Sunday, November 4, 2018

000074. குற்ற பத்திரிக்கை என்றால் என்ன ?

ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்யும் பிரிவு ( உதராணம் : காவல்துறை ) குற்றம் செய்தவர்களை பற்றி தயாரிக்கும் ஒரு ஆவணம்.  இது நீதிமன்றத்தில் சமர்பிக்கபடுகிறது.  நீதிமன்றத்தில் இது சமர்பிக்கபட்டவுடன், யார் குற்றம் இழைத்தார்கள் என்று நீதிமன்றம் கருதுகிறதோ, அவர்கள் மேல் வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிடும், முதல் தகவல் அறிக்கையின் தொடர்ச்சியே, குற்ற பத்திரிக்கை. குற்ற பத்திரிக்கையில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களை சேர்க்காமலும் விடலாம். சேர்க்காமல் விட, போலீஸ் காரணம் சொல்ல வேண்டும்.  புகார் மனுதாரருக்கு, காவல் துறை சரியாக விசாரிக்காமல், விட்டு விட்டதாக எண்ணம் இருந்தால், மீண்டும் விசாரிக்க சொல்லி, அதே வழக்கில், அதே நீதிமன்றத்தில் மனு செய்யலாம். அல்லது உயர்நீதிமன்றத்தில் மனு செய்யலாம். குற்ற பத்திரிக்கையில் புகார் மனுதார், மற்றும் நடந்த சம்பவத்தை விவரிக்கும் சாட்சிகள் ஆகியோரின் வாக்கு மூலங்கள் இருக்கும். விசாரணை அதிகாரி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த அதிகாரி அனைவரது வாக்கு மூலம் இருக்கும். 

புகார் மனு, முதல் தகவல் அறிக்கை, குற்ற பத்திரிக்கை ஆகியவற்றில் உள்ள முரண்களை வைத்தே, குற்றவாளிகள் விடுதலை ஆகிறார்கள்.

முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து, அறுபது நாட்கள் முதல் தொண்ணூறு நாட்களுக்குள், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், பிணை கிடைக்காத குற்றவாளிக்கு பிணை கிடைக்க கூடும். உரிய காலத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யாவிட்டால், புகார் மனுதார், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ, வழக்கு தொடுத்து, குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய சொல்லலாம்.

000073. வருவாய்த் தீர்வாயம்

 ஜமாபந்தி:

ஜீலை மாதம் முதல் தொடங்கி அடுத்த ஆண்டு ஜீன் 30-ஆம் தேதி வரை உள்ள வருவாய்த் துறையின் காலம் பசலி ஆண்டு எனப்படும்

பசலி ஆண்டு தோன்றிய காலம்

முதலாம் அரசர் அக்பர் காலத்தில் நிலவரி பணத்தைப் பிரித்து பார்ப்பதற்கு பசலி ஆண்டு என்ற ஒரு கணக்கு ஆண்டு தோன்றியது.இது வட இந்தியாவில் மட்டுமே இருந்தது. பின்பு ஆட்சிக்கு வந்த ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும் ஏற்படுத்தப்பட்டது. பசலி ஆண்டு முன்பு உள்ள காலத்தில் ஆடி மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கியது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவை ஜீலை 1-ஆம் தேதி முதல் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)

