Wednesday, April 18, 2018

000021. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால்?

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவருக்கு எவ்வளவு அபராதத் தொகை விதிக்கப்படுகிறது?


ஒருவருக்கு வாகனம் ஓட்டத் தெரியும் என்பதை உறுதி செய்வதே வாகன ஓட்டுநர் உரிமம்தான். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருவது வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டம் 181, விதி 3 மற்றும் 4-ன் கீழ் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.


 நண்பர் அல்லது பிறரது வாகனங்களை இரவல் வாங்கி சிலர் ஓட்டுவார்கள். அப்படி ஓட்டுபவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பிடிபட்டால் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் இல்லாதவருக்கு வாகனம் வழங்கியதற்காக அதன் உரிமையாளருக்கும் ரூ.500 என மொத்தம் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.


வாகனக் காப்பீடு சான்று இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுமா?


வாகனக் காப்பீடு மிக அவசியம். விபத்துக் காலங்களில் நமக்கு அல்லது வாகனங்கள் சேதமடைந்தால் காப்பீடு நடப்பில் இருந்தால் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெற முடியும். அதற்காகவே காப்பீடு சான்று இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. காப்பீடு சான்று இல்லாமல் வாகனங்களை இயக்குவது வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டம் 146, 196-ன் கீழ் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.


இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருந்தால், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படுமா?


விபத்து நேரிடும்போது வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வலியுறுத்தப்படுகிறது. இதைப் பின்பற்றாமல் இருப்பது விதிமீறலாகும். இதற்கு மோட்டார் வாகனச் சட்டம் 177-ன்படி ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை அபராதம் விதிக்கலாம்.


 பேருந்தில் பயணிக்கும்போது சலுகை விலை கட்டண அட்டை (பாஸ்) அல்லது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கு என்ன தண்டனை?


 போக்குவரத்து துறையினர் மட்டுமின்றி வட்டார போக்குவரத்து துறையினரும் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளலாம். அந்த ஆய்வின்போது டிக்கெட் அல்லது சலுகை விலை கட்டண அட்டை இல்லாமல் பயணிப்போருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 178-ன் கீழ் ரூ.200 வரை அபராதம் விதிக்க முடியும்.


 வாகனத் தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளிடம் முறையான தகவல் அளிக்காமல், ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?


வாகனத் தணிக்கை என்பது சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைவரும் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. வாகனத் தணிக்கை சமயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்கும் தகவலை வழங்காமலும் , ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டால் இரண்டுக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 179 (1) மற்றும் (2)-ன் கீழ் தலா 250 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க முடியும்.


 ஒருவரது வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்னரும் அவர் வாகனத்தை இயக்கினால் என்ன தண்டனை?


ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்பும் ஒருவர் வாகனங்களை இயக்கினால் அவருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 182 (1)-ன் கீழ் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.


ஒருவர் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை எப்படி கண்டறிவது? அதற்கு அபராதம் எவ்வளவு?


அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதை வட்டார போக்குவரத்து துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள கருவி மூலம் எளிதாக கண்டறிய முடியும். அவ்வாறு வேகமாக வாகனம் ஓட்டி வருபவருக்கு மோட்டார் வாகனச் சட்டம் 183 (1)-ன் கீ்ழ் 400 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒருவரது வாகனத்தை இன்னொருவர் அதிவேகமாக ஓட்டினால், வாகன உரிமையாளருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 183 (2)-ன் கீழ் 300 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அதுபோல் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் 184-ன் கீழ் 1000 ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.


 விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள வாகனங்களை இயக்கலாமா?


மோட்டார் வாகனச் சட்டத்தின்படி முறையான பாதுகாப்பு வசதியில்லாமல் வாகனங்களை சாலைகளில் இயக்கக் கூடாது. உதாரணமாக, பஸ்களின் படிக்கெட்டு உடைந்திருந்தால், அவற்றில் பயணிகள் ஏறும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இயக்கினால் மோட்டார் வாகனச் சட்டம் 190 (2)ன் கீழ் 600 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.


 வாகனப் பதிவுச் சான்று இல்லாமலும் புதுப்பிக்காமலும் இருந்தால் எவ்வளவு அபராதம்?


வாகனத் தணிக்கையின்போது பதிவுச் சான்று இல்லாமல் இருந்தாலோ அல்லது புதுப்பிக்காமல் இருந்தாலோ மோட்டார் வாகனச் சட்டம் 192 (1)-ன் கீழ் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


வரி செலுத்தாமல் சரக்கு போக்குவரத்து வாகனங்களை இயக்க முடியுமா?


