⚫ *எனது தற்கொலைக்கு இவர்தான் காரணம் என்று கூறி ஒருவர் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபருக்கு தண்டனை அளிக்கமுடியுமா?*
▪ *மணிகண்டன் என்பவரும் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்.*
▪ சில நாட்களில் மணிகண்டனின் காதல் மீது ரேகாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
▪அதனால் ரேகா, மணிகண்டனை தவிர்த்து வந்துள்ளார்.
▪இந்நிலையில் 9.12.2011 ஆம் தேதி ரேகா தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
▪அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
▪ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மறுநாள் இறந்து விட்டார். உடனடியாக ரேகாவின் தந்தை ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 ன் கீழ் "சந்தேக மரணம்" என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கை இன்ஸ்பெக்டர் விசாரித்து சம்பவ இடத்தில் பிளாஸ்டிக் கேன் மற்றும் சில முக்கிய பொருட்களை கைப்பற்றினார். ரேகாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அந்த அறிக்கையையும், மருத்துவர்களின் வாக்குமூலங்களையும் பெற்றார். இந்நிலையில் ரேகாவின் தந்தை தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது பெண் ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார் என்று கூறி ஒரு கடிதத்தை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அதனை பரிசீலித்த இன்ஸ்பெக்டர் சட்டப்பிரிவை மாற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழ் FIR பதிவு செய்தார். மேலும் ரேகாவின் கையெழுத்துகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை பெற்று அவைகளை கடிதத்துடன் ஒப்பிட்டு பார்க்க கையெழுத்து நிபுணருக்கு அனுப்பி வைத்தார். அவைகளை பரிசோதித்த கையெழுத்து நிபுணர் கடிதத்தில் உள்ள கையெழுத்து ரேகாவுடையதுதான் என்று ஒரு அறிக்கையை இன்ஸ்பெக்டரிடம் அளித்தார். இறுதியாக மணிகண்டன் ரேகாவை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டு இறுதியறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின் போது ரேகாவின் தந்தை, தாய், சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர். அவர்கள் ரேகா வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் சாட்சி கூறினர். ஆனாலும் அரசு ரேகா எழுதிய கடிதத்தை முக்கிய ஆதாரமாக வைத்து வாதாடியது.
இறுதியாக விசாரணை நீதிமன்றம் ரேகாவின் கடிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பை எதிர்த்து மணிகண்டன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. P. தேவதாஸ் விசாரித்தார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ஆனது தற்கொலைக்கு உடந்தையாக இருக்கிற எவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் இந்த சட்டப் பிரிவின் கீழ் ஒருவருக்கு தண்டனை அளிப்பதற்கு முன்பாக கீழ்கண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
1. ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்
2. தற்கொலைக்கு ஒருவர் உடந்தையாக இருக்க வேண்டும்
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 107 ல் உடந்தையாக இருத்தல் என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரிவு 306 ல் உடந்தைக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை.
"உடந்தையாயிருத்தல் " என்கிற குற்றச் செயலில் ஈடுபட்டதற்கு குற்றமனம் இருக்க வேண்டும். மற்றொருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு, அந்த செயலை செய்வதற்கு உடந்தையாக இருக்க வேண்டும். பொதுவாக பேச்சுவாக்கில் கூறப்படும் வார்த்தைகளையும், உடந்தையாயிருத்தல் என்கிற பொருளில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொள்கிற நபர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதத்தில் ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிற காரணத்தால் அந்த நபர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்கிற முடிவிற்கு உடனடியாக வந்து விடக் கூடாது.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளவற்றையும் அந்த சம்பவம் நடைபெற்றுள்ள சூழ்நிலைகளையும் ஒப்பிட்டு பார்த்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 மற்றும் பிரிவு 107 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவாறு "உடந்தையாயிருத்தல் " என்கிற செயல் நடைபெற்றுள்ளதா? என்பதை ஆராய வேண்டும். தான் தற்கொலை செய்து கொள்வதற்கு இவர்தான் காரணமாய் இருந்தார் என்று தற்கொலை செய்து கொண்டவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த வழக்கை முறையாக ஆராய்ந்து பார்த்தால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழான குற்றச் செயல் நடைபெற்றிருப்பதாக முடிவு செய்ய இயலாது.