ஒரு பசலி ஆண்டில் வருவாய்த் துறையில் நிலவரி மற்றும் கிராமக் கணக்குகளை பசலி ஆண்டு என்ற முறையில் பராமரித்து முடிக்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்வது ஆகும்.அரசுக்குச் சொந்தமான நிலங்களில் நிலவரி, தண்ணீர் தீர்வை, புறம்போக்கு நில ஆக்ரமணத் தீர்வை, அபராதம் மற்றும் உள்ளூர் வரிகள் மரத்தீர்வை ஆகியவை முறையாக கணக்கிடப்பட்டு, கிராம கணக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளனவா என்பதனையும் பொருளாதார வளர்ச்சிக்கும் புள்ளி விவரங்கள் தக்க முறையில் தரப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் ஆய்வு “வருவாய்த் தீர்வாயம்” ஆகும். வருவாய்த் தீர்வாயம் பொதுவாக ஏப்ரல் மாதம் தொடங்கி ஜீன் மாதம் வரை நடைபெறும். ஜமாபந்திக்கான வட்ட வாரியாக மற்றும் கிராம வாரியாக நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்யப்படும். துணை ஆட்சியர் நிலைக்குச் சமமான அலுவலர்கள் ஒவ்வொரு வட்டத்திலும் தீர்வாயத்தை நடத்த அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.  ஒவ்வொரு வருவாய்க் கோட்ட அலுவலரும், கண்டிப்பாக தன் அதிகார எல்லைக்குட்பட்டு ஒன்று அல்லது இரண்டு வட்டங்களுக்கு பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார்.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுழற்சி முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வட்டத்திற்கு வருவாய்த் தீர்வாயத்தின் அலுவலராக இருப்பார்கள். ஜமாபந்தி நிகழ்வை ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் அறிந்து கொள்ளும் அளவுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். முக்கியமாக இந்த ஜமாபந்தியை நடத்துவதின் நோக்கம், கிராமக் கணக்குகளை முடிப்பதோடு பொதுமக்களின் தேவைகளை அறிந்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்பதுதான். இதற்காகப் பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நிகழ்ச்சி நடப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பெற்று விசாரணை நடத்தி, உரிய ஆணைக்காக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முக்கிய ஜமாபந்தியின் போது பயிராய்வு செய்வது, புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்ரமணங்களை கவனமாக பார்வையிட்டு தக்க முறையில் நடவடிக்கை எடுப்பது, நில ஒப்படை, நில உரிமை விட்டுவிடல், நில உரிமை மற்றும் வகைப்பாடு மாற்றம், வருவாய் பதிவுகள் மாற்றம் ஆகியவை ஒழுங்காகவும் உடனடியாகவும் செய்யப்பட்டு முடிவெடுப்பது. பணக் கணக்குகளையும், தீர்வையை தள்ளி வைக்கக் கொரும் விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து நிலத் தீர்வைகள் எவ்வப்போது வசூலிக்கத் தக்கனவோ அவ்வப்போது வசூல் செய்வது போன்ற பணிகள் நடைபெறும். மிகுதியாகச் செலுத்திய நிலவரியைத் திருப்பிக் கொடுப்பது போன்ற பணிகளை முறையாக வட்டாட்சியர் மற்றும் அவரைச் சார்ந்த அலுவலர்கள் செய்துள்ளார்களா என்று ஆய்வு செய்யப்படும்.

ஜமாபந்தியின் போது கலந்து கொள்பவர்கள்

உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள், ஊராட்சி அமைப்புகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேலும் இதர துறை அலுவலர்களையும் இதில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.   ஜமாபந்தியில் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் தவிர இதர விதமான கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்களும் பெற்று அதற்குண்டான தீர்வுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சாலை அமைப்பது, செப்பனிடுவது, குடிநீர்ப் பிரச்சனைகளைத் தீர்ப்பது, ஏரி, கண்மாய், கால்வாய், குளம் குட்டை ஆகிய நீர் ஆதாரங்களை செப்பனிடுவது குறித்தான கோரிக்கைகளையும் பொதுமக்களிடமிருது பெறுவது. அரசு அவ்வப்போது அறிவிக்கும் சமூக நலத்திட்டங்கள் அடங்கிய கோரிக்கைகள் ஆராயப்படும். VAO பராமரிக்கும் கணக்குகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டுள்ளனவா என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கும் கணக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்து அந்த வருவாய் கிராமத்திற்கான நிலவரி மொத்தம் எவ்வளவு என்று தீர்மானித்து வருவாய் தீர்வாயத்தின் அலுவலர் கிராம கணக்கு எண் 10(2) மற்றும் 12 ஆகிய கணக்குகளுடன் ஒப்புதல் செய்வார். இந்த ஒப்புதல் செய்த தொகையே அந்தக் கிராமத்தின் நடப்பு பசலி நிலவரி கேட்பாகும்.


ஜமாபந்தியின் போது VAO பராமரிக்கும் கணக்குகள்:

VAO ஒவ்வொரு பசலி ஆண்டிலும் ஒவ்வொரு கணக்குகளுக்கு சிறப்பு பதிவெடுகள் தயார் செய்து குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு வருவாய் ஆய்வாளரிடமிருந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தின் தீவிர ஆய்வுக்குப் பின்பு வருவாய் தீர்வாயத்திற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்களின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். கடைசியாக நிகழ்ச்சி நிரலின்படி குறிப்பிட்ட நாளில் வருவாய் தீர்வாயத்தின் அலுவலர் முன்பு கணக்குகளைத் தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஒவ்வொரு பசலி ஆண்டும் இந்த தீர்வாயம் ஜீன் மாத இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும், தாமதம் நேரிட்டால் அதற்குண்டான காரணங்களை விளக்கி வருவாய் நிர்வாக ஆணையரின் ஆணையைப் பெற்று வருவாய் தீர்ப்பாயத்தை ஜீன் மாதத்திற்கு பின்பு நடத்தலாம். மக்களின் பிரச்சனைகளை, தேவைகளைத் தீர்த்து வைப்பதுதான் ஜமாபந்தியின் நோக்கமாகும்.(வருவாய் நிலை ஆணை எண் 12)கிராம நிர்வாக அலுவலருக்கு வருவாய் தீர்வாயப் படியாக ஆண்டிற்கு ரூ. 1700 வழங்கப்படுகிறது.