சரக்கு போக்குவரத்து வாகனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் வரி செலுத்த வேண்டும்; அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தவேண்டும். வரி செலுத்தவில்லை என்றால், மோட்டார் வாகனச் சட்டம் 86 விதி 172 (1)ன் கீழ் அபராதம் விதிக்கலாம் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்யலாம். இது வாகனத்துக்கு வாகனம் மாறுபடும்.


உதாரணமாக, சரக்கு போக்குவரத்தில் ஈடுபடும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரி செலுத்தவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தையும் செலுத்தாவிட்டால் வாகனங்களை பறிமுதல் செய்து 2 நாட்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியாதபடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்படும்.


 அனுமதி (பர்மிட்) பெறாமல் சரக்கு போக்குவரத்து வாகனங்களை இயக்கலாமா? அப்படி இயக்கினால் என்ன தண்டனை?


பர்மிட் இல்லாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்கினால் மோட்டார் வாகனச் சட்டம் 66 பிரிவு 192-ன் கீழ் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும்.


 சரக்கு போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருட்கள் ஏற்றிச் செல்லலாமா?


வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்குகளை (ஓவர் லோடு) ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்துகளை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனத் தணிக்கையின்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்கு ஏற்றிவந்தால் மோட்டார் வாகன சட்டம் 194 பிரிவு 113, 114-ன் கீழ் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் உள்ள சரக்கை கணக்கிட்டு ஒரு கிலோவுக்கு ரூ.1 வீதம் அபராதம் விதிக்கப்படும். தவிர, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ள சரக்குகளை இறக்கி வைத்துவிட்டு (அன்லோடு) செல்ல வேண்டும்.


சரக்கு ஆட்டோ, லாரி போன்ற சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லலாமா?


சரக்கு வாகனங்களில் ஆட்களை கட்டாயம் ஏற்றிச் செல்லக்கூடாது. விபத்தை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு ஏற்றிச் சென்றால் மோட்டார் வாகனச் சட்டம் 177 விதி 236-ன் கீழ் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்

000020. வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன?

சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கை செய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில் பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  

அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்று தான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும் பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது.

வாகன தணிக்கை யார் செய்ய முடியும்?

சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொரு வாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தை ஆய்வுக்காக அவர்கள் நிறுத்த சைகை காட்டினால், உங்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும்கூட, உங்களது வாகனத்தின் வேகத்தை குறைத்து, சாலையின் ஓரமாக நிறுத்துங்கள். 

காவலர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது?

சாதாரண போக்குவரத்து காவலருக்கு (கான்ஸ்டபிள்) உங்களது வாகனத்தின் ஆவணங்களை கேட்பதற்கோ, வண்டியிலிருந்து சாவியை எடுப்பதற்கோ அதிகாரம் இல்லை. ஏ.எஸ்.ஐ, எஸ்.ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மட்டுமே ஸ்பாட் ஃபைன் போடஅதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஏஎஸ்ஐ ரேங்கிற்கு கீழே உள்ள தலைமை காவலர் மற்றும் காவலர்கள் செல்லான் போடமுடியாது. அபராதம் விதிக்கும் டிராஃபிக் போலீசாரிடம் அதற்குண்டான சலான் புத்தகம்  அல்லது எலக்ட்ரானிக் மெஷின் கைவசம் இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர்கள் அபராதம் விதிக்க முடியாது. பணியில் இருக்கும் காவலரின் சீருடையில், அவருடைய பெயர் மற்றும் அவரது பெல்ட் எண் ஆகியவை இருக்க வேண்டும்.

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அதன் தன்மை குறித்து குறிப்பெடுக்க, அதுகுறித்து காவல்துறை புகார் பதிவு மையத்திற்கு தகவல் அளிக்க காவலர்களுக்கு அதிகாரம் உண்டு. 

கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா?

சாதாரண போக்குவரத்து காவலர்களுக்கு வாகன ஓட்டி ஒருவரின் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகனம் ஓட்டி வருபவர்களை கைது செய்யவோ முடியாது. அந்த வாகன புகை பரிசோதனை சான்றைக்கூட அவர்களுக்கு கேட்க அதிகாரம் இல்லை. அது போக்குவரத்து அதிகாரிகளால் மட்டுமே கேட்க அதிகாரம் உள்ளது. வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. 

எந்த சூழ்நிலைகளில் வண்டியை ஒப்படைக்க வேண்டியதிருக்கும்?

