Sunday, April 15, 2018

000014. பிக்சட் டெபாசிட் மீது கடன் வாங்குவது எப்படி?

 கடன்

வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் போது நாம் பொதுவாக நம் பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்கின்றோம். ஆனால் சில நேரங்களில் நம்முடைய அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. அதனை நாம் குறுகிய காலத்தில் திரும்பி செலுத்தவும் முடியும். இத்தகைய அவசர காலங்களில் நீங்கள் உங்களுடைய வைப்புத் தொகை மீது குறுகிய கால கடனை பெற முடியும். அவ்வாறு நீங்கள் முயற்சி செய்யும் பொழுது வங்கிகள், உங்களுடைய வைப்புத் தொகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. இதற்கு பதிலாக நீங்கள் தனி நபர் கடன் பெறலாம். நிலையான வைப்புத் தொகையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தனி நபர் கடனை விட வைப்புத் தொகை மீது கடன் பெறுவதே சிறந்தது. அவ்வாறு கடன் பெற, நீங்கள் ஒரு வங்கி கிளைக்கு சென்று தேவையான விண்ணப்பத்தை நிரப்பித் தர வேண்டும்.

வட்டி விகிதம்

கடனுக்கான வட்டி விகிதங்கள், பொதுவாக உங்கள் வங்கி வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை விட சுமார் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். எனினும், அது வங்கிக்கு வங்கி மாறுபடும். உதாரணமாக, உங்களுடைய வைப்புத் தொகைக்கு நீங்கள் சுமார் 9 சதவீத வட்டி பெறுகிறீர்கள் எனில், உங்களுடைய கடனுக்கான வட்டி சுமார் 11 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். எனவே, நீங்கள் அதிகமாக சுமார் 2 முதல் 3 சதவீத வட்டியை செலுத்துகிறீர்கள்.

கால அளவு

கடனுக்கான கால அளவு, உங்களுடைய வைப்புத் தொகையின் முதிர்வை பொறுத்தது. உங்களுடைய வைப்புத் தொகை முதிர்வடையும் வரை நீங்கள் உங்களுடைய கடனுக்கான தொகையை செலுத்தவில்லை எனில் உங்களுடைய கடன் தொகை வைப்புத் தொகையில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.

கட்டணங்கள்

இத்தைகைய கடன்களில், எந்தவித ஆபத்தும் இல்லை. எனவே, வங்கிகள் பொதுவாக பிராசஸிங் கட்டணம் வசூலிப்பதில்லை. எனினும், ஒரு சில வங்கிகள் ஒரு சிறிய தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன.

தனி நபர் கடனை விட இது எந்த வகையில் சிறந்தது?

பொதுவாக வங்கிகள், கடன் அளவை பொறுத்து தனி நபர் கடனுக்கு 16 முதல் 20 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. மேலும், தனி நபர் கடனுக்கு பிராசஸிங் கட்டணம் வேறு செலுத்த வேண்டும். ஆனால் வைப்புத் தொகை மீதான கடனுக்கான வட்டி சுமார் 11 முதல் 12 சதவீதம் மட்டுமே. எனவே, குறுகிய கால அவசரத் தேவைக்கு வைப்புத் தொகை மீது கடன் பெறுவதே மிகவும் சிறந்தது.

Saturday, April 14, 2018

000013. அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம், புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகள்

அரசு ஆணை எண்: 114

அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.

அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடிதம் கொடுக்கும்போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் உடனே வாங்கி கொண்டதற்கான ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்) மனுதாரருக்கு கொடுக்க வேண்டும். அரசு அலுவலர் கொடுக்கும் ஏற்பு ரசீதில் மனுதாரரின் பெயர், முகவரி, யாருக்கு என்ன விசயமாக அனுப்பபட்டுள்ளது என்ற விவரமும், கடிதம் வாங்கும் அலுவலரின் கையெழுத்தும், அவர் வகிக்கும் பதவியின் பெயரும், அலுவலக முத்திரையும் தேதியுடன் இருக்க வேண்டும். தபால் மூலம் கடிதம் அனுப்பும் போதும் அதற்கான ஏற்பு ரசீது மனுதாரர்க்கு அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கபட வேண்டும். அனுப்பும் புகாரின் மீது அதிகபட்சம் 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 60 தினத்திற்கு மேல் ஆகும் என்றால் இடைக்கால பதிலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையும், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் 60 தினங்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகள்படி கடிதங்களை கையாள அரசு, ஆணை 114 வலியுறுத்துகிறது. 