இனாம்கள் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட இனங்கள்

முன்னால் இந்து மன்னர்கள் காலத்திலும், முகமதியர் காலத்திலும் மத ஸ்தாபனங்களுக்கும் தர்ம ஸ்தாபனங்களுக்கும், ஊழியர்களுக்கும்,  துறவிகளுக்கும் மற்றும் அறிவாளிகளுக்கும் நிலவரியில்லாமலோ அல்லது குறைந்த அளவு நிலவரி செலுத்துவதற்குட்பட்டோ ஊழியர் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் இனாம் நிலங்களாகும்.


இனாம் நிலங்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது.

தேவதாயம் : மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊழியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள் ஆகும்.


 தர்மாதாயம்: சத்திரம், தண்ணீர்ப் பந்தல் மற்றும் கல்வி ஸ்தாபங்களுக்குக் கொடுக்கப்பட்ட இனாம்கள்.


தசபந்தம்: வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களைப் பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம் ஆகும்.

பிரம்மதேயம்: வேதியர்களுக்கும் மற்றும் இதர மதத்திற்கும் சொந்த உபயோகத்திற்கு வழங்கப்பட்ட இனாம்கள்.

காவல் ஊழியம் : நாட்டின் பண்டைக்கால காவல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்கள்.

கிராம ஊழியம் : சாதாரண கிராம வரிவசூல் மற்றும் கிராம காவல் வேலைகளுக்காக வழங்கப்பட்ட இனாம்கள்.

கைவினைஞர் இனாம் : தச்சர், கொல்லர், நாவிதர், முதலிய கைவினைஞர்களுக்குக் கிராம ஊழியத்திற்குக் கொடுக்கப்பட்ட இனாம்கள்.

கிவிட்ரெண்ட்(Quit Rent):

ஊழியம் தேவைப்படாத கிராமங்களை பொறுத்தமட்டில் அவை உரிமை அளிக்கப்பட்ட இனாம்களாக கருதப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இனாம் நிலங்களை விற்கவோ,வாங்கவோ, மாற்றவோ உரிமையாக்கப்பட்டது.இதற்குண்டான தொகை ரயத்துவாரி தீர்வைக்கு நிகராக விதிக்கப்பட்டது. அந்த தொகைக்கு கிவிட் ரென்ட் (Quit Rent) என்று பெயர்.ஊழியம் தேவைப்பட்ட இனாம்களை பொறுத்த வரையில் உரிமை அளிக்கப்படாத நிலங்களாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்ட இனாம் நிலங்களை விற்கவோ, வாங்கவோ மாற்றவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.ஊழியம் நடைபெறும் ஆண்டு வரை அனுபவித்து வரலாம், ஊழியத்தை நிறுத்திவிட்டால் அந்த நிலங்களை அரசினர் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.(1963 – ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டச் சட்டத்தின்படி இனாம்கள் ஒழிக்கப்பட்டது).

ஜமின் முறை:

மன்னர் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல்செய்ய இடைத் தரகர்கள் ஏற்படுத்தப்பட்டனர்.இவர்களுக்கு ஜமீன் தாரர் என்று பெயர், இவர்கள் பணி, நிலவரி போன்றவற்றை வசூல் செய்து கணக்குகளுடன் மன்னர்களுக்கு ஒப்படைப்பதாகும்.இதற்காக அவர்களுக்கு நாட்டின் ஒரு பகுதியினை நிலவரி வசூல் செய்து ஆண்டு அனுபவித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டதுஅவ்வாறு வழங்கப்பட்ட பகுதிக்கு ஜமீன் என்று பெயர். பிறகு ஜிமீந்தாரருக்கு வரிவசூல் செய்யும் உரிமை நிரந்தரமாக வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டது. முழு வருவாயும் கணக்கிடப்பட்டு ஒரு பகுதி அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையாக நிர்னயிக்கப்பட்டது, அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு பேஷ்குஷ் என்று பெயராகும். இனாம்தாரரால் இனாம் நிலங்களுக்கு ஜமீன் தாரருக்கு செலுத்தப்பட வேண்டிய தொகைக்கு ஜோடி என்று பெயர்.1948-ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தினால் எல்லா ஜமீன்களும் ஒழிக்கப்பட்டது. சில மத ஸ்தாபனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இனாம்தாரர்களாகவும், ஜமீன் தாரர்களாகவும் இருதார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்தாபனங்களைத் தொடர்ந்து நடத்த உதவி தேவைப்பட்டது. அதற்காக நிலவரி திட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்டத் தொகை அவர்க்ளுக்குப் பிரதி வருடம் வழங்கப்பட்டது அத்தகைய தொகைக்கு தஸ்டிக் படிகள்’(Tasdic Allowances) என்று பெயர்.