சிக்னல் ஜம்ப், குடிபோதையில் டிரைவிங், மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது மற்றும் அதிக பாரம் ஏற்றுதல் போன்ற குற்றங்களுக்காக ஸ்பாட்ஃபைன் போடப்பட்டால், அதனை உடனே கட்ட இயலாத சூழல் இருந்தால் மட்டுமே, டிரைவிங் லைசென்ஸை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டியதிருக்கும்.   அதே நேரத்தில், அதற்குண்டான   உரிய சலான் இல்லாமல் உங்களது டிரைவிங்   லைசென்ஸை   டிராஃபிக் போலீஸ் எடுத்து செல்ல முடியாது. எனவே, அதற்குண்டான உரிய ஆவணத்தை வாகன ஓட்டிகள் கேட்டு பெறுவது அவசியம்.  நீதிமன்றத்தில் அபாரதத்தை கட்டிய பிறகு, அந்த ரசீதை அவர்களிடம் கொண்டு சென்று காட்டி, லைசென்ஸை திரும்ப பெற முடியும். 

ஒரு வேலை அரசால் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக அபராதம் விதித்தால், நான் அபராதத்தை கோர்ட்டில் கட்டி விடுகிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் எழுதிய சலானை  பெற்றுக் கொண்டு வந்துவிடலாம். 

காரை எடுத்துச் செல்ல அதிகாரம் உண்டா?

காரினுள் யாராவது அமர்ந்திருக்கும்போது, காரை போலீசார் வேறு வாகனம்  மூலமாக (car toe) டோ செய்து எடுத்துச்செல்ல முடியாது. அவர்களிடம் பேசி விபரத்தைத் தெரிவித்து இறக்கிவிட்டு காரை கொண்டு செல்லலாம்.

பெண்கள் வாகனத்தை ஓட்டி வந்தால்...

மாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவர்களை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய வேண்டும். பெண் காவலர் இல்லை என்றால், அவரை வரவழைத்து அவர்களை ஆய்வு செய்யுங்கள்! என்று கூறவும் பெண்களுக்கு உரிமை உண்டு. 

போக்குவரத்து விதிகளை மீறினால்....

சாலை விதியை மீறிய நிலையில், உங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போக்குவரத்து போலீசாரிடம் காட்டுவது அவசியம். ஆனால், ஒப்படைக்கும் அவசியம் இல்லை.  

போக்குவரத்து அதிகாரிகள் வாகன ஓட்டியை கைது செய்தால்.... 

போக்குவரத்து விதிகளை  மீறியதற்காக ஒருவரை கைது செய்யும் பட்சத்தில், நேராக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் அவரை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். 

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். உரிய ஆவணங்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள். பயம் கொள்ளாதீர்கள். உங்களை நம்பி பலபேர்கள்  இருப்பதை எண்ணி  பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்

000019. இந்திய மொழி இதழ்கள் சட்டம்

5.3 இந்திய மொழி இதழ்கள் சட்டம் 

1878 ல் லிட்டன் பிரபுவால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேய அரசைத் தாக்கி எழுதுவதைத் தடை செய்ய இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் படி இதழ்கள் குறிப்பிட்ட பிணையத் தொகையைச் செலுத்த வேண்டும். அரசாங்கத்தைக் குறை கூறும் விதமாகவோ இனம், மதம், சாதிக் கலவரங்களைத் தூண்டும் வகையிலோ எழுதக்கூடாது. அவ்வாறு செய்தால், பறிமுதல் செய்யும் அதிகாரம் நீதிமன்ற நடுவருக்கு உண்டு. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது. இதனை எதிர்ப்பவர்கள் பிணைத் தொகையை இழப்பதோடு சிறைத் தண்டனைக்கும் உள்ளாவர். 1881ஆம் ஆண்டு ரிப்பன் பிரபு காலத்தில் இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

5.3.1 குற்றத் தூண்டுதல் தடுப்புச் சட்டம்

ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகளைக் குறிக்கும் மற்றுமொரு சட்டம் 1908 ல் பிறப்பிக்கப்பட்டது. குற்றங்களைத் தூண்டும் செய்திகளை வெளியிட்டால் இதழையும் அச்சகத்தையும் நீதிபதி பறிமுதல் செய்யலாம். இச்சட்டத்தினால், ஆங்கிலேய அரசுக்கு முதல் ஐந்தாண்டுகளில் ஐந்து லட்சம் ரூபாய் பிணையத் தொகை கிடைத்தது. 

