Sunday, November 4, 2018

000073. வருவாய்த் தீர்வாயம்

 ஜமாபந்தி:

ஜீலை மாதம் முதல் தொடங்கி அடுத்த ஆண்டு ஜீன் 30-ஆம் தேதி வரை உள்ள வருவாய்த் துறையின் காலம் பசலி ஆண்டு எனப்படும்

பசலி ஆண்டு தோன்றிய காலம்

முதலாம் அரசர் அக்பர் காலத்தில் நிலவரி பணத்தைப் பிரித்து பார்ப்பதற்கு பசலி ஆண்டு என்ற ஒரு கணக்கு ஆண்டு தோன்றியது.இது வட இந்தியாவில் மட்டுமே இருந்தது. பின்பு ஆட்சிக்கு வந்த ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும் ஏற்படுத்தப்பட்டது. பசலி ஆண்டு முன்பு உள்ள காலத்தில் ஆடி மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கியது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவை ஜீலை 1-ஆம் தேதி முதல் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)

ஒரு பசலி ஆண்டில் வருவாய்த் துறையில் நிலவரி மற்றும் கிராமக் கணக்குகளை பசலி ஆண்டு என்ற முறையில் பராமரித்து முடிக்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்வது ஆகும்.அரசுக்குச் சொந்தமான நிலங்களில் நிலவரி, தண்ணீர் தீர்வை, புறம்போக்கு நில ஆக்ரமணத் தீர்வை, அபராதம் மற்றும் உள்ளூர் வரிகள் மரத்தீர்வை ஆகியவை முறையாக கணக்கிடப்பட்டு, கிராம கணக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளனவா என்பதனையும் பொருளாதார வளர்ச்சிக்கும் புள்ளி விவரங்கள் தக்க முறையில் தரப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் ஆய்வு “வருவாய்த் தீர்வாயம்” ஆகும். வருவாய்த் தீர்வாயம் பொதுவாக ஏப்ரல் மாதம் தொடங்கி ஜீன் மாதம் வரை நடைபெறும். ஜமாபந்திக்கான வட்ட வாரியாக மற்றும் கிராம வாரியாக நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்யப்படும். துணை ஆட்சியர் நிலைக்குச் சமமான அலுவலர்கள் ஒவ்வொரு வட்டத்திலும் தீர்வாயத்தை நடத்த அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.  ஒவ்வொரு வருவாய்க் கோட்ட அலுவலரும், கண்டிப்பாக தன் அதிகார எல்லைக்குட்பட்டு ஒன்று அல்லது இரண்டு வட்டங்களுக்கு பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார்.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுழற்சி முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வட்டத்திற்கு வருவாய்த் தீர்வாயத்தின் அலுவலராக இருப்பார்கள். ஜமாபந்தி நிகழ்வை ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் அறிந்து கொள்ளும் அளவுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். முக்கியமாக இந்த ஜமாபந்தியை நடத்துவதின் நோக்கம், கிராமக் கணக்குகளை முடிப்பதோடு பொதுமக்களின் தேவைகளை அறிந்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்பதுதான். இதற்காகப் பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நிகழ்ச்சி நடப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பெற்று விசாரணை நடத்தி, உரிய ஆணைக்காக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முக்கிய ஜமாபந்தியின் போது பயிராய்வு செய்வது, புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்ரமணங்களை கவனமாக பார்வையிட்டு தக்க முறையில் நடவடிக்கை எடுப்பது, நில ஒப்படை, நில உரிமை விட்டுவிடல், நில உரிமை மற்றும் வகைப்பாடு மாற்றம், வருவாய் பதிவுகள் மாற்றம் ஆகியவை ஒழுங்காகவும் உடனடியாகவும் செய்யப்பட்டு முடிவெடுப்பது. பணக் கணக்குகளையும், தீர்வையை தள்ளி வைக்கக் கொரும் விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து நிலத் தீர்வைகள் எவ்வப்போது வசூலிக்கத் தக்கனவோ அவ்வப்போது வசூல் செய்வது போன்ற பணிகள் நடைபெறும். மிகுதியாகச் செலுத்திய நிலவரியைத் திருப்பிக் கொடுப்பது போன்ற பணிகளை முறையாக வட்டாட்சியர் மற்றும் அவரைச் சார்ந்த அலுவலர்கள் செய்துள்ளார்களா என்று ஆய்வு செய்யப்படும்.