Saturday, November 3, 2018

000072. நுகர்வோர் உரிமைகள்

மனிதனுடைய உரிமைகள் பல்வகைப்பட்டன. ஒரு மனிதன் மனிதனாக வாழ அத்தியாவசியமான அனைத்தையும் மனித உரிமைகள் எனப் பொதுவாகக் கூறுகின்றோம். மனிதனுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பன அத்தியாவசியமான உரிமைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

இவ்வகையில், தமது அடிப்படை வாழ்க்கைக்குரிய பொருட்களையும், தேவைகளையும் நுகர்வோருடைய உரிமைகளைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

நுகர்வோர் என்பவர்?

பொது வழக்கிலே நுகர்வோர் என்பவர், பொருட்களையும் சேவைகளையும் விலை கொடுத்துப் பெற்றுக்கொள்பவர் எனக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்வோர் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய கடப்பாட்டையும் உடையவர்களாவர்.

நுகர்வோர் உரிமைகள்:

கைத்தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப அபிவிருத்தி புதிய கண்டுபிடிப்புக்கள் என்பன புதிய பொருட்களையும், சேவைகைளையும் நாளாந்தம் சந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. உலகமயமாக்கலின் விளைவாக நாட்டிற்கு நாடு போட்டி நிலவுகின்றது.

ஒவ்வொரு நாடும் உலகில் தமது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல வகையான நவீன உபகரணங்கள், வாகனங்கள் என எண்ணிலடங்காத பொருட்களையும், சேவைகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றது.

இது நுகர்வோரை நோக்கிய ஒரு பயணமாக இருக்கின்றது. நுகர்வோரைக் கவரக்கூடிய வகையில், அவர்களுடைய தேவைகள், அந்தஸ்துக்களை அறிந்து இவ்வாறான வியாபார நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பொருட்களையும் சேவைகளையும் விலை கொடுத்து வாங்கும் நாம் அவை தரம் வாய்ந்தவையாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும், தமது தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் குறைபாடின்றி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதிலும் எவ்வித தவறும் இல்லை.

நுகர்வோர் உரிமைகளை ஏன் சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கேள்வி நம்மிடையே எழக்கூடும். சட்டம் சமூகத்தின் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் ஒரு கருவி எனவும் மக்கள் இந்த நடவடிக்கைகளால் பாதிப்படையும் போது பரிகாரம் வழங்கும் ஒரு ஆயுதம் எனவும் பார்த்தோம்.

நுகர்வோருடைய பாதுகாப்புகள் தொடர்பாகப் பார்க்கின்ற போது உலகளாவிய ரீதியில் நுகர்வோர் உரிமைகள் எல்லா நாடுகளிலும் கவனமெடுக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டு வருகின்ற ஒரு துறையாகும்.

போட்டி ரீதியான வியாபாரச் சந்தையில் குறைபாடுடைய பொருட்கள், சேவைகள் நியாயமற்ற வியாபார நடைமுறைகள், கறுப்பச் சந்தை என்பன தோன்றியுள்ள வேளையில் நுகர்வோர் தம்முடைய கடப்பாடுகளையும் உரிமைகளையும் பற்றித் தெரிந்திருப்பது அவசியமாகும்.

அதேவேளை, அவர்களைப் பாதுகாப்பதற்குரிய வழிவகைகளை மேற்கொள்வது அரசினுடைய கடப்பாடாகவும் இருந்து வருகின்றது.