5.3.2 1910ஆம் ஆண்டு இதழ்கள் சட்டம்

விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஆங்கில அரசின் நடவடிக்கைகளுள் இச்சட்டமும் ஒன்றாகும். இரண்டாயிரம் ரூபாய் வரை பிணையத் தொகையை இதழ்கள் கட்ட வேண்டும். அரசுக்கு எதிரான செய்திகள் வெளியானால், அஞ்சலக அதிகாரி இதழ்களை நிறுத்தி வைக்கலாம். அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது. கடுமையான இச்சட்டத்தால் இதழ்கள் பல நின்று போயின. 1921ஆம் ஆண்டு சாப்ரூ என்பவரின் தலைமையில் அமைந்த குழுவின் பரிந்துரையின்படி இச்சட்டம் நீக்கப்பட்டது.

செய்தித்தாள் அவசரச் சட்டம் - 1930ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி செய்தித்தாள்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டது. இதனால் பல இதழ்கள் பாதிப்பு அடைந்தன. 

5.3.3 நெருக்கடிக் கால அதிகாரச் சட்டம்

1931ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடிக் கால அதிகாரங்களை அளித்தது. இச்சட்டப்படி இதழ்களும் அச்சகங்களும் பத்தாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்ட வேண்டும். இத்தொகையை மாநில அரசுகள் பறித்துக் கொள்ளலாம். தேசத் தலைவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாது. இச்சட்டம் காந்தியடிகளின் சட்டமறுப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 

5.3.4 பிற பல்வகைச் சட்டங்கள்

மேற்குறிப்பிட்டவைகளைத் தவிர, இதழியல் தொடர்பாகப் பல்வேறு வகையான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்திய நூலகச் சட்டம் (1954)

வெளியிடப்படும் நூலின் / இதழ்களின் பிரதியைத் தேசிய நூலகம் (கல்கத்தா), மத்திய நூலகம் (டில்லி), கன்னிமாரா நூலகம் (சென்னை) ஆகியவற்றிற்கு அனுப்ப வேண்டும் என்பது இச்சட்டத்தின் நோக்கம். 

தொழில் முறைப் பத்திரிகையாளர் சட்டம்

இதழியல் துறைப் பணியாளர்களுக்கான ஊதியம், வைப்புநிதி, ஓய்வுக்கால ஊதியம், பணிக்கொடை விடுமுறை (earned leave),வேலைநேரம் பற்றிய சட்டம். இச்சட்டம் 1955ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

விலை, பக்க நிர்ணயச் சட்டம்

1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் முன்னரே இருந்த சட்டங்களின் திருத்தம் செய்யப்பட்ட வடிவமாகும். இச்சட்டப்படி இதழ்கள் டில்லி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவேண்டும். அச்சிட்ட இதழ்களின் பிரதியைப் பதிவாளர் அலுவலகத்துக்கும், கல்கத்தா தேசிய நூலகத்திற்கும் சென்னை கன்னிமாரா நூலகத்திற்கும் அனுப்ப வேண்டும். ஆசிரியர், பதிப்பாளர், அச்சிடுபவர், அச்சகம் பெயரை இதழ்களில் வெளியிட வேண்டும். ஆண்டு அறிக்கை வெளியிட வேண்டும்.

நாடாளுமன்ற நடவடிக்கைச் சட்டம்

1956ஆம் ஆண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் அவை தொடர்பானவற்றையும் வெளியிடுவது பற்றியதாக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனைப் பெரோஸ்காந்தி சட்டம் என்பர்.

தீங்கு விளைவிக்கும் இதழ்கள் சட்டம்

ஆபாச வெளியீடுகளைத் தடை செய்யும் விதமாக 1956இல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

பதிப்புரிமைச் சட்டம்

நூலாசிரியர்களுக்குப் பதிப்புரிமை அளிக்கும் விதமாக இச்சட்டம் 1957இல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆசிரியருக்குப் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.

அவதூறுச் சட்டம்

தனி மனிதர் பற்றி மாறான செய்திகள் வெளியிட்டால் வழக்குத் தொடர இச்சட்டம் வகை செய்கிறது. இ.பி.கோ. 499, 502 ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரலாம். இத்தகு சட்டங்கள் நடத்தை விதிகள் உருவாக உதவுகின்றன.

ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டம்

மக்கள் மனத்தைக் கெடுக்கும் வகையில் செய்திகளை (பாலுணர்வு, வன்முறை தூண்டல்) வெளியிடுவதை இச்சட்டம் தடை செய்கிறது. இ.பி.கோ.292, 293, 294 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை உண்டு. இச்சட்டத்தின்படி இதழ்களைப் பறிமுதல் செய்யலாம்.