[அரசு ஆணை 114 என்பது அரசு ஆணை 66(23.02.1983) அரசு ஆணை 89(13/05/1999) மற்றும் மத்திய அரசு ஆணை 13013/1/2006 (5.5.2006) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது] 

எனவே, இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்தால் அரசாணை எண்கள்: 114, 66, 89-ன் படி ஏற்பு ரசீது கேட்டு வாங்குங்கள். இதுவே நமக்கு இறுதி நிவாரணம் கிடைக்க வழி வகுக்கும்.

000012. உயில் சம்பந்தமான நீதிமன்ற தீர்ப்பை பற்றி தெறிந்து கொள்ளுங்கள் :

1) உயிலை நிரூபிப்பதற்கு, உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது. (AIR-2001-SC-3522)&(1996-1-MLJ-481)

2)  உயிலில் சாட்சியாக கையொப்பம் போடுபவர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் தங்களது கையெழுத்தை, உயிலை எழுதி வைப்பவரின் முன்பாக போடுதல் வேண்டும். இதுவே போதுமானதாகும். இவ்வாறு நிலைகள் சந்தேகத்தை ஏற்படுத்தாது. சாதாரண முரண்பாடுகள் எல்லாம் சந்தேக சூழ்நிலைகளை ஏற்படுத்தாது. (AIR-1997-SC-127)

3) உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை, உயில் எழுதி வைத்தவர் பார்க்கவில்லை. அதே போன்று உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை உயிலை தயாரித்தவரும் பார்க்கவில்லை. அதனால் உயிலில் சாட்சி கையெழுத்து போட்டது நிரூபிக்கப்படவில்லை.
(AIR-1998-M. P - 46)

4) உயிலானது, உயிலை எழுதி வைத்தவரின் சுதந்திரமான போக்கில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் திருப்தியடைந்திருத்தல் வேண்டும்.
(1998-2-MLJ-SC-128).

5) ஒரே ஒரு சாட்சி மட்டும் உயிலை நிரூபிக்க விசாரித்தது போதுமானதாகும். (ஆனால் மனநிறைவு அடையாவிட்டால் வெறும் ஒரு சாட்சியை விசாரித்தது மட்டுமே போதுமானதாகாது)
(AIR-2003-SC-761).

6) உயில் பதிவு செய்யப்பட்டது என்ற காரணத்தால் மட்டுமே அந்த உயிலின் மீதான சந்தேக சூழ்நிலைகள் அகன்று விடாது. பதிவு செய்யப்பட்ட உயில் என்றாலும் அதனை சாட்சிகளை கொண்டு நிரூபிக்க வேண்டும். (1999-2-MLJ-609).

7) Indian Evidence Act - sec 68 - உயிலை எழுதி வைத்தவர் உயிலில் கண்ட சொத்து விவரத்தின் கீழ் கையொப்பமிட்டார். மற்றபடி ஒரு பக்கத்தை தவிர மற்ற பக்கங்களில் கையொப்பம் செய்திருந்தார். எனவே இந்த உயில் செல்லக்கூடியதாகும்.
(AIR-1999-KER-274).

8) உயிலை எழுதி வைத்தவர் உயிலில் பெருவிரல் ரேகையைப் பதித்திருந்தார். உயிலை எழுதி வைத்தவருக்கு கையெழுத்து போட தெரியும். எனினும் கையெழுத்து போடாததற்கு என்ன காரணம் என்று உயிலில் குறிப்பிடப்படவில்லை . அதற்கான காரணத்தை அறிய சார்பதிவாளர் விசாரிக்கப்பட்டார். ஆனால் அது போதுமானதாக இல்லை. உயில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. (1999-3-MLJ-608).

9) அசல் உயில் ஒப்படைக்கப்படவில்லை. உயிலின் சான்றிட்ட நகல் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அது இரண்டாம் நிலை சாட்சியமாகும். அது சான்றாவணமாக அனுமதிக்கப்பட்டது. அசல் உயிலை ஒப்படைக்காதது பாதிப்பை ஏற்படுத்தாது.
(1999-3-MLJ-651).

10) உயில் எழுதப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் மற்றும் உயிலை தயாரித்தவர் என அனைவரும் இறந்து விட்டார்கள். இந்த உயிலில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்த உயிலை உண்மையானது என்று ஊகிக்கலாம். (AIR-2002-A. P - 164-NOC). (1999-3-MLJ-577)..