சர்வதேச நுகர்வோர் அமைப் பினால் பின்வருவன நுகர்வோர் உரிமைகளாக வரைவிலக் கணப்படுத்தப்பட்டுள்ளன:

1. அடிப்படைத் தேவைகளைத் திருப்தியாகப் பெற்றுக்கொள்ளும் உரிமை: 

அனைத்து நுகர்வோரும், உணவு, குடிநீர், உடை, வீடு, சுகாதார வசதிகள் என்பனவற்றைப் பெற்றுக்கொள்ளும் உரிமை இதனைச் சற்று விரிவாக எடுத்துப் பார்க்கின்ற போது உணவு- சமைத்த உணவாகவோ அல்லது டின்களில், போத்தல்களில் அடைக்கப்பட்ட உணவு மற்றும் சமைப்பதற்குத் தயாராக இருக்கும் அரிசி, காய்கறி, ஏனைய பொருட்களை நாம் விலை கொடுத்து வாங்கும் போது அவை சுத்தமானதாகவும் உடலுக்குக் கேடு விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும்.

ஹோட்டலில் சரியான முறையில் சுத்தமாக சமைக்காத உணவுகளை பெற்றுக்கொள்ளும் நாம் அதன் விளைவாக பல நோய்களுக்கு ஆளாகின்றோம். இதேபோன்று சுத்தமான குடிநீர் அவசியமாகும்.

மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் நீர் வசதியும், முறையாக அமைக்கப்பட்ட மலசல கூடம் என்பன அத்தியாவசியமானதாகும்.

இன்னொரு முக்கிய விடயத்தைக் குறிப்பிடும் நாம் பொது மலசல கூட வசதிகளை ஆங்காங்கே நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். அவற்றுக்குக் கட்டணங்கள் அறவிக்கப்படுகின்றன. எனினும், அவற்றைச் சரியாக சுகாதாரமான முறையில் நடத்தி நிர்வகிக்கத் தவறுகின்ற போது நுகர்வோராகிய நாம் இந்தச் சேவையில் திருப்தியடைய முடியாது.

இன்னுமொரு விடயமாக பொது வைத்தியசாலையில் மக்கள் செளக்கிய வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு செல்கின்றபோது அங்கு முறையாக சேவைகள் கிடைக்காத போது மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் அவனால் திருப்தியடைய முடியாத நிலை தோன்றும். இங்கு நுகர்வோர் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

2. நுகர்வோர் தமது உரிமைகள் பற்றி அறிந்து கொள்ளும் உரிமை: 

மனித உரிமைகளில் தகவல் பெற்றுக்கொள்வதற்கான உரிமை முக்கிய இடம் பெறுகின்றது. இந்தியா உட்பட பல நாடுகளில் தகவல் பெறுவதற்கான உரிமைகள் சட்டமாக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் தொடர்பாக இவ்வுரிமையைத் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது ஏற்கனவே குறிப்பிட்டது போல சந்தையில் போலியான மக்களை ஏமாற்றக்கூடிய வகையில் பல பொருட்கள், சேவைகள் கிடைக்கின்றன. எனவே, சரியானவற்றைத் தெரிந்து கொள்வதற்கான உரிமை நுகர்வோரிடம் இருக்கின்றது. நுகர்வோரை கவரக்கூடிய வகையில் பல விதமான விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள், பிழையான கூற்றுக்கள் என்பன வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே, நுகர்வோர் உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஊட்டல் அவசியமாகும். இதற்காக பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களும் ஏனைய அரச சார்பற்ற சமூக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் ஊடாக மக்கள் தம்முடையஉரிமைகள் பற்றி அறிந்துகொள்ள ஆவண செய்ய வேண்டிய கடப்பாடு எம்மிடத்தில் உண்டு.

3. பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை: நியாயமான விலையில் தமக்குத் தேவையான பொருட்களையும் இலகுவாகச் சென்று பெற்றுக்கொள்ளக்கூடிய உரிமை உண்டு.

4. பாதுகாப்பான பொருட்களை சேவைகளைப்பெறும் உரிமை: 

விலைகொடுத்து வாங்கும் பொருட்கள் நல்ல நிலையில் உதாரணமாகபழுதடைந்த பொருட்கள், நச்சுத்தன்மையடைந்த பொருட்களை பெறாது உடலுக்கு ஏற்றபொருட்களைப் பெறும் உரிமை நுகர்வோருக்கு உண்டு.

5. பாதிப்படைந்த நுகர்வோருடைய குறைகளைக்கூறி பரிகாரம் பெறக்கூடிய உரிமை: 

நுகர்வோர் நலன்கருதி பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் தமக்கு ஏற்பட்ட அநீதியைஉடனடியாக அவ் விடத்திலேயே கடை உரிமையாளரிடம் கூறி, அதற்குரிய பரிகாரம் பெறஉரித்துடையவர். அவ்வாறு அல்லாத போது வேறு நிறுவன ரீதியான பரி காரங்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுண்டு.