தீமை பயக்கும் வெளியீட்டுத் தடைச் சட்டம்

1956 ல் கொண்டு வரப்பட்ட இச்சட்டப்படி இளைஞர்களது உள்ளங்களைக் கெடுக்கும் வெளியீடுகளை இச்சட்டம் தடை செய்கிறது. அவற்றை விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.

ஆட்சி துரோகச் சட்டம்

ஆட்சிக்கு எதிரான வன்முறை தூண்டல், புரட்சி உண்டாக்கல், நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைத்தல் முதலியன ஆட்சிக்கு எதிரானவை. இவை பற்றி இச்சட்டம் அமைகின்றது.

மருந்து, தந்திர நிவாரணச் சட்டம்

மருத்துவம், தந்திரம் சார்ந்த விளம்பரங்களைத் தடை செய்வது இச்சட்டத்தின் நோக்கமாகும். தொடர்புடையவற்றைத் தடைசெய்வதோடு விளம்பரங்களையும் இச்சட்டம் தடை செய்கிறது.

பத்திரிகைக் குழுச்சட்டம்

இதழ்களின் உரிமையைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதழ்கள் தொடர்பான எந்தப் பிரச்சினையையும் இதழியல் குழு (Press Council) விசாரித்துத் தீர்ப்பு வழங்கும். இம்முறை மேலை நாடுகளிலும் உண்டு.

இதழியல் தொடர்பான இந்தியன் பீனல் கோடு சட்டங்கள்

(1) இ.பி.கோ 124-A-இன்படி நாட்டின் நலனிற்குக் கேடு விளைவிக்கும் முறையில் பேசுவதையும் எழுதுவதையும் துரோகமாகக் கருதித் தண்டனை விதிக்கிறது.

(2) இ.பி.கோ. 505ஆம் பிரிவின்படி இராணுவத்தினர் இடையே பிளவு உண்டாகும்படி அறிக்கை வெளியிடுவதைத் தடுக்கிறது.

(3) இ.பி.கோ. 295-A- பிரிவின்படி மத நல்லுணர்வுக்குக் கேடு விளைவதைத் தடுக்கிறது.

(4) இ.பி.கோ. 99-A, 99-G - பிரிவின்படி இனக்கலவரம் உண்டாகக் காரணமான நூலையோ செய்தித் தாளையோ பறிமுதல் செய்கிறது.

(5) இ.பி.கோ. 228 ம் பிரிவின்படி நீதிமன்ற அவமதிப்பைத் தடுக்கிறது.

தணிக்கைச் சட்டம்

1988ஆம் ஆண்டு இதழ்களின் தணிக்கைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி,செய்திகள் வெளியிடுவதற்கு முன்பு அவற்றை ஆராய்ந்து நீக்க முடியும். இச்சட்டம் இதழியல் சுதந்திரத்தோடு தொடர்புடையதாகும். இதழ்களின் சுதந்திரத்தைப் பாதிப்பதால் இதனைக் கருப்புச் சட்டம் என்பர். இத்தகைய தணிக்கை முறை அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

000018. வரதட்சணை கொடுமைப் புகார்கள்

இந்திய தண்டணை சட்டம் பிரிவுகள் 498A, 406, 41  மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மனுக்களின் மீது காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்யக்கூடாது. அதேபோல் யாரையும் கைது செய்யவும் கூடாது.

புகாரை பெற்றவுடன் அந்த புகாரை Family Welfare Committee க்கு அனுப்ப வேண்டும். இந்த கமிட்டி ஒவ்வொரு தாலுகா வாரியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். மேலும் இந்த கமிட்டியில் ஒரு வழக்கறிஞர் உட்பட இரண்டு சமூக நல ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இருந்து காவல்துறையால் அனுப்பப்படும் புகார்களை விசாரித்து அந்த பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இதற்கு இந்த கமிட்டி ஒரு மாதம் கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தங்களது அறிக்கையை காவல் துறைக்கு வழங்க வேண்டும்.