ஜமாபந்தியின் போது கலந்து கொள்பவர்கள்

உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள், ஊராட்சி அமைப்புகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேலும் இதர துறை அலுவலர்களையும் இதில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.   ஜமாபந்தியில் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் தவிர இதர விதமான கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்களும் பெற்று அதற்குண்டான தீர்வுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சாலை அமைப்பது, செப்பனிடுவது, குடிநீர்ப் பிரச்சனைகளைத் தீர்ப்பது, ஏரி, கண்மாய், கால்வாய், குளம் குட்டை ஆகிய நீர் ஆதாரங்களை செப்பனிடுவது குறித்தான கோரிக்கைகளையும் பொதுமக்களிடமிருது பெறுவது. அரசு அவ்வப்போது அறிவிக்கும் சமூக நலத்திட்டங்கள் அடங்கிய கோரிக்கைகள் ஆராயப்படும். VAO பராமரிக்கும் கணக்குகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டுள்ளனவா என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கும் கணக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்து அந்த வருவாய் கிராமத்திற்கான நிலவரி மொத்தம் எவ்வளவு என்று தீர்மானித்து வருவாய் தீர்வாயத்தின் அலுவலர் கிராம கணக்கு எண் 10(2) மற்றும் 12 ஆகிய கணக்குகளுடன் ஒப்புதல் செய்வார். இந்த ஒப்புதல் செய்த தொகையே அந்தக் கிராமத்தின் நடப்பு பசலி நிலவரி கேட்பாகும்.


ஜமாபந்தியின் போது VAO பராமரிக்கும் கணக்குகள்:

VAO ஒவ்வொரு பசலி ஆண்டிலும் ஒவ்வொரு கணக்குகளுக்கு சிறப்பு பதிவெடுகள் தயார் செய்து குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு வருவாய் ஆய்வாளரிடமிருந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தின் தீவிர ஆய்வுக்குப் பின்பு வருவாய் தீர்வாயத்திற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்களின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். கடைசியாக நிகழ்ச்சி நிரலின்படி குறிப்பிட்ட நாளில் வருவாய் தீர்வாயத்தின் அலுவலர் முன்பு கணக்குகளைத் தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஒவ்வொரு பசலி ஆண்டும் இந்த தீர்வாயம் ஜீன் மாத இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும், தாமதம் நேரிட்டால் அதற்குண்டான காரணங்களை விளக்கி வருவாய் நிர்வாக ஆணையரின் ஆணையைப் பெற்று வருவாய் தீர்ப்பாயத்தை ஜீன் மாதத்திற்கு பின்பு நடத்தலாம். மக்களின் பிரச்சனைகளை, தேவைகளைத் தீர்த்து வைப்பதுதான் ஜமாபந்தியின் நோக்கமாகும்.(வருவாய் நிலை ஆணை எண் 12)கிராம நிர்வாக அலுவலருக்கு வருவாய் தீர்வாயப் படியாக ஆண்டிற்கு ரூ. 1700 வழங்கப்படுகிறது.

இனாம்கள் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட இனங்கள்

முன்னால் இந்து மன்னர்கள் காலத்திலும், முகமதியர் காலத்திலும் மத ஸ்தாபனங்களுக்கும் தர்ம ஸ்தாபனங்களுக்கும், ஊழியர்களுக்கும்,  துறவிகளுக்கும் மற்றும் அறிவாளிகளுக்கும் நிலவரியில்லாமலோ அல்லது குறைந்த அளவு நிலவரி செலுத்துவதற்குட்பட்டோ ஊழியர் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் இனாம் நிலங்களாகும்.


இனாம் நிலங்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது.

தேவதாயம் : மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊழியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள் ஆகும்.