6. நுகர்வோர் உரிமைக்கான கல்வியைப் பெறும் உரிமை:

நுகர்வோர் உரிமைகள் தொடர்பாக அடிப்படை விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை நுகர்வோருக்கு உண்டு.

இலங்கையில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டம்

ஏற்கனவே இருந்து வந்த 1979ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்டதிற்குப் பதிலாக இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பொருட்கள் என்பது, உணவு, குடி பானம், மருந்துப் பொருட்கள்,எண்ணெய் (பெற்றோல், டீசல்) போன்றவையாகும். சேவை என்பது, ‘வங்கி, காப்புறுதி, நிதி மற்றும் விநோத சேவைகள் உள் ளடக்குகின்றது. மேலும் இச்சேவை என்பதன் கீழ் தொழில்சார் ரீதியான சேவைகளான வைத்திய சேவை, சட்டத் தரணிகள்,கணக்காய்வாளர், கணக்காளர், பொறியியலாளர்,சட்ட மற்றும் நில அளவையாளர் போன்றவையும்உள்ளடக்கப்படுகின்றது.

எனவே மேலே கூறப்பட்ட பொருட்கள் அல்லதுசேவைகளை பணம் கொடுத்துப் பெறும் நாம் அப்பொருட்கள் அல்லது சேவைகளின் குறைபாடு காரணமாக பாதிப்படையும் போது இச்சட்டத்தின் கீழுள்ள பரிகாரங்களைப் பெறலாம்.

(அ) நுகர்வோரின் கடப்பாடுகள்

நுகர்வோருடைய கடப்பாடுகள் எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள கடப்பாடுகள் அல்லது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுதல் வேண்டும். அவ்வகையில் முதலாவதாக நாம் அனைவரும் கடைகள், சந்தை, சிறப்பு அங்காடி போன்ற இடங் களில் பொருட்களை வாங்கச்செல்லும் போது அப்பொருட்களுக்குரிய ஆகக்கூடிய சில்லறை விலையைப் பார்ப்பது அத்தி யாவசியமான கடமையாகும்.

ஆகக்கூடிய விலையைவிட அதிகமாகக் குறிப்பிடப் பட்டிருந்தால் போனால் போகட்டும் என்று அசட்டையாக நாம் இருக்கக் கூடாது.

கடை உரிமையாளர் அல்லது விற்பனை முகவரிடம் அவ்விலையைப் பற்றி விசாரிக்க வேண்டும். இது நுகர்வோர் ஒவ்வொருவருடைய பிரதான கடமையாகும். சில வேளைகளில் வேலைப்பழு காரணமாக அவசரமாக பொருட்களை வாங்கச் செல் லும் போது கால நேரத்தை வீணடிப்பது அவசியமற்றது எனக் கருதி நம்மில் சிலர் எவ்வளவு விலையானாலும் கொடுத்துவிட்டு வருவது வழக்கமாகும்.

இங்கு இரண்டு விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும். முதலாவது நமது கடமையைச் சரியாகச் செய்யத் தவறுகிறோம், இரண்டாவது வியாபாரிகள் மோசடியான செயல்களை ஈடுபட மறைமுகமாகஊக்குவிக்கின்றோம்.

(ஆ) காலாவதியாகும் திகதியை அவதானித்தல்

பொருட்களை வாங்கும் போது உற்பத்தி செய்யப்பட்ட திகதியையும், காலாவதியாகும் திகதியையும் அவதானிப்பது அசியமாகும். சில வியாபாரிகள் காலாவதியான பொரு ட்களை விற்று மக்களை ஏமாற்றும் நட டிவக்கையில் ஈடுபடுவர். வீட்டுக்குஎடுத்துச் சென்ற பின்பு திகதியை பார்ப்பதில் பிர§¡யசனமில்லை. பொருட்களைவாங்குமிடத்திலேயே அதனைக் கவனித்து அதன் விளைவாக ஏற்படக்கூடிய அபாயங்களைத்தவிர்த்துக் கொள்வது நல்லது.

(இ) பொருட்களின் உத்தரவாதத்தை அவதானித்தல்

சில பொருட்களை வாங்கும் போது இரண்டு வருடம் அல்லது ஒரு வருட கால உத்தரவாதம் வழங்கப்படும். அக்காலப்பகுதியில் பொருட்களில் ஏற்படக்கூடியபிரச்சினைகளைத் திருத்தி தரக்கூடிய வாய்ப்புக்களை வியாபார நிலையங்கள் வழங்கும்.

உதாரணமாக தையல் இயந்திரம், தொலைக்காட்சி,வானொலி போன்ற இலத்திரனியல் சாதனங்களை வாங்கும் போது குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படும். அதனை உரிய முறையில் பார்த்து வாங்குவது நுகர்வோரின்கடமையாகும்.