அதன்பிறகே காவல்துறை FIR பதிவு செய்ய வேண்டும் என 27.7.2017 ஆம் தேதியில் உச்சநீதிமன்றம் "ராஜேஷ் சர்மா Vs உத்திர பிரதேச மாநில அரசு" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

000017. தமிழக பட்ஜெட் 2018-19

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் மதுரை, தூத்துக்குடி, நெல்லை மண்டலங்களுக்கு வளர்ச்சி நெறித் திட்டம் உருவாக்கப்படும்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த ரூ.172.27 கோடி ஒதுக்கீடு

மாநில நிதிக்குழு பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,980.33 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,834.75 கோடி பகிர்ந்தளிக்கப்படும்

மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,975.07 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,877.10 கோடி பகிர்ந்தளிக்கப்படும்

நெல்லை, மதுரை, குமரி மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 345 புதிய மருத்துவப் படிப்பு இடங்கள் உருவாக்கப்படும்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி ஒதுக்கீடு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு இரண்டு நேரியல் முடுக்கிகள், 6 சி.டி. ஸ்கேன், 4 எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் வாங்கப்படும்

விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத் பேட்டையில் ரூ.24 கோடியில் அமைக்கப்படும்

விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கு கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்

விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராமநாதபுரம் மாவட்ட தலைமையிட மருத்துவமனைகளில் ரூ.80 கோடி செலவில் மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவுகள் தொடங்கப்படும்

தேசிய சுகாதார இயக்கத்துக்கு ரூ.1,551.22 கோடி ஒதுக்கீடு

கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை போக்கவும், குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் ரூ.4,000 மதிப்பில் இரும்புச் சத்து டானிக், ஊட்டச்சத்து அடங்கிய அம்மா தாய்சேய் நல பெட்டகம் வழங்கப்படும்

100 நடுநிலைப் பள்ளிகள், 100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்த திட்டம்

ரூ. 200 கோடி செலவில், நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முடிவு

பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 333.36 கோடி ஒதுக்கீடு

பள்ளி மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு ரூ.1,653.89 கோடி ஒதுக்கீடு

3,090 உயர்நிலைப் பள்ளிகள், 2,939 மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.462.60 கோடியில் கணினிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்

மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடி ஒதுக்கீடு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு மொத்தமாக 27,205.88 கோடி ஒதுக்கீடு

கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதி, ராணி மேரி கல்லூரியில் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் ரூ.26 கோடியில் புதுப்பிக்கப்படும்

பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நல்கைத் தொகை மாற்றியமைக்கப்படும்

அண்ணாமலை  பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்க ரூ.500.65 கோடி ஒதுக்கீடு

2018-19ல் உயர்கல்வித் துறைக்கு மொத்தமாக ரூ.4,620.20 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் விடுதிகளுக்கு ரூ.46 கோடி மதிப்பில் 19 புதிய விடுதிக் கட்டிடங்கள் கட்டப்படும்

ஆதி திராவிடர் விடுதிகளில் உணவு கட்டணங்களுக்காக ரூ.118.48 கோடி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வி உதவித்தொகைக்கு ரூ.129.16 கோடி

உயர்கல்வி உதவித்தொகைக்கு ரூ.1,838.24 கோடி ஒதுக்கீடு

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.71.01 கோடி ஒதுக்கீடு

மத்திய சிறப்பு உதவித் திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும் 

Monday, April 16, 2018

000016. கூலி வழங்கல் சட்டம்

கூலி வழங்குவது குறித்த விதிகள்:

* கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 3ன் படி ஒவ்வொரு முதலாளியும், தன்னால் பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளிக்குச் சேர வேண்டிய அனைத்துக் கூலியையும் வழங்க வேண்டும் என்பதைச் சட்டக் கடமையாக்குகிறது.

* கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 4ன் படி ஒவ்வொரு முதலாளியும் கூலி வழங்கும் கால இடவெளியை உருவாக்கிக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு மாத கால இடைவெளிக்கு அதிகமாகக்
கூடாது.

* தொழிலாளர்கள் எண்ணிக்கை 1000 க்கு அதிகமாகாத நிலையில் ஊதியக் காலத்தின் கடைசி நாளிலிருந்து ஏழு நாட்கள் முடிவடைவதற்கு முன்பும், 1000 க்கு அதிகமாக உள்ள போது பத்து நாட்கள் முடிவடைவதற்கு முன்பும் கூலி வழங்கப்பட வேண்டும். இதை விடுமுறை நாளில் அளிக்கக் கூடாது என்பதை கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 5 மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

* கூலியை நடப்பிலுள்ள இந்தியப் பணமாகவும் சில்லரைக்காசுகளாகவும் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒப்புதல் பெற்று வங்கிக் காசோலையாகவோ அல்லது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதன் வாயிலாகாவோ வழங்கலாம் என்று கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 6
தெரிவிக்கிறது.