 தர்மாதாயம்: சத்திரம், தண்ணீர்ப் பந்தல் மற்றும் கல்வி ஸ்தாபங்களுக்குக் கொடுக்கப்பட்ட இனாம்கள்.


தசபந்தம்: வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களைப் பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம் ஆகும்.

பிரம்மதேயம்: வேதியர்களுக்கும் மற்றும் இதர மதத்திற்கும் சொந்த உபயோகத்திற்கு வழங்கப்பட்ட இனாம்கள்.

காவல் ஊழியம் : நாட்டின் பண்டைக்கால காவல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்கள்.

கிராம ஊழியம் : சாதாரண கிராம வரிவசூல் மற்றும் கிராம காவல் வேலைகளுக்காக வழங்கப்பட்ட இனாம்கள்.

கைவினைஞர் இனாம் : தச்சர், கொல்லர், நாவிதர், முதலிய கைவினைஞர்களுக்குக் கிராம ஊழியத்திற்குக் கொடுக்கப்பட்ட இனாம்கள்.

கிவிட்ரெண்ட்(Quit Rent):

ஊழியம் தேவைப்படாத கிராமங்களை பொறுத்தமட்டில் அவை உரிமை அளிக்கப்பட்ட இனாம்களாக கருதப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இனாம் நிலங்களை விற்கவோ,வாங்கவோ, மாற்றவோ உரிமையாக்கப்பட்டது.இதற்குண்டான தொகை ரயத்துவாரி தீர்வைக்கு நிகராக விதிக்கப்பட்டது. அந்த தொகைக்கு கிவிட் ரென்ட் (Quit Rent) என்று பெயர்.ஊழியம் தேவைப்பட்ட இனாம்களை பொறுத்த வரையில் உரிமை அளிக்கப்படாத நிலங்களாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்ட இனாம் நிலங்களை விற்கவோ, வாங்கவோ மாற்றவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.ஊழியம் நடைபெறும் ஆண்டு வரை அனுபவித்து வரலாம், ஊழியத்தை நிறுத்திவிட்டால் அந்த நிலங்களை அரசினர் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.(1963 – ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டச் சட்டத்தின்படி இனாம்கள் ஒழிக்கப்பட்டது).

ஜமின் முறை:

மன்னர் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல்செய்ய இடைத் தரகர்கள் ஏற்படுத்தப்பட்டனர்.இவர்களுக்கு ஜமீன் தாரர் என்று பெயர், இவர்கள் பணி, நிலவரி போன்றவற்றை வசூல் செய்து கணக்குகளுடன் மன்னர்களுக்கு ஒப்படைப்பதாகும்.இதற்காக அவர்களுக்கு நாட்டின் ஒரு பகுதியினை நிலவரி வசூல் செய்து ஆண்டு அனுபவித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டதுஅவ்வாறு வழங்கப்பட்ட பகுதிக்கு ஜமீன் என்று பெயர். பிறகு ஜிமீந்தாரருக்கு வரிவசூல் செய்யும் உரிமை நிரந்தரமாக வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டது. முழு வருவாயும் கணக்கிடப்பட்டு ஒரு பகுதி அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையாக நிர்னயிக்கப்பட்டது, அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு பேஷ்குஷ் என்று பெயராகும். இனாம்தாரரால் இனாம் நிலங்களுக்கு ஜமீன் தாரருக்கு செலுத்தப்பட வேண்டிய தொகைக்கு ஜோடி என்று பெயர்.1948-ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தினால் எல்லா ஜமீன்களும் ஒழிக்கப்பட்டது. சில மத ஸ்தாபனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இனாம்தாரர்களாகவும், ஜமீன் தாரர்களாகவும் இருதார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்தாபனங்களைத் தொடர்ந்து நடத்த உதவி தேவைப்பட்டது. அதற்காக நிலவரி திட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்டத் தொகை அவர்க்ளுக்குப் பிரதி வருடம் வழங்கப்பட்டது அத்தகைய தொகைக்கு தஸ்டிக் படிகள்’(Tasdic Allowances) என்று பெயர்.

No comments:

Post a Comment