்., 

இறப்புச் சான்றிதழ்

இந்தச் சான்றிதழ்களை இணையத்திலிருந்து எடுப்பதற்கு சான்றிதழில் பெயர் உள்ளவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விபரமும், அவரது பெயரும், இறந்த  நாளும் மாதமும், வருடமும், பிறந்த இடம் வீடென்றால் வீட்டின் முகவரியும், மருத்துவமனை என்றால் அந்த மருத்துவமனையின் பெயரும், அவரது தாய், தந்தையின் பெயரும், நமக்குத் தெரிய வேண்டும்., 

எப்படி எடுக்க வேண்டும்? 

பாக்ஸில் தேவையானதை கிளிக் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  அதன் பின்பு தோன்றுகின்ற பாக்ஸில்  பெயர் மற்றும் வருடம் மற்றும் மாதத்துடன் கூடிய நாளை நிரப்புங்கள். பிழையின்றி நிரப்பினால்தான் நீங்கள்  குறிப்பிடுகின்றவரின் சான்றிதழை எடுக்கமுடியும். ஆகையால், பிழையில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.



சென்னை மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு சான்றிதழ் பெற

http://www.chennaicorporation.gov.in/o…/birthCertificate.do…


பிறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்திக் கொள்ள 

 http://www.chennaicorporation.gov.in/…/birthCertificateList…


இறப்பு சான்றிதழ் பெற

http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateBasi…


இறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்திக் கொள்ள

 http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateList…





கோயம்புத்தூர் மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு சான்றிதழ் பெற & இறப்பு சான்றிதழ் பெற

 https://www.ccmc.gov.in/ccmc/index.php…




மதுரை மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற

http://www.maduraicorporation.co.in/



திருச்சி மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற

http://www.trichycorporation.gov.in/birth_search.php#menu




திருநெல்வேலி  மாநகராட்சியில் வசிப்பவர்கள்

பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற

http://tirunelvelicorporation.in/

000042. பிரிவு 26 முதல் 52 - இந்திய தண்டனைச் சட்டம் 1860

26 - நம்பத்தகுந்த காரணம்

27 – மனைவி, எழுத்தர், வேலையாட்களிடம் உள்ள சொத்து

28 – கள்ளத் தயாரிப்பு

29 – பத்திரம் – ஆவணம்

29 A – மின்னணுப் பதிவுரு

30 – மதிப்பாவணம்

31 – உயில்

32 – செய்கைகளைக் குறிக்கின்ற சொல் சட்டத்திற்கு மாறாக விடுகைகளை உள்ளடக்கும்.

33 – செய்கை அல்லது விடுகை

34 – பொதுவான உட்கருத்தை மேல்நடத்தும் வகையில் பல்வேறு ஆட்களால் செய்யப்பட்ட செய்கை

35 – அத்தகைய செய்கை குற்றமுறு அறிவுடன் அல்லது உட்கருத்துடன் செய்யப்படுகின்ற காரணத்தால் அது குற்ற செய்கையாக இருக்கும்போது

36 – பகுதி செய்கையாலும் பகுதி விடுகையாலும் உண்டாக்கப்பட்ட விளைவு

37 – பல்வேறு செய்கைகளில் ஒன்றை செய்வதன் மூலம் ஒத்துழைத்தலானது ஒரு குற்றமாக அமைகிறது.

38 – குற்ற செய்கையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் வெவ்வேறு குற்றங்களை செய்தவர்களாகலாம்.

39 – தன்னிச்சையாக - என்பதன் விளக்கம்

 40 – குற்றம் - என்பதன் விளக்கம்

41 – சிறப்பு சட்டம் - என்பதன் விளக்கம்

42 – வட்டார சட்டம் - என்பதன் விளக்கம்

43 – சட்டத்திற்கு மாறாக செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர்

44 – கேடு (அ) ஊறு (அ) துன்பம்

 45 – உயிர் என்பது மனித உயிரையே குறிக்கும். வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.

46 – மரணம் என்பது இந்த சட்டப்படி மனிதருடைய மரணத்தையே குறிக்கிறது. வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.

47 – மிருகம் என்பது மனித உயிர் தவிர மற்ற உயிர் வாழும் ஜந்துக்களைக் குறிக்கிறது.

48 – கப்பல்

49 – ஆண்டு, மாதம் என்பது ஆங்கில ஆண்டு மற்றும் ஆங்கில மாதத்தினைக் குறிக்கும்.

50 – பிரிவு – எண்களிட்டு காட்டப்பட்டிருக்கும் இந்த சட்டத் தொகுப்பின் பகுதியைக் குறிக்கும்.

51 – பிரமாணம் 

52 – நல்லெண்ணம்

52 A – புகலிடம் தருதல்