000011. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்

பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள் பலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், பல சட்டப்பிரிவுகள் உள்ளன என்பதை பொதுவாக  நாம் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தனிச்சட்டங்கள் இயற்ற, அரசியல் சட்டப்பிரிவு 15(3) வகை செய்கிறது, அதனடிப்படையில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் கீழ்க்கண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன.

1. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம், 2005,
2. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
3. The Immoral Traffic (prevention) Act
4. Muslim Women Protection of Rights on Divorce Act 1986
5. Family Couts Act 1984
6. National commission for Women Act 1990
7. Commission of Sati (prevention) Act 1987
8. Human Rights Act 1993
9. Women's Rights to property Act 1937.
10. The Divorce Act 1869.

இந்த சட்டங்கள் தவிர அரசியல் சட்டம், திருமணம் சட்டம், வாரிசு சட்டம், சுவிகாரச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சாட்டம், கருக்கலைப்பு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களிலும், பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு சட்டங்களையும் தனித்தனியாக பார்ப்போம்.

1) குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம் - 2005 ஒரு பெண்ணுடைய உடல் நலம், பாதுகாப்பு, உயிர், உடல், உறுப்பு அல்லது நல வாழ்வுக்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஊறு விளைவித்தல் அல்லது காயப்படுத்துதல் அல்லது அவ்வாறு செய்ய முயற்சித்தல், தகாத உடலுறுப்பு உணர்வுகளைப் புண்படுத்துதல், பொருளாதார ஊறு விளைவித்தல் அல்லது மதிப்புமிக்க காப்பீட்டு ஆவணங்களைப் பெறும் நோக்கத்தில் ஒரு பெண்ணை அல்லது அவரது உறவினரை மிரட்டும் வகையில் துன்புறத்துதல், தீங்கு செய்தல், காயம் ஏற்படுத்துதல் அல்லது பயமுறுத்துதல் ஆகியவை குடும்ப வன்முறையாகும்.

மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு அலுவலர்களை பணியமர்த்தும். அவர்கள் கூடுமானவரையில் பெண்களாக இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணுக்கு குடும்ப வன்முறை செய்யப்பட்டால் அவர் இந்தப் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தரவேண்டும். அந்த தகவலைப் பெற்ற அலுவலர் ஒரு அறிக்கையினை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் அனுப்ப வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தின் பேரில் ஒரு பாதுகாப்பான தங்குமிடம் ஏற்பாடு செய்து அதன் விவரங்களை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் பாதுகாப்பு அலுவலர் அறிக்கை தரவேண்டும். அப்பெண்ணுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனையும் அந்த அலுவலர் செய்வார்.

இந்த பாதுகாப்பு அலுவலர் குற்றவியல் நடுவரின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் பணிபுரிய வேண்டும். இந்தச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி, மருத்துவம், நிதி மற்றும் இதர உதவிகளைச் செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்யலாம். அப்புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நாள் பற்றிய அறிவிப்பை பாதுகாப்பு அலுவலர் மூலமாக எதிர்வாதி மற்றும் பிற நபர்களுக்கு சார்வு செய்ய ஆணையிடலாம், குற்றவியல் நடுவர் இரு தரப்பாரையும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த உறுப்பினரிடம் ஆலோசனை பெற உத்தரவிடலாம். வழக்கு விசாரணை குற்றவியல் நடுவரின் தனியறையில் நடத்தலாம்.

குடும்ப உறவு முறையிலுள்ள பெண் ஒருவருக்கு பங்கீடு செய்யப்பட்ட வீட்டில், உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்குவதற்கு உரிமை உண்டு. அவ்வீட்டிலிருந்து அவரை சட்டப்படியில் அல்லாது வெளியேற்ற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சீதனம் அடங்கிய சொத்துக்களை உரிமை மாற்றம் செய்ய, வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை வங்கி கணக்குகளை பயன்படுத்த குற்றவியல் நடுவர் தடை விதிக்கலாம்.

குடும்ப வன்முறை தொடரவும் தடைவிதிக்கலாம். குடும்ப வன்முறை செய்யாமல் இருக்க எதிர்வாதியிடமிருந்து வாக்குறுதிப் பத்திரம் தருமாறு குற்றவியல் நடுவர் கோரலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உத்தரவிடலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் இழப்பீடு தர எதிர்வாதிக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம். இழப்பீடு வழங்க உத்தரவிடும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைத் தரம், மன உளைச்சல், உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிய காயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கவும் குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் உண்டு, குற்றவியல் நடுவரின் ஆணைகளின் நகல்கள், புகார் கொடுத்தவர், எதிர்வாதி, காவல் நிலையம், தொண்டு நிறுவனம் ஆகிய வற்றிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு ஆணையை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை எதிர்வாதி மீறினால் ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.

குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஆணை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை நிறைவேற்றத் தவறும் பாதுகாப்பு அலுவலர் ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்

000010. கட்டாய ஹெல்மெட் சட்டம்!!

நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதே தமிழகம் முழுவதும் முதலில் கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தியது வழக்கறிஞர் சமுதாயம். 

அதன் விளைவாக பல்வேறு வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து , அவைகளெல்லாம் இன்னும் நடைபெற்று வருகிறது.   இது மக்களை  வாட்டி வதைக்கும், மாமூல் வாங்க காவல்துறைக்கு வழிவகுக்கும் என்றும் போராடப்பட்டது.

ஓரளவுக்கு  கண்டித்தும், ஹெல்மெட் அணிய ஆலோசனை விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முன்னெடுத்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து தனியார் வசூல் நிறுவனம் நடத்தும் முதலாளி போல ஒவ்வொரு சுற்று (ரோந்து) காவலருக்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகை மற்றும் வழக்கு எண்ணம் அளித்து சேவை துறையை நிறுவனம் போல நடத்தினால் லஞ்சமும், அதிகார மீறலும் ஏற்படுவதை தடுக்க முடியாது.

நேர்மையான அதிகாரிகளால் சில காலம் மட்டும் ஹெல்மெட் அணிந்து செல்லவதால் விபத்துகள் குறைந்ததும் ,
இந்திய அளவில் விபத்தில் உயிரிழப்பு முதலிடம் உள்ள தமிழகத்தை ஆறுதல் படுத்தியதும் புள்ளி விவரங்கள் கூறும் மறுக்க முடியாத உண்மை.

000009. இந்தியாவின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆகிவிட்ட கேரள பெண்ணின் வரலாறு எப்படி?

நாட்டில் உயர் நீதிபதிகளில் முதல் முஸ்லீம் பெண்மணியாக நியமிக்கப்பட்டு பின்னர், நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றபோது, ​​அவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் பின்னர் 1997 முதல் 2001 வரை இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பணியாற்றினார்.

Fathima Beevi என்ற கதை, வெளிப்படையாக அப்பால் செல்லத் துணிந்து, இந்தியாவின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக மாறியது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வக்கீல் இந்தூ மல்ஹோத்ராவை 68 ஆண்டுகளில் ஆறு பெண்களுக்கு நீதிபதிகள் நியமித்ததற்காக இந்திய உச்சநீதிமன்றக் கல்லூரியின் வரலாறு வரலாற்றை உருவாக்கியது.

தலைப்பு இந்த வெற்றியை கொண்டாடியது போல, சிலர் இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக மாறத் துணிந்து வெளிப்படையாகத் தாண்டிய இந்திய பெண்ணை ஞாபகப்படுத்தினர்.

நீதிபதி பாத்திமா பீவி, ஒரு மனிதனின் தனித்துவமாக கருதப்பட்ட ஒரு தொழிலைக் கைப்பற்ற சமூக நலன்களின் அனைத்து தடைகளையும் முறியடித்தார். இங்கே அவரது எழுச்சியூட்டும் கதை.

1927, ஏப்ரல் 30 ம் தேதி திருவிதாங்கூர் (தற்பொழுது கேரளா) மாநிலத்தில் பத்தனம்திட்டாவில் அன்னவேதில் மீரா சாஹிப் மற்றும் கதேஜா பிபி ஆகியோருக்குப் பிறந்தார். பாத்திமா திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டத்தைப் படித்தார். முதல் ஆண்டில் தனது வகுப்பில் உள்ள ஐந்து பெண்களில் ஒருவரான (இரண்டாம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டார்) ஒருவராக இருந்த போதினும், கடின உழைப்பு மாணவன் ஏற்கனவே வரலாற்றை உருவாக்கும் வழியிலேயே இருந்தார்.

1950 இல், பாத்திமா இந்தியாவின் பரீட்சை பார் கவுன்சிலின் முதல் பெண்மணியாக ஆனார். அதே ஆண்டு நவம்பர் மாதம் அவர் வழக்கறிஞராக சேர்ந்தார், கேரளாவின் கீழ் நீதித்துறைக்கு தனது தொழிலை தொடங்கினார், கொல்லம் நீதிமன்றத்தில் தலைமறைவாகிய பெண்மணியின்போது தங்கள் புருவங்களை உயர்த்திப் பிடித்த பலரின் அதிருப்திக்கு ஆளானார்.