சென்னை உயர்நீதிமன்றம் " இராஜமன்னார் Vs ஆய்வாளர், செவ்வாய் பேட்டை காவல் நிலையம், திருவள்ளூர் மாவட்டம் (CRL. OP. NO - 8230/2014 என்ற வழக்கில் 3.4.2014 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 ன் கீழான குற்றச் செயலுக்கு இரண்டு காரணிகள் இருக்க வேண்டும். அவை தற்கொலைக்கு உடந்தையாக ஒருவர் இருந்திருக்க வேண்டும். ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும். தற்கொலை என்றால் என்ன என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் "உடந்தையாயிருத்தல்" குறித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நபரை சில செயல்களை செய்யும்படியோ அல்லது செய்யாமல் இருக்கும்படியோ தூண்டி விடுவதுதான் உடந்தையாயிருத்தல் என்பதற்கான விளக்கம் ஆகும். அவ்வாறு ஒருவரை தூண்டி விடும் செயலானது வார்த்தைகள், செயல்கள் அல்லது எழுத்துக்கள் மூலமாகவும் இருக்கலாம். மற்றவர்கள் முன்பு ஒருவரை அவமானப்படுத்தியதாகவும் கூட இருக்கலாம். எனவே ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான முடிவினை எடுப்பதற்கு எதிரி முக்கிய பங்கை ஆற்றியிருக்க வேண்டும்.
காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வது, பரிட்சை சரியாக எழுதாததால் தற்கொலை செய்து கொள்வது, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் கட்சிக்காரர தற்கொலை செய்து கொள்வது போன்ற தற்கொலை சம்பவங்களில் காதலித்த பெண், தேர்வாளர், வழக்கறிஞர் போன்ற நபர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உடந்தையாக இருந்ததாக கருத முடியாது. ஒரு நபர் கோழைத்தனமாக, முட்டாள்தனமாக, பலவீனமான மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டால் அதற்காக மற்றொரு நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்த முடியாது. என்று தீர்ப்பு கூறியுள்ளது.
இறந்து போன ரேகாவுக்கும், மணிகண்டனுக்கும் இடையில் காதல் பிரச்சினை இருந்துள்ளது. அந்த காதல் ஒருதலை காதலாகும். மணிகண்டன் ரேகா மீது ஏற்பட்ட காதலை புதுப்பித்துக் கொள்வதற்காக தொடர்ந்து போன் செய்துள்ளார். ரேகாவை நிம்மதியாக மணிகண்டன் வாழ விட மாட்டார் என்று கருதி வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்ததாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த முடிவை தான் எடுக்க மணிகண்டன் தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஒரு குற்றம் இல்லை. ஆனால் தற்கொலைக்கு தூண்டுவது பிரிவு 306 ன்படி குற்றமாகும். ஆனால் தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல் என்ற செயலை நிரூபிக்க தற்கொலை நடந்திருக்க வேண்டும். மேலும் அந்த தற்கொலைக்கு எதிரி உடந்தையாக இருந்ததாகவும் நிரூபிக்க வேண்டும். தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை செய்து கொண்ட நபரின் விருப்பமாக இல்லாமல், அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது எதிரியின் விருப்பமாக இருக்க வேண்டும். ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு எதிரி செயல்பட்டிருக்க வேண்டும். அந்த செயல் வார்த்தைகளாகவோ, கடிதம் மூலமாகவோ நடைபெற்றிருக்கலாம். அதேசமயம் மிகவும் பலவீனமான மனநிலை கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதனை அவர் தூண்டி விட்டதாக கருதுவது தவறு. ஒருவருடைய முட்டாள்தனமான செயலுக்காக மற்றொரு நபரை பொறுப்பாளியாக ஆக்க முடியாது.
இதே கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் " மணி Vs ஆய்வாளர், கிண்டி காவல் நிலையம், சென்னை (2014-3-MLJ-CRL-18)" என்ற வழக்கில் தீர்ப்பாக கூறியுள்ளது.
மேற்கண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் ரேகா எழுதிய கடிதத்தை உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட மணிகண்டன் ரேகா தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டும் என்று நினைக்கவில்லை, அவருக்கு குற்ற மனம் இல்லை எனவே மணிகண்டனை தண்டிக்க முடியாது என்று கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
மதுரை உயர்நீதிமன்றம்
CRL. A. NO - 142/2016
DT - 16.6.2016
Manikandan Vs Inspector, Tirunellakkudi police station, Thanjavur District
2016-4-MLJ-CRL-240
2016-3-CRIMES-143