(ஈ) விலைப்பட்டியல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அவதானித்தல்

ஒவ்வொரு வியாபார நிலையமும் தமது வியாபார நிலையத்தில் பொருட்களின் விலைப்பட்டியலைக் காட்சிக்கு வைத்தல் சட்டத்தால் அத்தியாவசியப்படுத்தப்பட்டுள்ள விடயமாகும். எனவே, கடைகளில் விலைப்பட்டியல் இல்லாத போது அதனைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டிய கடப்பாடு நுகர்வோருக்கு இருக்கின்ற அதேவேளை, அது உரிமையும் ஒன்றாகும். கடை உரிமையாளர் அல்லது விற்பனைப் பிரதிநிதி அதற்குரிய விளக்கத்தை அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்.

(உ) நுகர்வோர் தமக்கு ஏற்படும் அநீதிகளை முறையிடுதல்

மேலே உள்ள கடமைகளை நிறைவேற்றும் அதேசமயம், உடடினயாக கடை உரிமையா ளரால்அல்லது விற்பனைப் பிரதிநிதியால் சரியான நியாயமான பரிகாரம் ஒன்று எட்ட முடியாத போது நுகர்வோர் தமக்கு இழப்புக்களை உரிய இடத்தில் முறையிடுவது அவசியமாகும். இதற்குரிய நிறுவன ரீதியான பரிகாரங்களைப் பின்பு விரிவாகப்பார்ப்போம்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதான இலக்குகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

(அ) நுகர்வோரின் வாழ்க்கைக்கு உகந்ததல்லாத பொருட்கள் சேவைகளை சந்தைப்படுத்துவதில் இருந்து தடை செய்தல்.

(ஆ) நியாயமற்ற வியாபார நடைமுறைகளை வியாபாரிகள் அமுல்படுத்தி அதன் மூலம் நுகர்வோர் அடையக்கூடிய தீமைகளை தடை செய்தல்.

(இ) தமக்குரிய இயலுமான விலையைக் கொடுத்து சந்தையிலிருந்து பொருட்கள் சேவைகைளைப் பெற்றுக் கொள்ள வழி வகை செய்தல். சந்தையில் தமது வாழ்க் கைக்குத் தேவையான பல பொருட்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலைகளில் காணப்படுகின்றன.

எல்லோரா லும் அதிக விலை கொடுத்து பொருட்கள்சேவைகளைப் பெற்றுக் கொள்ள இயலாது. அதற்குரிய காரணம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளேயாகும். எனவே, உயிர் வாழ் வதற்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களையும் வாழ்க்கையை மேம் படுத்திக் கொள்ளத் தேவையான ஏனைய சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டியது அரசின் கடப்பாடு என்ற வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த இலக்கை எட்ட முயற்சி எடுத்து வருகின்றது.

(ஈ) தமது கடமைகளை, இலக்குகளை சரிவரச் செய்தலும், சில வேளைகளில் வியாபாரிகள் சட்டத்தை மீறி, சட்டத்திற்கு முரணாக நியாயமற்ற பொருட்களை விற் பனை செய்தல், அத்தியாவசியப் பொருட் களைப் பதுக்கி வைத்தல், போன்றவற்றின்மூலம் நுகர்வோர் சுரண்டப்படுகின்ற போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நுகர்வோர் விவகார சபை பரிகாரம் பெற்றுத்தரும் இலக்கையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

(உ) போட்டி ரீதியான சந்தையை ஊக்குவித்தல்.

(ஊ) நுகர்வோர் கல்வியூட்டல்


நுகர்வோர் விவகார அதிகார சபை கட்டமைப்பு

1. நுகர்வோர் விவகார அதிகார சபை

2. நுகர்வோர் விவகார மேன்முறையீட்டு கவுன்சில்


நுகர்வோரின் முறைப்பாடுகள்

நுகர்வோர் தாம் விலை கொடுத்து வாங்கிய பொருட்கள் அல்லது சேவை களுடைய உற்பத்தி தரம், விநியோகம் செய்யும் முறைகள், பொருட்களை பொதி செய்தல் முறை, பொருட்களின் பக்கட்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதி யாகும்திகதிகளை குறிப்பிடாமை, நிறை குறைந்த பொருட்களை விற்பனை செய் தல் என்பனதொடர்பில் நுகர்வோர் விவகார சபைக்கு முறைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். பின்வரும் முகவரிக்கு முறைப்பாட்டை அனுப்பி வைத்தல் வேண்டும்.