000008. LAND LEASE சட்டம்

தனியாருக்கு சொந்தமில்லாத அரசு வசமுள்ள நிலங்கள், அரசு விலைக்கு வாங்கிய நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை தற்காலிக அனுபவத்திற்கென குறிப்பிட்ட கால வரையரைக்கு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்கப்படுவதே “குத்தகை” எனப்படும்.

வேளாண்மை அல்லது வேளாண்மை அல்லாத பிற பயன்பாட்டுக்கென இருவகையாக பிரித்து நிலம் குத்தகையில் வழங்கப்படுகிறது.

1) வருவாய் நிலை ஆணை எண்.15 (அ)ன்படி வேளாண்மை நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது.
2) வருவாய் நிலை ஆணை எண் 24 (அ) ன் படி வேளாண்மை அல்லாத பிற பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது.

குத்தகைகோரும் நிலத்தின் பயன்பாட்டு திட்டம் மற்றும் அதன் தன்மைக் கேற்ப குறுகிய காலமான 3 முதல் 10 ஆண்டுகளுக்கும் நீண்ட கால குத்தகை 30 ஆண்டுகளுக்கும் மிகாமலும் வழங்கப்படுகிறது.

வருவாய் நிலையாணை 15 அ ன்படி கீழ்கண்ட பயன்பாட்டிற்கென அரசு நிலங்களை குத்தகைக்கு வழங்கிடலாம்.

1)  புல் அல்லது இதர தீவனப்பயிர் விளைவிக்க
2)  பூந்தோட்டம் அமைத்திட
3)  சவுக்கு வளர்த்திட
4) தோட்ட விளைபொருள் பயிர் செய்திட
5) நெல், பருப்பு வகைகள், உணவு தான்யம், புகையிலை, முந்திரி, நிலக்கடலை போன்ற வாணிப பயிர்கள் விளைவித்திட வருவாய் நிலை ஆணை 15 அ(3)
வருவாய் நிலை ஆணை 24 (அ)ன் படி கீழ்கண்ட பயன்பாட்டிற்கென அரசு நிலங்களை குத்தகைக்கு  வழங்கிடலாம்.
1) கூடாரம் அல்லது சங்க கட்டிடத்துடன் அல்லது இவை இல்லாமலேயே பயன்படுத்தும், பொழுது போக்கிற்கான உபயோகங்கள்.
2) நிலையான அல்லது தற்காலிக பாலங்கள்,மதகுகள் அமைத்திட
3)  வாணிப கடைகள் அமைத்திட
4)  உலவும் திரைப்படம், சர்க்கஸ், நாடக கம்பெனி ஆகியவற்றிற்கு தற்காலிக அனுபவத்தில் அளித்தல் . வருவாய் நிலை ஆணை 24 அ (3)
இது தவிர பொதுப்பணித்துறை நிலங்கள் வருவாய்த்துறையின் அனுமதி பெற்ற பின்னரே பொதுப்பணித்துறை மூலம் குத்தகைக்கு வழங்கப்படும்.வருவாய் நிலையாணையில்  கண்ட வழி முறைகள் இதற்கும் பின்பற்றப்பட வேண்டும். (பொதுப்பணித்துறை நடைமுறை விதி 172(1))
கீழ்கண்ட அரசு நிலங்களில் குத்தகை தடை செய்யப்பட்டுள்ளது.

ஓடை, குளம்,வாய்க்கால் போன்ற நீர் நிலை புறம்போக்குகள்

                   (அரசாணை எண்.41 வருவாய்த்துறை நாள்:20.1.87)

மேய்ச்சல் தரை, மந்தைவெளி

                  (அரசாணை எண்.959 வருவாய்த்துறை நாள்:23.6.1987)