* சட்டம் அனுமதிக்கும் பிடித்தங்களைத் தவிர வேறு எவ்வித பிடித்தங்களும் இல்லாமல் தொழிலாளர்களுக்குக் கூலி வழங்கப்பட வேண்டும். முதலாளிக்கு அல்லது அவரது முகவர்க்கு தொழிலாளர்கள் செலுத்தும் தொகை அனைத்தும் பிடித்தங்கள் எனப்படும். ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுதல், கீழ் பதவிக்கு மாற்றம் செய்தல் மற்றும் தற்காலிகப் பணி நீக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட கூலி இழப்புகள் பிடித்தங்களாகக் கருதப்படமாட்டாது என கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 7ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் அனுமதிக்கும் பிடித்தங்கள் கூலி வழங்கல் சட்டம் 1936-ன் படி சில பிடித்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை

* அபராதத் தொகை தொழிலாளி கடமையைச் செய்ய தவறியதற்காகவோ,

* செய்யக்கூடாத செயலைச் செய்ததற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கூலியில் பிடித்தம் செய்யலாம். இப்பிடித்தம் அவரது ஒரு மாதக் கூலியின் மொத்தத் தொகையில் மூன்று சதவிகிதத்திற்கு அதிகமாக
இருக்கக் கூடாது.

* வேலை செய்யாத நாட்கள் கூலி வழங்கும் காலத்திற்குரிய வேலை நாட்களில் வேலைக்கு வராத நாட்களுக்குரிய கூலியைப் பிடித்தம் செய்து கொள்ள அனுமதிக்கிறது.

* சேதத்திற்கான இழப்பு தொழிலாளியிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில் கவனக்குறைவாய் இருந்து அதனால் ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பை ஈடு செய்யும் வகையில் ஒரு தொகையை கூலியிலிருந்து பிடித்தம் செய்யலாம். இப்படி பிடித்தம் செய்யப்படும் முன்பு, தொழிலாளிக்கு இது குறித்த நியாயமான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும்.

* சேவைகளுக்கான தொகை வீட்டு வசதி, தண்ணீர், மின்சார வசதி மற்றும் வாகன வசதி போன்ற சேவைகள் வழங்கப்பட்டால் அதற்குச் சமமான தொகையைக் கூலியில் பிடித்தம் செய்யலாம். ஆனால் அச்சேவைகளுக்கு தொழிலாளி ஏற்பளித்திருக்க வேண்டும்.

முன்தொகை தொழிலாளி வேலையில் சேரும் முன்பு அல்லது சேர்ந்த பின்பு
அல்லது விழாக் காலங்களில் வழங்கப்பட்ட முன்தொகையினைக் கூலியில் பிடித்தம் செய்ய அனுமதிக்கிறது. இது போல் அதிகமாகக் கொடுக்கப்பட்டு விட்ட கூலியைத் திரும்பப் பெறவும் பிடித்தம் செய்யலாம். ஆனால் போக்குவரத்து செலவுகளோ அல்லது முன்பணம் மற்றும் அதிகமாக வழங்கப்பட்ட கூலிக்கு வட்டியோ பிடித்தம் செய்யக் கூடாது.

கடன் தொகைகள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் மற்றும் தொழிலாளரால் பெறப்பட்ட கடன்கள் போன்றவற்றின் மாதாந்திர தவணையிலான பிடித்தங்கள் கூலியிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

பிற பிடித்தங்கள்

1. வருமான வரிக்கான பிடித்தம்
2. நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலான பிடிக்கப்பட வேண்டிய தொகை
3. வருங்கால வைப்புநிதி மற்றும் ஒய்வூதியத் திட்டம் ஆகியவைகளுக்குச் செலுத்த வேண்டிய தொழிலாளர்களின் சந்தாத் தொகை
4. தொழிலாளர்களின் தொழில் வரிப் பிடித்தம்
5. பிரதமர் தேசிய உஅதவி நிதி மற்றும் பிற நிவாரண நிதிகளுக்கான நன்கொடைத்தொகை போன்றவை
தொழிலாளர்களின் சம்மதக் கடிதத்தின்படி பிடித்தம் செய்யலாம்.
6. தொழிற்சங்கத்திற்கான உறுப்பினர் தொகை தொழிலாளர்களின் சம்மதக் கடிதத்தின்படி பிடித்தம் செய்யலாம்.

 பிடித்தத்தின் பொது வரம்பு தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பொழுது அனைத்துத் தலைப்புகளின் கீழும் செய்யப்படும் மொத்தப் பிடித்தம் தொழிலாளியின் மாதச் சம்பளத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கடன் தொகைகளுக்காகப் பிடித்தம் செய்யப்படும் பொழுது 75 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யலாம்.