இயக்குநர் நுகர்வோர் விவகார சபை
இல. 27, வொக்ஷோல் வீதி,கொழும்பு 2

முறைப்பாட்டை மேற்கொள்ளும் போது யாருக்கு எதிராக செய்யப்படுகின் றதோ உதாரணம், ஒரு கடையெனின் அந்தக் கடையினுடைய பெயர்,விலாசம் மற்றும் தமக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பனவற்றைச் சரிவரக் குறிப்பிட வேண்டியது அவசிய மாகும். மேலும் முறைப்பாட்டை மேற்கொள்பவர் முழு விபரங்களையும் தெளிவாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

நுகர்வோருடைய இலகுவான அணுகல் கருதி நுகரல்வோர் அதிகார சபை ஒவ்வோர் மாவட்டத்திலும் மாவட்ட காரியாலயங்களை தாபித்துள்ளது.

(District Office) கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு வரும் சிரமத்தைத் தவிர்த்து இந்த மாவட்ட அலுவலகங்களில் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம். இங்கு கடமையாற்றும் அலுவலர்‘மாவட்ட குறைகேள் அதிகாரி’ என அழைக்கப்படுவர்.

ஒவ்வொரு மாவட்ட அலுவலகமும் மூன்று அலுவலர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் மாவட்ட அலுவலர்களுக்கு முறைப்பாட்டை சமரசம் செய்துவைப்பவர்களாக தொழிற்படுகின்றனர். முறைப்பாட்டாளரும், வியாபாரி அல்லது யாருக்கு எதிராக முறைப்பாடு செய் யப்பட்டதோ அவரும்,தமது பிரச்சினையை சுமுகமாக அவ்விடத்திலேயே தீர்த்துக் கொள்ள முடியும்.

நுகர்வோர் விவகார சபைக்கு முறைப்பாடாக அன்றி தமது அறிவுக்கு எட்டும் வகையில் ஏதோ ஒருஇடத்தில் நுகர்வோர் அதிகார சபைச் சட்டம் மீறப்படுகின்றது என அறிந்து கொள்ளும் போது விசாரணை மேற்கொள்ளப்படலாம்.



நிஜமான என்கவுன்டர் - நீங்களும் நிகழ்த்தலாம்.!!

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும்வாடிக்கையான நிகழ்ச்சிகள்.

ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலைசெய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்குப் பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.

வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் நாம் பலஅனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதைப் பார்த்தும்பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது. ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள்தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும்பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE DEFENCE)என்று சட்டம் அங்கிகரிக்கிறது. இந்த உரிமையைப்பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும்அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத் தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE)பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமைகுறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: 
தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும் எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: 
முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ளஉரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சிசெய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு. இந்த பிரிவின்படி நமக்கோ,நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ - உடலுக்கோ, உடைமைக்கோ,பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

பிரிவு 98: 
இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும்,அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.

அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ,மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின்ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும்பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.

பிரிவு 99: 
1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-

(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது...

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சிசெய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின்உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப்பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.

2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால் -

(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.

3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிடஅதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது. காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மைக் கைது செய்தால் அது நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்தச் செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும். ஆனால் அந்த கைது சட்டப்படி அமையவேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும்,அவர் சட்டரீதியான நடவடிக்கையேமேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும்புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில்தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும். வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ,துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.

பிரிவு 100: 
உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.

1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,

2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,

3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,

4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,

5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,

6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,

மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.

பிரிவு 102: 
உடலுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே,உடலைப் பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரைதற்காப்பு உரிமையும் நீடிக்கும். எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாகவிழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்கமுடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ,இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத் தெரியும்போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின்போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போதுதயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

பிரிவு 106: 
மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னைதற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது. தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கிதுப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர்.துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல. இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக் கண்டு தப்பியோடும்போது அவரைப் பிடித்து தாக்கக்கூடாது.

நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்கமுயற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்து வைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.

பிரிவு 97 (2): 
தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு,கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

பிரிவு 103: 
கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம்செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ,கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது.

பிரிவு 104: 
பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும்,அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.

பிரிவு 105:
சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.

திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்துதொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.

பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது. இவ்வாறுகட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை,கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களைஅனுமதிக்கிறோம்.

பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்ததற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறைஅதிகாரிகள்தான். பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்தரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடிகாவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும்,நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.

இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள் உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும் தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் உருவாவதையும் தடுக்க முடியும்.