தவறான சட்டப் பிரிவை போட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதற்காக அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ய முடியுமா?
நடைமுறைகள் அல்லது விதிகள் (The Procedures or Rules) என்பவை நீதிப் பரிபாலனம் செய்வதற்கு உதவி செய்கிற உதவியாளர்களே தவிர நீதி பரிபாலணத்தின் எஜமானர்கள் அல்ல என உச்சநீதிமன்றம் "ஜெனரல் இன்ஸ்ட்ரூமென்ட் கம்பெனி Vs மத்திய அரசு (2008-2-SCC-775)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. எப்பொழுதெல்லாம் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மனுவை பெறுகிற பிரிவில், இந்த மனு எந்தப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படுகிறது என்கிற வினா தவறாமல் கேட்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது. எந்தச் சட்டப் பிரிவு அல்லது நிபந்தனையின்படி அந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடப்பட்டிருந்தால் தான் அந்த வழக்கிற்கு அது ஒரு கலங்கரை விளக்கு போல் வழிகாட்டும் என்பது போல் அந்த கேள்வி கேட்கப்படுகிறது.
அதேபோல் ஒரு மனு திருப்பப்படுகின்ற பொழுது அந்த மனுவை தாக்கல் செய்தவர்கள் தரப்பில் எந்த சட்டப் பிரிவின் கீழ் இந்த மனு திருப்பப்படுகிறது என்கிற கேள்வியும் தவறாமல் கேட்கப்படுகிறது. இதுபோல் ஒரு மனு திருப்பப்படுவதும், திரும்ப தாக்கல் செய்யப்படுவதும் போன்ற நடவடிக்கைகளால் வழக்காடிகளின் நேரமும், சக்தியும் விரையமாக்கப்படுகிறது. நீதிமன்றம் ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு பதிலாக வேறு மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை ஊக்குவிப்பதாக இச்செயல் அமைகிறது.
எப்பொழுதெல்லாம் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த மனுவை ஏற்றுக்கொள்வதற்கு சட்டப்படி முடியுமா என்கிற வினா நீதிமன்றத்தின் மனதில் எழுகிறது.
நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குள் ஒரு உத்தரவு அளிப்பதற்கு தடை எதுவும் இல்லாத நிலையில், ஒரு நீதிமன்றத்தில் ஒரு உத்தரவினை பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்தால் எந்த தடையும் இல்லாதிருக்கும் போது அதுகுறித்து தெளிவான நிலை இல்லாதபோதும், அத்தகைய உத்தரவு நீதியின் பால் அல்லது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக ஒரு நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என " ராஜ் நாராயண் சக்சேனா Vs வின்சென்ட் மற்றும் பலர் (AIR-1966-ALL-84)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு " நர்சிங் தாஸ் Vs மங்கல் துபே (1882-ILR-5-ALL-163-FB) என்ற வழக்கில், நீதிமன்றங்கள் உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்படாத ஒரு விஷயம் தடை செய்யப்பட்டதாக கருதக்கூடாது. ஆனால் சட்டத்தின் படி தடை செய்யப்படாத வரை அந்த நெறிமுறை அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று கருத வேண்டும். பொதுவான நெறிமுறை என்னவென்றால் தடை செய்யப்பட்டுள்ளது என அனுமானிக்கக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் " சாமா பட்டர் Vs அப்துல் கதிர் ரவுத்தன்" என்ற வழக்கில், உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் ஒரு விஷயம் குறித்து தெளிவாக, விவரமாக கூறப்படாத நிலையில் நீதிமன்றங்கள் நீதியின் பால் அல்லது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக எந்த வகையான உத்தரவுகளையும் பிறப்பிக்கலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
மேலே சொல்லப்பட்ட தீர்ப்புகளில் ஒவ்வொரு நடைமுறையும் அனுமதிக்கப்பட்ட ஒன்று என கருத வேண்டுமேயொழிய தடை செய்யப்பட்டவை என்று கருதக்கூடாது எனவும், தடை செய்யப்பட்டுள்ளது என்று அனுமானிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. நடைமுறைகள் என்பவற்றை பொதுவான வழிகாட்டும் முறைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமேயொழிய வழக்காடிகளின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அவற்றை பயன்படுத்தக்கூடாது. நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்கை, ஒரு முறையை ஏற்படுத்தியிருப்பது நீதிமன்றம் வழக்குகளை எளிதாக நடத்துவதற்கு உதவுகிற நோக்கத்தில் தானேயொழிய வழக்காடிகளுக்குள்ள உரிமைகளை தடுப்பதற்கான நோக்கத்தில் அல்ல.
எனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தவறான சட்டப் பிரிவுகளின் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது. ஒரு மனுவில் தவறான சட்டப் பிரிவு குறிப்பிடப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் சரியான சட்டப் பிரிவை குறிப்பிட்டு அந்த மனுவை விசாரித்து தீர்மானிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 30/2012,
சஹார்பந்த்பீவி Vs S. மும்தாஜ்
2013-2-CTC-394