Sunday, April 15, 2018

000015. சுதந்திர உரிமை

சுதந்திர உரிமை (சரத்து 19 - 22)

சுதந்திர உரிமை - இது 6 வகையான சுதந்திரங்களை அளிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19-ல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது அதன்படி...

1. பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ய) இந்த சுதந்திரம் இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பொது அமைதியின் நலனுக்குட்பட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் பத்திரிக்கைச் சுதந்திரமும் அடங்கும். பேசாமல் அமைதியாக இருக்கும் உரிமையும் அடங்கும்.

2. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் (சரத்து -19 (1) (b) இது அரசின் பாதுகாப்பு , அண்டை நாட்டுடன் நட்புறவு பொது அமைதி ஒழுக்கம்,நீதிமன்ற அவமதிப்பு அவதூறு குற்றம் செய்யதூண்டுதல், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்ற நலன்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

3. கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம் ( சரத்து -19 (1 ) (உ) இது பொது அமைதி அல்லது அறநெறியின் நலனுக்குட்பட்டும் ,இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும் கட்டுப்பாடு விதிக்கலாம்.

4. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம் (சரத்து -19 (1) (ன) இது பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

5. இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ந) இது பொதுமக்களின் நலன் மற்றும் 6. பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம் ( சரத்த -19 (1) (ப) இதன் மீது நியாயமான தடையாகவும், பொதுமக்களின் நலனிற்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும். இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமைகள்(சரத்து -20). இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 20 -ன் படி ஒருவரைத் தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது. · குற்றஞ்சாட்டப்பட்ட செயல் ,செய்யப்பட்ட காலத்தில் அமலில் இருக்கும் சட்டத்தால் மட்டுமே தண்டிக்கப்பட கூடாது. குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கே எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தக் கூடாது. யாரையும் சுயவிருப்பமின்றி சாட்சியாக்க கட்டாயப்படுத்தக் கூடாது.

வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு (சரத்து -21)

தனி மனித வாழ்வு மற்றும் தனி மனித சுதந்திரத்தை உறுதி செய்கிறது. தனது சுதந்திரத்தினை, மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அனுபவிக்க வேண்டும். · ஒரு நபரின் வாழ்க்கையும்,தனிநபர் சுதந்திரத்தையும் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளை தவிர வேறு வழிகளில் மீறக் கூடாது. · ஹ.மு. கோபாலன் - எதிர் - சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21 ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. மேனகா காந்தி - எதிர் - இந்திய அரசு (1978) என்ற வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் என்கிற பதத்திற்கு பரந்த பொருள் விளக்கத்தையும், சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளுள் இயற்கை நிதிக் கோட்பாடுகளும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. · வாழும் உரிமை, தனிமனித உரிமை மற்றும் பல அடங்கும். வாழ்வுரிமை என்பது மாண்புடனும் மரியாதையுடனும் வாழ்வது. பிழைப்புத் தொழில், சுகாதார மற்றும் மாசற்ற சூழலில் வாழும் உரிமையும் அடங்கும். தனித்திருப்பு உரிமை என்பதும் தனிப்பட்ட சுதந்திரத்தில் அடங்கும். வாழும் உரிமை சாவதற்கான உரிமையை உள்ளடக்காது.

கல்வி உரிமை (சரத்து 21 -அ)

· 2002 - 86 வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது. 2009 இல் இலவச கட்டாயக் கல்வி ஆறு வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்தல் (ம) சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து 22)

· இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 22 -ன் படி எவரையும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது. · மேலும் மக்களை விசாரணையின்றி கைது செய்யப்படும் போது, பாதுகாப்பு அளிப்பதோடல்லமால் கைது செய்வதற்கான காரணத்தைக் தெரிவிக்கும்படி கேட்கவும் உரிமையை அளிக்கிறது. · சட்ட வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கிரிமினல் வழக்குகளில் நீதிபதி முன் ஆஜர் படுத்தவும் பாதுகாப்பு அளிக்கிறது. · ஒருவரை கைது செய்யும் போது கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும், மேலும் வழக்கரைஞரை அமர்த்துவதற்கும் உரிமை உண்டு. · தடுப்புக் காவல் சட்டத்தின் படி சிறைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சரத்து 14 ,19, 21 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறக் கூடாது. · தடுப்புக் காவலில் 3 மாதங்களுக்கு சிறைப்படுத்தும் வகையில் இருந்ததை 1978 ம் ஆண்டின் 44 வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு 2 மாதங்களாக குறைக்கப்பட்டது