மயானம், இடுகாடு

                 (அரசாணை எண்.116 வருவாய்த்துறை நாள்:20.1.88)
ஆண்டுதோறும் நில மதிப்பு கூடி வருவதால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை தொகையை அன்றைய நடப்பு சந்தை மதிப்புக்கேற்ப நிர்ணயம் செய்து வரவேண்டும். குத்தகை தொகை நிர்ணயம் செய்திட வணிகமற்ற நோக்கத்திற்கு நில மதிப்பில்  1 சதவிகிதமும், குத்தகை கோரும் நிலம் வணிக நோக்கில் இருந்தால் நில மதிப்பில் 2 சதவிகிதமும் குத்தகை தொகையாக நிர்ணயம் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குத்தகை தொகைக்கு ஊராட்சி சட்டம் 1958 பிரிவு 115ன்படி தலவரி மற்றும் தலமேல் வரி முதலியவற்றையும் வசூலிக்க வேண்டும். வணிக நோக்கத்திற்கு தலவரி 2 சதவிகிதமும் தலமேல்வரி 10 சதவிகிதமும் குத்தகை தொகை 2 சதவிகிதமும் சேர்த்து மொத்தம் 14 சதவிகிதம் வணிகமற்ற நோக்கத்திற்கு தலவரி, ஒரு சதவிகிதமும் தலமேல் வரி 5 சதவிகிதமும், குத்தகை தொகை ஒரு சதவிகிதமும் சேர்த்து மொத்தம் 7 சதவிகிதமும் நிர்ணயிக்கப்பட வேண்டும் (அரசாணை நிலை எண்.460 வருவாய்த்துறை (நி.மு.உ) நாள்:4.6.98.
வருவாய் நிலை ஆணை விதிகளின்படி குத்தகை பத்திரங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். எனினும் இவற்றிற்கு இந்திய முத்திரைத் தாள் சட்டத்தின் கீழ் விதிவிலக்கு உண்டு.
எந்த காரணத்திற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டதோ அது முறைப்படுத்தப்படாமல் விதி மீறல் ஏதேனும் இருக்குமானால் அவ்வினங்களை கண்டறிந்து அவற்றை மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உப்பள குத்தகை:

அரசு உப்பள நிலங்கள், உப்பு தயாரிக்கும் பொருட்டு 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகின்றன. இதில் பெருமளவிலான நிலங்கள் அரசு நிறுவனமான தமிழ்நாடு உப்பு கழகம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். தனி நபருக்கு 6 ஹெக்டேர் நிலமும் கூட்டுறவு சங்கங்களுக்கு 40 ஹெக்டேர் நிலமும் வழங்கப்படும். அரசாணை எண்.208 வருவாய்த்துறை நாள் 12.3.93ன்படி உப்பள நிலங்களுக்கான குத்தகை தொகை மற்றும் ராயல்டி தொகை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1)  ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு குத்தகை தொகை ரூ.60/-
2)  ராயல்டி தொகை ஆண்டொன்றுக்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு மெட்ரிக் டன் உப்புக்கு ரூ.1 வீதம் குறைந்தபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 25 வீதம்.
இதனைத் தவிர்த்து குத்தகை தொகையின் பேரில் அவ்வப்போது அரசால் நிர்ணயிக்கப்படும் தலவரி மற்றும் தலமேல்வரியும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட வேண்டும்.

மீன்வளக் குத்தகை:

இறால் / மீன் வளர்ப்புக்கு தனியார் நிறுவனங்களுக்கு உவர் நீர் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குத்தகையில் வழங்கப்பட்டு வருகின்றன. இறால் வளர்ப்புக்காக நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கு வருவாய்  வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அதிகாரம் கிடையாது. மாவட்ட ஆட்சியர் நில நிர்வாக ஆணையர் மூலம் அரசுக்கு (வருவாய்த்துறை) அறிக்கை அனுப்ப வேண்டும்.
குத்தகைக்கு அனுப்ப வேண்டிய இயல்பான விவரங்களுடன் கீழ்க்காணும் கூடுதல் ஆவணங்களுடன் கருத்துருக்கள் அனுப்பப்படவேண்டும்.
1)  தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் சான்று
2)  மீன்துறை துணை இயக்குநரின் நிலத்தகுதி சான்று
3)  விவசாய நிலங்கள்பாதிக்கப்படாது என்பதற்கான மாவட்ட வேளாண் அதிகாரியின் தடையில்லா சான்று
4)  நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலம் கோருபவரின் கையிருப்பு நிலங்கள் காணப்படுகிறதா என்பதற்கான சான்று உதவி ஆணையரிடமிருந்து பெற வேண்டும்.
(அரசாணை நிலை எண்.198 வருவாய்த்துறை நாள்:17.2.95)
அரசு நிலங்களை குத்தகைக்கு கொடுப்பதற்கு எந்தெந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவோ அவற்றை  இறால் பண்ணை அமைத்திட நிலங்களை குத்தகைக்கு அளிப்பதிலும் பின்பற்றப்பட வேண்டும்.